முஸ்லிம் மக்களை மையப்படுத்தி பல அரசியல் கட்சிகள் செயற்பாட்டில் இருந்தாலும், அம்மக்களின் தாய்க் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே ஆகும். அக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், ஏறாவூர்பற்று நகரசபையின் முன்னாள் தவிசாளரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.நழீம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி
கேள்வி : உங்களுடைய கட்சியில் பல சிரேஷ்ட தலைவர்கள் இருக்கும் போது உங்களை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த காரணம் என்ன?
பதில் : நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மாணவப் பருவத்திலேயே இணைந்து, பல சமூக சேவைகளை செய்து வந்தேன். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்திலிருந்து என்னுடைய தகப்பனார் அர்ப்பணிப்புடன், எமது ஊரில் செயற்பட்டு வந்தார். எனது தகப்பனாரின் பின்னர் தொடர்ச்சியாக நான் கட்சிக்காக அர்ப்பணிப்பான வேலைகளை முன்னெடுத்து வந்தேன். அது மாத்திரமின்றி கட்சியிலே இருந்த பல முன்னணி தலைவர்களோடும், இணைந்து நான் செயற்பட்டு வந்தேன்.
அவ்வாறு இருந்தும் எமது கட்சியிலிருந்து பலர் விலகி எமது கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற நோக்குடனும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த வேளையிலும்கூட கட்சிக்காகவும் கட்சியினுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இனவாதம், பிரதேசவாதம் இல்லாமல் கட்சித் தலைமை செயற்படுகின்றது. கடந்த முறையும் என்னையும் கட்சியையும் நம்பி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுமார் 11,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கியிருந்தார்கள். எமது கிராமத்தையும் எனது மண்ணையும் எனது கட்சி ஒவ்வொரு காலத்திலும் கௌரவப்படுத்தி இருக்கின்றது. அதேபோன்றுதான் எமது மக்கள் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. அந்த வகையில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தேசிய பட்டியல் ஊடாக வழங்கியிருக்கின்றது. எனக்கு இந்த பதவி வழங்கும் முடிவானது கட்சியில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவே.
கேள்வி : தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மாற்று அணியாகத் திகழ்ந்து அரசியலில் சாதிக்க முடியும் என நினைக்கின்றீர்களா?
பதில் : எதிர்க்கட்சிகள் பலமாக இருப்பதுதான் ஒரு ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும். இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு கிடைத்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளின் செயற்பாடு, இந்த ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தில் தங்கி இருக்கின்றது. ஆகவே ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காகவும் பலமான எதிர்க்கட்சியாகவும், மக்களுக்கு பாதகமான விடயங்களை எதிர்த்தும், அரசாங்கம் கொண்டு வருகின்ற நியாயமான செயற்பாடுகளை மக்களுக்கு பாதகம் இல்லாத செயல்பாடுகளை ஆதரித்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். எமது கட்சியின் தலைமையின் வழிகாட்டுதலின்பேரில் நாம் வெறுமனே எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டு அரசாங்கம் கொண்டு வருகின்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பது எமது நோக்கம் அல்ல.
கேள்வி : முஸ்லிம் மக்கள் மத்தியில் பல அரசியல் தலைவர்கள் செயற்படுகின்ற போதிலும், இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளன. இதுபற்றி என்ன கருதுகின்றீர்கள்?
பதில் : மூன்று இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி எல்லோருமே பேசி முடிவெடுக்கக்கூடிய தன்மையை கடந்தகால ஆட்சியாளர்கள் செய்திருக்கவில்லை. தனித்தனியாக செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. மூன்று இன தலைமைகளும் ஒன்றாக மனம் விட்டு பேசியிருந்தால் தற்போது நமது மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டிருக்கலாம். இதனை அவரவர் இனக் குழும விகிதாசாரத்துக்கு ஏற்றவாறும், சனத்தொகைக்கு ஏற்பவும், தீர்வை கண்டிருக்கலாம். இவை அனைத்தையும் கடந்த கால அரசாங்கங்கள் செய்யத் தவறியிருக்கின்றன. பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இனங்களை மோதவிட்டுக் கொண்டு அதன் மூலமாக விரிசலை ஏற்படுத்தி ஆட்சியை நடத்துவதுதான் கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடாக இருந்தது.
அவ்வாறுதான் அவர்கள் செயற்பட்டிருந்தார்கள். அது போன்றுதான் நாட்டில் ஏற்பட்ட யுத்தம், சுனாமி அனர்த்தம், அதன் பின்னர் ஏற்பட்ட இடர்கள், அரசியல் மாற்றங்கள், போன்ற விடயங்களும் பாதித்துள்ளன. எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு எனது சமூகத்திற்கு என்னால் இயன்ற அனைத்து செயற்திட்டங்களையும் நிறைவேற்ற முன்நின்று உழைப்பதற்காக காத்திருக்கின்றேன்.
கேள்வி : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் முஸ்லிம் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் இன்னும் பலமாக அமையுமல்லவா அது ஏன் முடியாமலுள்ளது?
பதில் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்ரப்பின் தாய்காட்சிதான் எனது கட்சியாகும். கட்சியிலிருந்து அமைச்சுப் பதவிகளுக்காகவும், அந்தந்த காலங்களில் பெரும் சலுகைகளுக்காகவும், எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். அவ்வாறு பிரிந்து சென்றவர்கள் எல்லோரையும் அனுசரித்து ஆதரித்து செயற்படுவோம் என கடந்த காலத்தில் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அவ்வாறானவர்கள் தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்றுதான் செயற்பட்டார்கள். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிப்பதற்காகவே செயல்பட்டார்கள் அதற்காக பல்வேறு முனைப்புகளை செய்திருந்தார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமைத்துவமும் எப்போதுமே கதவுகளை திறந்து வைத்திருக்கின்றது. வெளியில் சென்ற அனைவரையும் உள்வாங்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிப்பதற்காக நாம் தயாராக இருக்கின்றோம். எனவே வெளியே சென்ற அனைவரும் மீண்டும் எமது கட்சிக்கு வந்து இணைந்து செயற்படுவதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் .
கேள்வி : தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவம் தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?
பதில் : உண்மையில் ஒரு நேர்மையான நல்லாட்சி ஏற்படுத்துகின்ற விதமாக இந்த நாட்டினுடைய புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. மக்களுக்காக உண்மையாக செயற்படுவார் என்று தான், இலங்கை மக்கள் அதிக அளவு வாக்குகளை வழங்கி அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள். அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய நல்லாட்சி வழங்கக்கூடிய, ஊழலற்ற ஆட்சியை செயல்படுத்துவார், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயற்படுத்துவார்,
கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஊழல்களை வெளியே கொண்டுவருவார், அதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கின்ற வகையில் அவர் நடந்து கொள்வார், என நாமும் எதிர்பார்க்கின்றோம். அதனையே மக்களும் நம்பி இருக்கின்றார்கள். நான் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்த காலத்தில் அரச வளங்களையோ, சொத்துக்களையோ, அரச வாகனத்தை பயன்படுத்தவில்லை. சம்பளத்தைக்கூட பெறவில்லை. நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்ற செயற்றிட்டங்களை நான் தவிசாளராக இருந்த காலத்தில் அமுல்படுத்தியிருக்கின்றேன். எனவே தற்போதைய ஜனாதிபதி நாட்டுக்காக கொண்டு வந்திருக்கின்ற நல்ல செயற்திட்டங்களை நான் மனதார வரவேற்கிறேன். எனது அதே கொள்கையை தேசிய ரீதியில் ஜனாதிபதி அமுல்படுத்தும்போது நானும் அதே கொள்கையில் பயணிக்கின்றவன் என்ற வகையில் நான் அதனை வரவேற்கிறேன்.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் அருகருகே வாழ்ந்து வருகின்ற போதிலும் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மோதிக்கொள்கின்றார்கள. மாவட்ட மக்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில் : முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் கடந்த காலத்தில் வாழ்ந்த சமூகங்களாகும். கடந்த காலங்களிலே அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒரே மொழி பேசுகின்றவர்களாக வாழ்ந்தவர்கள்.
அதேபோல் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தோமோ தமிழ் பேசுகின்ற இரு இனங்கள் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாக வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை, இரு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தலைவர்களும் ஒரே இடத்தில் இருந்து பேசி அதற்கான விட்டுக் கொடுப்புக்களையும் செய்து எமக்குள் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.
இரு சமூகங்களும் தொடர்ந்தும் சந்தோஷமாக வாழ்வதற்குரிய சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்காக அரசியல்வாதிகளை விடுத்து அரச பதவிகளில் இருக்கின்றவர்களும் இதற்கான மனப்பாங்குகளை வளர்த்துக்கொண்டு இரண்டு சமூகங்களும் அந்நியோன்யமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட ரீதியில் நான் “தமிழர் வேறு இஸ்லாமியர் வேறு” என்று பார்த்து செயற்படுபவன் அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 600க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எனக்கு அதாவது எனது முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்துக்கும் எனது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்து இருக்கின்றார்கள்.
ஏறாவூர் நகர சபை தவிசாளராக இருந்த காலத்திலும்கூட எனக்கு தமிழ் மக்கள் அதிக அளவு ஆதரவு தந்திருக்கின்றார்கள். நானும் தமிழ் மக்களுக்காக பல உதவிகளை செய்து வந்திருக்கின்றேன். என்னுடைய வர்த்தக நிலையங்களில் கூட பலர் தமிழர்கள் கடமையாற்றுகின்றார்கள். தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் எமக்குள்ளே இருக்கின்ற பிரித்தாளும் தந்திரங்களை விட்டுவிட்டு ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும், செயற்பட்டால் மாத்திரமே இரண்டு சமூகங்களும் முன்னோக்கி செயற்படலாம்.
நேர்கண்டவர் : வ.சக்திவேல்