உலகில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றா நோயாக தற்போது நீரிழிவு நோய் காணப்படுகிறது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் 20 வீதமானோருக்கு இந்த நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.
முன்னைய காலங்களில் வயதானவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற கூற்றுக்கு சவால் விடும் வகையில் தற்போது வயது பாரபட்சம் இன்றி இளைஞர்களுக்கும், நடுத்தர வயது மற்றும் வயதானவர்களுக்கும் என இதன் பாதிப்பு காணப்படுகிறது.
இன்றைய உலகில் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவல் தான். எமது நாட்டிலும் 23 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு காணப்படுகிறது. இது கடந்த ஆண்டுகளை விட விரைவான அதிகரிப்பு என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் அதன் பாதிப்பு மற்றும் அதற்கான மருத்துவ செலவுகளும் வெகுவாக அதிகரித்துள்ளன என்பதை குறிப்பிட வேண்டும்.
ஆசிய பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சிலருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டாலும் அது தொடர்பில் தெளிவின்மை அவர்களின் உடலின் பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
அதிக உடல் பருமன், முறையற்ற உணவு முறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சிகள் இன்மை இந்த பாதிப்புக்கு ஒரு காரணமாகிறது. அது மட்டுமின்றி மேலும் பல்வேறு காரணங்கள் இதற்கு உள்ளன. அதனால் அனைவருமே நீரிழிவு நோய் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.
உலக நீரிழிவு தினத்தையொட்டி ஊடகவியலாளர்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த விசேட விழிப்புணர்வு கருத்தரங்கும் நீரிழிவு நோய்த் தடுப்புக்கான மருத்துவ முகாமும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த வாரம் நடைபெற்றது.
நீரிழிவு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் கவனம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு கருத்தரங்கில் தெளிவு படுத்திய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் குமார விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச சிகிச்சை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை என சுட்டிக்காட்டிய அவர், சிகிச்சைக்காக ஆண்டுதோறும் தேசிய நிதியிலிருந்து பெரும் தொகை ஒதுக்கப்படுவதாகவும், சில நோய் நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் மக்கள் இப்போதைவிட அதிகமாக அக்கறை காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நீரிழிவு நோய் மற்றும் நல்வாழ்வு” என்னும் தொனிப்பொருளில், நீரிழிவு நோய் குறித்த இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகத்துறையினருக்கு இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த குமார விக்கிரமசிங்க ,
“நீரிழிவு ஒரு தொற்றாநோய். தற்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நீரிழிவு நோய் காணப்படுகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 23 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோய் ஒரு தொற்று நோய் அல்ல. நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியாது என சிலர் விளம்பரம் செய்கிறார்கள். நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாது எனினும் கட்டுப்படுத்த முடியும். நாம் உண்ணும் உணவின் பக்கவிளைவுகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்தால் இந்த நோயின் பாதிப்பை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் பிரசாத் கட்டுலந்த இந்த கருத்தரங்கில் விளக்கமளிக்கையில்;
நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனினும் தற்போது நாட்டில் நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாக மாறிவிட்டது. ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு இங்கு மிக முக்கியமான பணி உள்ளது. இந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் திறன் ஊடகங்களுக்கே உண்டு. என்பதால் ஊடகங்கள் தமது பணியை செவ்வனே செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
துறை சார்ந்த நிபுணர் மணில்க சுமணதிலக்க இங்கு விளக்கமளிக்கையில்;
தற்போது உலகில் சுமார் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் பாதிப்பு வீதம் அதிகரித்துள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சிலருக்கு நீரிழிவு நோய் இருந்தாலும், அது பற்றி தெரியாது. மேலும், அதிக உடல் பருமனானவர்கள் உள்ள நாடுகளில் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோய் குறித்து நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோய்க்கான பல அறிகுறிகள் உள்ளன. சோர்வு, மெலிவு, அதிக பசி, காயங்கள் ஆறாமல் இருப்பது, கை, கால்களில் உணர்வின்மை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவை இதில் சிலவாகும். இவை குறித்து நாம் அனைவருமே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் நோயைக் கண்டறிவது மிகவும் எளிதானது. இரத்தப் பரிசோதனை மூலமாகவும் இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகள் தென்பட்டால், இரண்டு அல்லது மூன்று முறை பரிசோதிக்க வேண்டும்.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு நாடு முழுவதும் சுகாதார கிளினிக்குகளை நடத்துகிறது. எனவே, இந்த கிளினிக்குகளுக்கு அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதிக்கலாம். மருத்துவ மனைகளில் நீரிழிவு நோய் தவிர, இரத்த அழுத்தம், இரத்த கொலஸ்ட்ரோல் போன்றவற்றையும் பரிசோதிக்க முடியும். இலவசமாக கிடைக்கும் இந்த பரிசோதனைகள், சிகிச்சைகளை நாம் பெற்றுக் கொள்வதன் மூலம் நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது தொடர்பில் சிந்தித்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்த சிகிச்சை முகாம்களில் பெருமளவு ஊடகவியலாளர்கள் பங்கு பற்றி பலனடைந்தனர் என்பதுடன், இந்த நோய் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இதன் மூலம் சிறந்த தெளிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம் படங்கள் - சுதத் நிஷாந்த