- புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 10 நாட்களுக்குள் நிகழ்ந்திருக்கும் பேரிடர் இதுவாகும்.
- ஆனாலும் குறிப்பிடத்தக்க முறையில், சிறப்பான பேரிடர் முகாமைத்துவம் நடப்பதை அவதானிக்க முடிகிறது.
- மாவட்ட ரீதியான இடர் முகாமைத்துவத் துறை வேலைகளை முடுக்கி விட்டுள்ளது அரசு.
- இடர் முகாமைத்துவப் பணிகளோடு நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் அரசாங்கம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகப் பிரிவுகள் சொல்கின்றன
- இந்தப் பேரிடர் ஏற்படுவதற்குச் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் தேர்தல் பணிகளில் மும்முரமாக – அமர்க்களமாக நின்ற பல தலைகளைத்தான் காண முடியவில்லை
- மழை வந்தால், வெள்ளம் ஏறினால் அதற்குத் தாம் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்ற அரசியல்வாதிகளே இன்று பெருகிக் கிடக்கிறார்கள்
- இதெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு. தமக்கு இந்த வேலை இல்லை. சர்வதேசத்துடன் பேசுவதும் படம் எடுத்துக் கொள்வதும் அறிக்கை விடுவதும்தான் தம்முடைய வேலை என்று கருதுகின்ற அரசியலாளர்களும் கட்சிகளும் உள்ளன.
‘பெங்கால்‘ புயல் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விடச் சத்தமேயில்லாமல் விலகிச் சென்று விட்டது. ஆனால், அதனோடிணைந்து உருவான தாழமுக்கம் நாட்டில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
24 மாவட்டங்களிலுமாக 1, 41, 268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32, 361 பேர், 366 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 20732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் 357 குடும்பங்களைச் சேர்ந்த 1292 பேர். கண்டியில் 202 குடும்பங்களின் 881 பேர். புத்தளத்தில் 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர். குருணாகலில் 1073 குடும்பங்களைச் சேர்ந்த 33316 பேர். கிளிநொச்சியில் 4367 குடும்பங்களைச் சேர்ந்த 13836 பேர். முல்லைத்தீவில் 2826 குடும்பங்களைச் சேர்ந்த 8724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, மன்னாரில் 19811 குடும்பங்களைச் சேர்ந்த 68334 பேரும் மட்டக்களப்பில் 23561 குடும்பங்களைச் சேர்ந்த 73532 பேரும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 4199 குடும்பங்களில் உள்ள 12524 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 46817 குடும்பங்களைச் சேர்ந்த 62092 பேரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அநுராதபுரத்தில் 2101 குடும்பங்களைச் சேர்ந்த 6619 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதைவிட வெள்ளத்தின்போது ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் 16க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்களை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் ஆறு மாணவர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து வெள்ளத்தின் காரணமாக விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மரணமடைந்திருக்கிறார். மலையகத்தில் நான்கு பேர் வெவ்வேறு சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு நாடு முழுவதிலும் உயிரிழப்புகளும் உடமை இழப்புகளும் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரக்கணக்கானோர் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உடனடி உதவியாக, சமைத்த உணவு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக உலர் உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். ஏறக்குறைய ஒரு வாரம் நாட்டில் நெருக்கடி நிலைக்கு நிகரான சூழல் நிலவுகிறது.
வெள்ள அபாயம் காரணமாக சில புகையிரதச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சில சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – கொழும்பு, வவுனியா- யாழ்ப்பாணம், முல்லைத்தீவு – பரந்தன் போன்ற இடங்களுக்கான போக்குவரத்தும் ஒரு சில நாட்கள் தடைப்பட்டிருந்தன. கல்முனை – அக்கரைப்பற்று வீதியிலுள்ள பாலம், முல்லைத்தீவு நந்திக்கடல் பாலம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பாலம் போன்ற பாலங்கள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் வீதிகளே வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுவரையான (29.11.2024) மதிப்பீடுகளின்படி 338446 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 137,880 விவசாயிகளுக்கு நட்டம். கிழக்கு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை. அவை பற்றிய மதிப்பீடுகளும் வந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். இவ்வளவும் இதுவரையான வெள்ளத்தினால் ஏற்பட்டவையாகும்.
பருவப் பெயர்ச்சி மழைக்காலம் இப்போதுதான் பாதியைக் கடந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழையை எதிர்பார்க்கலாம். இப்போதே குளங்களும் நீர்நிலைகளும் நிரம்பியிருப்பதால் இனிமேல் பெய்யக் கூடிய மழை எல்லாம் வெள்ளமாகவே மாறும்.
ஆகவே அதையும் நாம் அனர்த்தச் சூழலுடன் இணைத்தே நோக்க வேண்டியிருக்கிறது. அதை இப்போது விட்டு விடுவாம். அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இது வந்திருக்கும் பேரிடராகும். இதற்கான பணிகள், ஏற்பாடுகள் எப்படி உள்ளன? எப்படி அமைய வேண்டும் என்று பார்க்கலாம்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 10 நாட்களுக்குள் நிகழ்ந்திருக்கும் பேரிடர் இதுவாகும். ஆனாலும் குறிப்பிடத்தக்க முறையில், சிறப்பான பேரிடர் முகாமைத்துவம் நடப்பதை அவதானிக்க முடிகிறது. மாவட்ட ரீதியான இடர் முகாமைத்துவத் துறை வேலைகளை முடுக்கி விட்டுள்ளது அரசு.
அனர்த்த முகாமைத்துவக் குழுக்களோடு படையினர் இணைந்து பல இடங்களிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலர் உணவுகளை வழங்குகின்றனர். கிழக்கில் ஓட்டமாவடி, ஏறாவூர், செங்கலடி போன்ற இடங்களில் கடற்படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பாறையிலும் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கில் பருத்தித்துறை, கற்கோவளம், பரந்தன், வட்டுக்கோட்டை, கொடிகாமம் போன்ற இடங்களில் மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், சிவில் அமைப்புகள், காவல்துறையினர் எனப் பல்வேறு தரப்பினரும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை ஓரளவு ஆறுதல்.
க. பொ. த. உயர்தரப் பரீட்சையை அரசாங்கம் இடைநிறுத்தி, சில நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. இது பாராட்டப்படவேண்டியதொரு செயலாகும். மக்கள் பேரிடரில் சிக்கியிருக்கும்போது அதைப் புரிந்து கொள்ளாமல் தீர்மானிக்கப்பட்டதன்படியே பரீட்சையை வைத்திருந்தால் அதனால் கூடுதலாகப் பாதிப்படைவது மாணவர்களாகவே இருக்கும். ஆகவே மாணவர் மற்றும் மக்களின் நிலைநின்று இந்த விடயத்தை அரசாங்கம் சிந்தித்திருக்கிறது. இடர் முகாமைத்துவப் பணிகளோடு நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் அரசாங்கம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகப் பிரிவுகள் சொல்கின்றன.
தொண்டுப் பணிகளை முன்னெடுக்கும் உற்சாகம் மக்களிடத்திலும் காணப்படுகிறது. பல இடங்களிலும் இளைய தலைமுறையினரும் சமூக அமைப்புகளும் முன்வந்து மீட்புப் பணிகளிலும் உதவிப் பணிகளிலும் ஈடுபட்டு வருவது நிறைவளிக்கிறது. முக்கியமாக மருத்துவப் பணிகள் சிறப்பான முறையில் நடமாடும் சேவைகள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
காலநிலைச் சீர்குலைவினால் தனித்துப்போன நெடுந்தீவு மக்களுடைய பாதுகாப்புக்கும் மருத்துவத்துக்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பணிமனை தெரிவித்தது. இதன்படி அங்குள்ள நோயாளர்கள் நெடுந்தீவு மருத்துவமனையை நாடுமாறு கேட்கப்பட்டிருந்தனர். அதில் மூவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தி மூலமாக அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடர் நிவாரணப் பணிகளில் புலம்பெயர் மக்களும் குறிப்பிட்டளவான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்தப் பேரிடர் ஏற்படுவதற்குச் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் தேர்தல் பணிகளில் மும்முரமாக – அமர்க்களமாக நின்ற பல தலைகளைத்தான் காண முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநூறுபேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிடுவதென்பது, மக்கள் பணிக்காகத் தம்மைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அர்ப்பணிப்பதாகும்.
மக்கள் பணி என்பது வெற்றியடைந்தால் மட்டுமே – அதிகாரம் கிடைத்தால் மட்டுமே – செய்யக் கூடிய ஒன்றல்ல. அதைச் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. பல முறைகள் உண்டு. மனமிருந்தால் இடமுண்டு என்பதைப்போல அதை எப்போதும் எந்த வகையிலும் செய்யலாம். அந்த உணர்வுதான் முக்கியமானது.
ஆனால், அந்தப் பொது உணர்வை இந்தத் திடீர் அரசியல்வாதிகள் பலரிடத்திலும் காணவில்லை. சாதாரண மக்களே தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கின்றனர். மீட்பு – நிவாரணம் என்ற இருநிலைப் பணிகளிலும் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றனர். ஆனால், தேர்தலில் தம்மை மக்கள் பணியாளர்களாகப் பிரகடனப்படுத்தியவர்கள்தான் தலைமறைவாகி விட்டனர். இதை மக்கள் நன்றாக அவதானித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மறுபடியும் இவர்கள் மக்களிடம் பல வேடங்களில் வருவார்கள்.
தோற்றுப் போனவர்கள் மட்டுமல்ல, வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல இடங்களிலும் காணவில்லை. மழை வந்தால், வெள்ளம் ஏறினால் அதற்குத் தாம் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்ற அரசியல்வாதிகளே இன்று பெருகிக் கிடக்கிறார்கள். அல்லது சமஷ்டியோ தனிநாடோ கிடைத்தால்தான் தம்மால் இயங்க முடியும் என்று சொல்லிக் கொண்டு, பொறுப்பைத் தட்டிக் கழிப்போரும் உள்ளனர்.
அவர்களையும் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.
இதெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு. தமக்கு இந்த வேலை இல்லை. சர்வதேசத்துடன் பேசுவதும் படம் எடுத்துக் கொள்வதும் அறிக்கை விடுவதும்தான் தம்முடைய வேலை என்று கருதுகின்ற அரசியலாளர்களும் கட்சிகளும் உள்ளன.
இது கண்டிக்கப்பட வேண்டியது. மனிதாபிமான நடவடிக்கையே முதலாவதாகும். அதற்குப் பின்னரே ஏனைய அனைத்தும். இங்கே நடந்து கொண்டிருப்பதும் நடந்ததும் பேரிடராகும்.
அப்போது அங்கே நிற்க வேண்டியதே சரியான அரசியற் பங்களிப்பு. அதாவது மக்களோடு நிற்பதாகும். அப்படி நிற்கும்போது அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தெம்பையும் ஆறுதலையும் கொடுக்கும். ஏன் மகிழ்ச்சியைக் கூட அளிக்கும்.
வாக்குகளைப் பெறுவதோடு தமது பணி முடிந்து விட்டதாக யாரும் கருதக் கூடாது. எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த மக்கள்தானே வாக்களித்தனர். அவர்களின் பேரால்தானே மக்கள் பிரதிநிதிகள் என்ற அடையாளமும் அதிகாரமும் கிடைத்தது. ஆகவே அதை அந்த மக்களுக்குச் செய்யும் பணிகளின் மூலமே பிரதியுபகாரமாக்க முடியும். அதற்கும் அப்பால், அது அரசியற் தலைவர்களின் – மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடர் தீர் பணிகளை அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆளுநர் வேதநாயகன் முதலில் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களின் செயலர்கள், அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருடன் ஒரு தொடக்க நிலை ஏற்பாட்டைப் பற்றித் திட்டமிட்டார். அடுத்ததாக அமைச்சர் சந்திரசேகர்ஒன்றை ஏற்பாடு செய்தார். இன்னொரு ஏற்பாட்டினை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைத் திட்டமிட்டார்.
இதேவேளை மழை வெள்ளத்தினால் பேரிடரைச் சந்தித்துள்ள மக்களுக்கு உடனடி உதவிகளும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் இதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனாலும் கவனிக்க வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன என்று சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தற்போதைய கள நிலவரம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்திருக்கிறார். அமைச்சர் சந்திரசேகர் மருதங்கேணியில் பாதிக்கப்பட்ட பாலத்தை நேரிற் சென்று பார்வையிட்டு, அதனைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு புறம் நடக்கும்போது, பல இடங்களில் இன்னமும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது.
அதை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். வெள்ளம் தேங்கியிருப்பதனால் பரந்தன், கொடிகாமம், வடமராட்சி கற்கோவளம், வலி மேற்குப் பிரதேசத்தில் சில கிராமங்கள் எனப் பல இடங்களில் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உடனடி உதவிகளோடு இழப்பீடுகள் மதிப்பிடப்பட்டு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். இவர்கள் தொற்று நோய்த் தாக்கத்துக்கு உட்படக் கூடிய அபாயமும் உள்ளது. மேலும் இந்தப் பிரதேசங்களில் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் சேதத்தைச் சந்தித்துள்ளன. மீனவர்களும் கடந்த ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆகவே இவற்றை முறையாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்க்கக் கூடியவாறான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். இது மிக முக்கியமானதாகும்.
வெள்ள அனர்த்தத்துக்குப் பிரதான காரணமாக இருப்பது சீரான வடிகாலமைப்பு இல்லை என்பதேயாகும். வடக்கில் போருக்குப் பிந்திய அபிவிருத்திப் பணிகளின்போது சீரான வடிகாலமைப்பை மேற்கொள்வதற்கு பொறுப்பானவர்கள் தவறியுள்ளனர். கட்டங்கள், மதில் போன்றவற்றை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிகளில் வடிகாலமைப்புப் பற்றிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
முந்திய ஆட்சிக் காலத்தில் செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதிகளால் இவ்வாறான இடர்ப்பாடுகள் இப்போது ஏற்பட்டுள்ளன.
இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் மேலும் பாதிப்புகளும் இடரும் நேரும் என்று பகிரங்கமாகவே பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
வடமாகாண சபை நிர்வாகம் இதில் கூடிய வகனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறே வடக்கும், கிழக்கும் புவியியல் ரீதியாகவும் தாழ்வு அமைப்பைக் கொண்டவை. ஆகவே அங்கே மணல் அகழ்வு, இயற்கை வளங்களான காடழிப்பு போன்றன நடந்தால், இந்த மாதிரிச் சூழலில் பாதிப்புப் பன்மடங்காகும்.
ஆகவே அதிகரித்த மணல் அகழ்வுகள், சட்டவிரோத மணல் அகழ்வு, கிறவல் அகழ்வு போன்றன கட்டுப்படுத்தப்படுவது அவசியமாகும். மேலும் நிர்மாணப்பணிகளின்போது பொருத்தமான அமைவிடங்கள் தெரிவு செய்யப்படாமை போன்றனவும் வெள்ள அர்த்தத்துக்குப் பெருங்காரணங்களாகும்.
ஆகவே இவற்றைச் சரிசெய்வதுடன், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காத வகையில் உரிய அதிகாரிகளும் அதிகாரத் தரப்பினரும் நடந்து கொள்வது அவசியமாகும். பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள் விடுகின்ற தவறுகளால் மக்களே பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே மக்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்போர் இந்த நிலையைக் குறித்துக் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். புதிய அரசாங்கம் இந்த விடயங்களில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் வடிகாலமைப்புப் பற்றிய கரிசனை மேலோங்கியுள்ளது. அதை எமது சூழலிலும் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
பேரிடரைத் தடுப்பதற்கான முதலாவது முகாமைத்துவம், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான நிர்மாணப் பணிகளும் முன்னேற்பாடுகளுமாகும். இதற்கு மக்களின் ஆதரவு பாதிக்கு மேல் அவசியமாக இருக்க வேண்டும். ஒன்று மக்களை இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது, மக்களுக்கும் – மக்கள் அமைப்புகள், ஊடகங்களுக்கும் இதில் ஈடுபாடும் அக்கறையும் இருக்க வேண்டும்.
யுத்த அழிவையும் விட ஒரு சில மணி நேரத்தில் அல்லது ஒரு சில நாட்களில் ஏற்படுகின்ற பேரிடர் பேரழிவை உண்டாக்கி விடக் கூடியது. நாம் யுத்தத்தை முழு அளவில் சந்தித்த மக்கள். அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாதிருப்பவர்கள்.
ஆகவே மேலும் மேலும் இடர்களுக்கு முகம் கொடுக்க முடியாது. அதைத் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் என்றால், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயற்பட்டே தீர வேண்டும்.
ஆட்சி மாற்றம் நாட்டிலுள்ள அனைத்தையும் மாற்றி விடும். நாம் வாக்களித்ததோடு நமது கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதிக் கொண்டு வாழாதிருக்கக் கூடாது. வாழும் வரை பாடுபட வேண்டும். வாழும் வரை போராட வேண்டும். ஆம், வாழ்வதற்காகப் போராட வேண்டும். அந்தப் போராட்டம் இயற்கையோடும் ஆட்சியோடும் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். நமது பொறுப்புகளை நாம் சரியாக ஆற்றும்போதுதான் நமக்கான அரசும் ஆட்சியும் நல்ல சூழலும் நற்காலமும் நமக்குக் கிடைக்கும். அதை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதற்கு இந்தப் பேரிடர்க்காலம் ஒரு தொடக்கமாக இருக்கட்டும். பேரிடர்கள் மனிதர்களை – துயரத்தாலும் மனிதாபிமானத்தாலும் ஒருங்கிணைப்பவை. இன்று நாட்டுக்குத் தேவை நியாயமான – மனிதாபிமான ஒருங்கிணைப்பே.
கருணாகரன்