Home » சர்வதேச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல்-லெபனான் யுத்தநிறுத்தம்!

சர்வதேச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல்-லெபனான் யுத்தநிறுத்தம்!

by Damith Pushpika
December 1, 2024 6:37 am 0 comment

இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான யுத்தநிறுத்தம் கடந்த புதன்கிழமை (26.11.2024) உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 (2.00ஜிம்.எம்.ரி) ) மணிக்கு அமுலுக்கு வந்தது. இதன் மூலம் இருதரப்பினருக்கும் இடையில் 13 மாதங்களாக நீடித்த எல்லை தாண்டிய யுத்தம் முடிவுக்கு வந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல், லெபனானில் மாத்திரமல்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தினதும் அமைதிக்கான முதல் படியாக இப்போர்நிறுத்தம் நோக்கப்படுகிறது.

ஆனால் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் நாளே இஸ்ரேல் யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொண்டதாக லெபனான் குறிப்பிட்டுள்ள சூழலில், மறுநாள் வியாழக்கிழமை தெற்கு லெபனானின் பைசரியா என்ற இடத்தில் அமைந்திருந்த ஹிஸ்புல்லாஹ்வின் நடுத்தர ரொக்கட் களஞ்சியசாலை மீது தாக்குதல் நடத்தி அழித்தாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இப்போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இஸ்ரேல் இத்தகைய விமானத் தாக்குதலை நடத்தி இருப்பது அதுவே முதல் தடவையாகும். இது யுத்தநிறுத்த மீறலென லெபனான் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் நாள் செவ்வாய்க்கிழமை பின்னேரம் அறிவித்ததும் லெபனான், இஸ்ரேல் உட்பட உலக மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இந்த யுத்தநிறுத்த மீறல்கள் தவிடுபொடியாக்கி விடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இப்போர்நிறுத்தமானது, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடும் முயற்சியின் ஊடாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவென அமெரிக்கா அமொஸ் கொச்டைனை (Amos J. Hochstein) விஷேட பிரதிநிதியாக நியமித்தது. அவர் இஸ்ரேல், லெபனான் தரப்பினருடன் பல சுற்று சந்திப்புக்களை நடத்தினார். பிரான்ஸ் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஆனாலும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினருடன் அவர் நேரடி பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவில்லை.

ஏனெனில் ஹிஸ்புல்லாஹ்வை அமெரிக்கா ஏற்கனவே பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்திருப்பதே அதற்கான காரணமாகும். அதனால் யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளில் லெபனான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் நபிஹ் பெர்ரி ஹிஸ்புல்லாஹ்வை பிரதிநிதித்துவப்படுத்தினார். இஸ்ரேலிய யுத்த அமைச்சரவையும் இஸ்ரேல்- லெபனான் யுத்தநிறுத்தத்திற்கு அங்கீகாரம் அளித்தது. அதற்கேற்ப இரு தரப்பினரும் 13 அம்ச யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி பைடன் யுத்தநிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து லெபனான் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். தெற்கு லெபனானில் இருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் சாரிசாரியாக கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பலாயினர்.

‘யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்திருந்தாலும் தெற்கு லெபனானின் சில கிராமங்களுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை திரும்ப வேண்டாமென இஸ்ரேலிய இராணுவம் மக்களுக்கு அறிவித்ததோடு, ஆரம்ப நாட்களில் ஊரடங்கு உத்தரவையும் நடைமுறைப்படுத்தினர்.

இவ்வாறான சூழலில் யுத்தநிறுத்த அறிவிப்பை விடுத்த பைடன், ‘லெபனான்- இஸ்ரேல் எல்லையில் நடக்கும் சண்டை முடிவுக்கு வரும். இது பகைமைகளை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் உள்ள குடிமக்கள் விரைவில் தங்கள் இருப்பிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்ப முடியும். அவர்கள் தங்கள் வீடுகள், பாடசாலைகள், பண்ணைகள், வணிகங்கள் என வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் கூட்டு அறிக்கையொன்றையும் பைடன் வெளியிட்டார்.

‘இரு நாடுகளும் இவ்வேற்பாடு முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் இணைந்து செயல்படவுள்ளன. லெபனான் ஆயுதப் படைகளின் திறனை வளர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்தவும் ஆதரவளிக்கவும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் லெபனானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போர்நிறுத்தத்திற்காக உழைத்த அமொஸ் அல் ஜசீராவுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘இது நிரந்தரமான போர்நிறுத்தம். 60 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. போர்நிறுத்தம் தொடங்கிய நேரத்தில், இருந்து அனைத்து துப்பாக்கிகளும் மௌனிக்கும். ரொக்கட்டுகள், ட்ரோன்கள், விமானப்படை, ஷெல் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் அனைத்தும் நிறுத்தப்படும். எல்லையில் இருந்து முதல் இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் வரை இஸ்ரேலிய இராணுவம் இப்போதைக்கு தரைப்பகுதியில் இருக்கும். லெபனான் இராணுவம் தெற்கே மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதும் இஸ்ரேலியப் படைகள் கட்டம் கட்டமாக வெளியேறும்’ என்றுள்ளார்.

இவ்வாறான சூழலில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ‘லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையும் (UNIFIL) இவ்வொப்பந்தத்தை செயல்படுத்த உதவும்’ என்றுள்ளார்.

பலஸ்தீனிய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படுவதைக் கண்காணிக்கவென 1978 இல் அமைக்கப்பட்டதுதான் ஐ.நா. அமைதிப்படை (UNIFIL).

அன்று தொடக்கம் தெற்கு லெபனான் பிரதேசங்களில் 50 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் யுனிபிலில் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக லெபனானின் இடைக்காலப் பிரதமர் நஜிப் மிகட்டி பைடனிடம் கூறியுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதியிடம் தனது அரசாங்கம் போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றுள்ளார்.

13 ஷரத்துக்களைக் கொண்ட இப்போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ‘அடுத்த 60 நாட்களில் தெற்கு லெபனானில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் படிப்படியாக திரும்பப் பெறும், லெபனான் இராணுவம் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் படைகள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்படுவர். குறிப்பாக 10 ஆயிரம் லெபனான் படையினர் தெற்கு லெபனானில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அவர்களில் 5000 பேர் லிட்டனி ஆற்றுக்கு தெற்கு பகுதியின் இஸ்ரேலிய எல்லையிலுள்ள 33 நிலைகளில் பணிக்கு அமர்த்தப்படுவர். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாஹ் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப இடமளிக்காதிருத்தல், ஹிஸ்புல்லாஹ்வும் ஏனைய ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லெபனான் அரசாங்கம் தடுக்க வேண்டும்,

அதேபோன்று பொதுமக்கள், இராணுவம் அல்லது பிற அரச இலக்குகள் உட்பட லெபனான் இலக்குகளுக்கு எதிராக எந்தவொரு தாக்குதலையும் இஸ்ரேல் மேற்கொள்ளாதிருத்தல், தெற்கு லிட்டனி பகுதியிலுள்ள ஆயுதக் குழுக்களின் அனைத்து உட்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகளை லெபனான் இராணுவம் அகற்ற வேண்டும், அங்கீகரிக்கப்படாத அனைத்து ஆயுதங்களையும் களையும் பொறுப்பை லெபனான் நிறைவேற்றுதல், லெபனானுக்குள் அரச அனுமதியின்றி ஆயுதங்கள் நுழைவதை நிறுத்தவும் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு ஆயுதத்தை அகற்றவும் ஆயுத உற்பத்திகளை நிறுத்தவும் லெபனான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லெபனானின் உத்தியோகபூர்வ இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதங்கள் மட்டுமே தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்படும். இதற்கு மேலதிகமாக ஐ.நா. அமைதிப்படைக்கு அனுமதி வழங்கப்படும். ஆயுதக் குழுக்களும் அவற்றின் ஆயுதங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பொருட்களும் தெற்கு லிட்டனி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

யுனிஃபில், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் லெபனான் இராணுவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்போதைய முத்தரப்பு பொறிமுறையில் அமெரிக்காவும் பிரான்ஸும் இணைவதாகவும், சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் உடன்பாடுகளை எட்டவும் ஒத்துழைக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாக, 2006 இல் இஸ்ரேல்-ஹிஸ்புல்லாஹ் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701 கொள்ளப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்திற்கு அமைய லெபனானில் உள்ள அனைத்து ஆயுதக் குழுக்களையும் நிராயுதபாணிகளாக்க வேண்டும். அத்தீர்மானமும் இந்த ஒப்பந்தத்திலும் மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிபந்தனைகளைக் கொண்டுள்ள இப்போர்நிறுத்த உடன்பாட்டை ஈரான், சீனா, எகிப்து, துருக்கி, சவுதி, கட்டார், வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு, ஜேர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளும் வரவேற்றுள்ளன. அமைதி, சமாதானமே அனைத்துத் தரப்பினரதும் ஒரே விருப்பம் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division