2025 ஆம் ஆண்டு முதல் ‘உண்மையான வடக்கின் வசந்தம்’ வடமாகாணத்துக்கு வீசுமென கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் (13) நடைபெற்றபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பாக பேசப்பட்டது. வெள்ள அனர்த்தங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன் மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டுள்ளது.
அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும். வடமாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்காகும்.
விசேடமாக கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவுள்ளோம். கடந்த கால குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவோமென அவர் மேலும் தெரிவித்தார்.