2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நேற்று 14 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது.
இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாதமலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெளியேற்றுவதற்கும், சிவனொளிபாதமலை வனப்பிரதேசத்தில் எந்தவொரு காரணத்துக்காகவும் தீ பிடிக்கும் வகையில் செயற்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிவனொளிபாதமலை யாத்திரை காலம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹட்டன் வழியாக பக்தர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவனொளி பாதமலையின் ஹட்டன் பாதை, ஹட்டன் புகையிரத நிலையம், நல்லதண்ணி ஆகிய இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், சிவனொளி பாதமலைக்கு போதைப்பொருள் எடுத்துச்செல்பவர்கள் தொடர்பாக ஆராய, பொலிஸ் நாய்கள் திணைக்களம் மலை உச்சியிலிருந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர்