தேசிய மக்கள் சக்தியின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்டத்தின் கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.ஆதம்பாவாவுடனான சிறப்பு நேர்காணல்.
கே : – உங்களைப் பற்றி, உங்களின் அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள்?
பதில் – : நான் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவன். சம்மாந்துறையை வசிப்பிடமாக கொண்டிருந்தாலும் ஆசிரியர் பணி மூலம் முழு அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணமெங்கும் கல்வித்துறைசார் உறவுகள், மாணவர்கள் என்னிடம் கல்வி கற்றவர்கள் உள்ளனர். நான் படிக்கின்றபோதே சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவன். இதன் தொடர்ச்சியாகவே எனது ஆசிரியர் பணியோடு இணைந்ததாக சமூக சேவையும் செய்து வந்தேன். இது எனது அரசியல் பிரவேசத்திற்கு ஏணியாக அமைந்தது.
நேர்மையான, ஊழலற்ற மக்கள் பணியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான், இதனால் படிக்கின்ற பல்கலைக்கழக காலம் தொட்டு தோழர்களுடன் இணைந்து நான் செயற்பட்டேன். அதனாலேயே தேசிய மக்கள் சக்தி உடன் செயற்பட கிடைத்தது.
கே: தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பாக கூறுங்கள் ?
பதில் – : சமூக நீதியை நிலைநாட்டுவதே எங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்குகின்ற சமுதாயத்தை உருவாக்குவதை நாங்கள் நோக்காகக் கருதுகிறோம்.
வர்க்கம், இனம், மதம், மொழி, சாதி, இருப்பிடம் அல்லது பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனும் நிறைவான வாழ்க்கையை வாழவும், சமமான நிலையில் சமூகத்தில் பங்கேற்கவும் கூடிய சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும்.
தேசிய மக்கள் சக்தி இலங்கையை உலகின் விருத்தியடைந்த ஒரு நாடாக உயர்த்தி வைக்கவும் மக்களுக்கு அபிமானமும் மகிழ்ச்சியும்கொண்ட வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுக்கவும் முன்னேற்றமடைந்த விஞ்ஞானரீதியான கொள்கைத் தொடரொன்றை அமுலாக்கும் பொருட்டு அர்ப்பணிக்கின்ற ஊழலற்ற மனிதக் குழுமத்தை உருவாக்கும் அரசியல் சக்தியாகும்.
கே : ேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : – எமது கொள்கைக்கும் பொறுமைக்கும் மற்றும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசுதான் இது என நான் நினைக்கின்றேன். முதலில் படைத்தவனுக்கும் அடுத்ததாக, எமக்கு வாக்களித்த திகாமடுள்ள மாவட்ட மக்களுக்கும் மிகப் பெரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட காலமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்துடன், இறுதியில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்டேன். பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் நாங்கள் ஒரு கூட்டுப் பொறுப்புடன் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தோம்.
மக்களுடைய எதிர்பார்ப்பு, கல்முனை பிரதேசத்தினுடைய தேவைகள் என்பன மிகவும் நீண்டகாலமாக பூரணமாக நிறைவேற்றப்படாமை பிரதேச அரசியல்வாதிகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளின் விளைவாகும்.
இதனால் ஒலுவில் துறைமுகம் சாத்தியமற்றுப்போனது. கிழக்கின் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கிய கல்முனை மாநகரம் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு உயிரிழப்புக்கள், உடமை இழப்புகளை மக்கள் சந்தித்துள்ளார்கள். இதற்கான முறையான வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் பல்வேறு மாயைகளை அரசியல் அரங்கிலே கொண்டு வந்து, அதனூடாக மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்களே தவிர, ஈற்றில் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நிலைமைதான் தொடர்கதையாக காணப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அரசியல்வாதிகளில் மக்கள் கொண்ட அதிருப்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்தியில் இலங்கை மக்கள் பெரும்பான்மையினர் இன்று ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த மக்களுடைய முழு எதிர்பார்ப்பையும் எதிர்காலங்களிலே நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றது.
ஒரு தேசத்து மக்கள் என்கிற உணர்வோடு, எதிர்காலத்திலே செயல்படுவதற்கான அத்தனை வேலை திட்டங்களும் தேசிய மக்கள் சக்தி ஊடாக நிறைவேற்றப்படும். அதற்காக எனக்கு கிடைத்த பலத்தை மிகச் சிறப்பாக நான் பயன்படுத்துவேன்.
அம்பாறை மாவட்ட மக்களினுடைய உட்கட்டுமான தேவைகள், கிடப்பில் உள்ள பல்வேறு வேலைத் திட்டங்களை இயலுமானவரை நிறைவேற்ற வேண்டும். அதற்கான சகல ஏற்பாடுகளையும் நான் எமது அரசாங்க துறைசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயற்படுத்த முயற்சிப்பேன். நாம் சுமந்துள்ள பொறுப்பு மக்களின் சேவைக்காக பூரணமாக பயன்படுத்தப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
கே : அம்பாறை மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரான நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். அம்பாறை மாவட்டத்திலே பல்வேறு பிரச்சினைகள், நிறைவேறாத அபிவிருத்திப் பணிகள் காணப்படுகின்றன. இப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கவுள்ளீர்கள் ?
பதில் -: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் ஊடாக உணவு, பண்டங்களின் விலைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள் மற்றும் மேலதிகமாக எமது திட்டங்களை துறை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து நிதிகளைப் பெறுகின்ற வழிகளை கண்டறிய வேண்டும். அதனூடாக பல புதிய செயல் திட்டங்களை எனது பிரதேசங்களில் அமல்படுத்த முடியும். இதற்காக அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான முஸ்தீபுகளை மேற்கொள்வேன்.
கே : கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மக்களை வாட்டுகிறது. உங்களது அரசாங்கத்தில் இதனை நிவர்த்திக்க என்ன வேலைத் திட்டங்கள் இடம்பெறும்?
பதில் -: – முன்னைய அரசாங்கங்களுக்கு இருந்தது போன்று பல்வேறு சவால்கள் இக்கால கட்டத்தில் எமக்கும் இருக்கின்றது. அதனை சர்வதேச உறவு, நிதி திரட்டல்கள் மற்றும் செயல்திட்டங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தி அதனுடாக மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வேலைத் திட்டங்களை எதிர்வருகின்ற காலங்களிலே எமது அரசாங்கம் நிச்சயமாக முன்னெடுக்கும்.
எடுத்த எடுப்பிலேயே முழுமையாக நாட்டை கட்டி எழுப்புவது என்பது பெரும் சவாலான விடயம். முன்னைய ஆட்சியாளர்கள் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களை செய்ததன் விளைவும் நிதிக் கையாடல்களும் ஊழலும் மோசடிகளுமே இன்று எமது நாடு மற்றும் நாட்டு மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு காரணம். பல்வேறு சவால்களுடனே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கின்றது.
மிகக் குறுகிய காலத்துக்குள் அதனை படிப்படியாக நீக்கி, நாட்டில் பொருளாதார மேம்பாடு ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கைச் சுமைகள் குறைக்கப்படும். மக்கள் அச்சப்பட தேவையில்லை.
பாரிய சிக்கல்களுடன் தான் நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுகின்ற பொறுப்பு எமக்கு மட்டுமல்ல, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒரே நாடு என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து, விழுந்துள்ள பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டி எழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
கே : தற்போதைய அமைச்சரவையிலே அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை என்கின்ற குற்றச்சாட்டு முஸ்லிம் தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : – அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் இருந்தால் என்ன ? அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இருந்தால் என்ன? சகல மக்களும் இலங்கையர்கள் என்ற மாற்றத்தோடு பயணிக்கின்ற எமது அரசாங்கத்தில் எந்த சாதி, மத வேறுபாடுகளும் கிடையாது.
மக்கள் இது பற்றி ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். இனரீதியான அடக்குமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இடமிருக்காது.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கின்ற 225 உறுப்பினர்களும் இந்த நாட்டினுடைய மக்களின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, முஸ்லிம்கள் நாம் அச்சப்படத் தேவையில்லை.
கே : பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் அந்த வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி கூறுங்கள் ?
பதில் : கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல்; மோசடிகள் சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்டால் அதற்கான சட்ட நடவடிக்கைகள், தண்டனைகள் உரியவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
இது தொடர்பில் அரசாங்கத்தால் மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்த வண்ணமுள்ளன.
அது போன்று பொருளாதார நெருக்கடியான சூழலில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்கிற முனைப்புடன் நாம் செயல்பட்டு வருகின்றோம். ஆனால், எடுத்த மாத்திரத்திலேயே சவால்களை வெற்றிகொள்ள முடியாது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலமே ஆகின்றது.
எனவே, சகல வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படுவதுடன், எமது ஜனாதிபதி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கூடியவர் என்பது அவருடன் நெருங்கி பழகுகின்ற எங்களுக்கு நன்கு தெரியும்.
சிலர் நினைத்த விடையங்கள் நடக்கவில்லை என்ற வேதனையில், எம்மையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கின்றனர். இதற்கு மக்கள் ஏமாந்து விடாது பொறுமையுடன் இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நிறைவேறும்.
நேர்காணல் - எஸ்.அஷ்ரப்கான்