ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவிருக்கின்ற முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். எனவே ஜனாதிபதியின் இந்திய விஜயம் இலங்கையில் மாத்திரமன்றி, இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, புதிய அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவப் போகின்ற இராஜதந்திர உறவு குறித்து பலவாறான விமர்சனங்கள் நிலவின. இடதுசாரி பின்னணியைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் சித்தாந்த ரீதியில் இடைவெளியே நிலவக் கூடுமென்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு நிலவப் போகின்றது என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே உருவாகி விட்டன.
ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றியீட்டியதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து இந்தியாவின் வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்புக்கான கடிதத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்த நட்புரீதியான அழைப்பின் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். இருநாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களென்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம், இந்திய மீனவர் விவகாரம் குறித்தும் அங்கு பிரதானமாகப் பேசப்படுமென்று புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மீனவர்கள் விவகாரமானது இருநாடுகளின் அரசாங்கங்களால் தீர்க்கப்பட வேண்டுமென்பதே நியாயபூர்வமான நிலைப்பாடாகும். இந்நிலையில் இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையானது, இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதிலும், மீனவர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதிலும் உதவுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக மீனவர்கள் தங்களது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பதென்பது சர்வதேச சட்டங்களை மீறுகின்ற செயலாகுமென்பதை தமிழக அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பதற்கு இந்திய மத்திய அரசு காத்திரமான நடவடிக்ைககளை மேற்கொள்வது அவசியமாகும். இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தையானது இந்திய மீனவர் ஊடுருவலைத் தடுப்பதற்கு வழியமைக்க வேண்டுமென்பதே வடபகுதி மீனவர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.