வெள்ள நீரில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறு வாழ்வுக்காக கிழக்கில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மதரஸாவில் கல்வி கற்று, உயிரிழந்த மாணவர்களின் மறுவாழ்வுக்காக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மதரஸா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக, கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்டது.
இதன்போது, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் தமது பிரதேசத்துக்கு செல்லும் வழியில் காரைதீவு இமாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இம் மாணவர்களின் தவிர்க்க முடியாத இழப்பை முன்னிட்டு துக்கத்தினை வெளிப்படுத்தும் நோக்குடன், சமூக நலன் விரும்பிகளால் வெள்ளைக்கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முன்தினம் (29) வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம்பெறக்கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட்டதுடன் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விஷேட தூஆ பிரார்த்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.