தேர்தல் ஆண்டாக அமைந்த 2024ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்திக்கு ஏறுமுகமாக இருந்தாலும், பல கட்சிகளுக்கு இது இறங்குமுகமான ஆண்டாகவே அமைந்து விட்டது. பல தசாப்தங்களாக பல்வேறு இடர்பாடுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து இன்று ஒட்டுமொத்த நாட்டின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி வியாபித்திருக்கும் சூழ்நிலையில், இதுவரை பல தசாப்தங்களாக கொடிகட்டிப் பறந்த அரசியல் சக்திகள் வீழ்ச்சியுற்றிருக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு அக்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. இம்முறை பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதொன்றாக இருந்தாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
விசேடமாக 1989ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு கட்சியினாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியவில்லை. குறிப்பாக 2010ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும், 2020ஆம் ஆண்டு கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலும் மூன்றில் இரண்டை அண்மிக்கும் நிலைக்குச் சென்றிருந்த போதும், அவர்களால் தனித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் இந்த வரலாற்று வெற்றி பல்வேறு கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. பழம்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி, வடக்கு, கிழக்கு, மலையகம் என இதுவரை காலமும் அந்தந்தப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பல அரசியல் சக்திகளுக்கும் மக்கள் பலத்த அடியை வழங்கியுள்ளனர்.
தாம் எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும் மக்கள் எப்போதும் தம்முடன் நிற்பார்கள் என்ற அதீத நம்பிக்கையும், அசட்டுத்தனமும் இம்முறை தேர்தலில் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் போன்ற தொடர் தோல்விகளால் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் பூதாகரமாகியுள்ளது.
குறிப்பாக, பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப்பட்டியல் ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் குழு எனப் பலரும் இணைந்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கூட்டணிக்கு 2 தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன.
இது தவிரவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும், பொதுஜன பெரமுனவுக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும், சர்வஜன பலய கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்தன. தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த 18 தேசியப்பட்டியல் ஆசனங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இருந்தபோதும் எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே தேசியப் பட்டியலை நிரப்புவது பெரும் இழுபறியாக மாறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய நான்கு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் பகிர்வதில் அக்கட்சி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமக்கு ஒவ்வொரு ஆசனங்களைக் கோருவதாகவும், குறிப்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நுழைவதற்குக் கடும் பிரயத்தனங்களை எடுத்திருப்பதாகவும் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவாக நின்று செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசியப் பட்டியலின் ஊடாகப் பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றார். இதனால் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கொண்ட தேர்தல்கள் யாவும் தோல்வியை தழுவியிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சஜித் விலகி பிறிதொருவருக்கு அதனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் உருவாகியுள்ளது. இதனால் பிரதான எதிர்க்கட்சி உட்கட்சி முரண்பாடுகளுக்கு கடுமையாக உள்ளாகியுள்ளது.
மறுபக்கத்தில், புதிய ஜனநாயகக் கூட்டணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர், பொதுஜன பெரமுனவிலிருந்த பிரிந்து வந்த அதிருப்தியாளர்கள் எனப் பலரும் இக்கூட்டணியில் அங்கம் வகித்ததுடன், இக்கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்தார்.
பிரபலமாக இருந்த அமைச்சர்கள் பலரும் இதில் போட்டியிட்டிருந்தாலும் அனைவரும் தோல்வியைத தழுவ, களுத்துறையிலிருந்து ரோஹித்த அபேகுணவர்தனவும், பதுளையிலிருந்து சாமர சம்பத்தும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தனர். இந்தக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன. இவற்றை யாருக்கு வழங்குவது என்பது பற்றிக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், புதிய ஜனநாயகக் கூட்டணியின் உரிமையைக் கொண்டிருக்கும் ரவி கருணாநாயக்க கட்சியின் செயலாளர் ஊடாகத் தனது பெயரை தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து விட்டார். ரவியின் இந்தச் செயற்பாடு கூட்டணியின் தலைவராகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தெரியாது என்று கூறப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ச்சியடைந்தது மாத்திரமன்றி, கூட்டணியில் இருந்த ஏனைய உறுப்பினர்களை இத்தகவல் கலவரமடையச் செய்து விட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டணியின் அங்கத்தவர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளனர். எஞ்சியிருக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், ரவி கருணாநாயக்கவின் விடயம் பற்றி ஆராய்வதற்காக ரணில் விக்கிரமசிங்க விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளாராம். குறித்த விசாரணைக் குழு அதன் அறிக்கையை ரணிலுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இம்முறை தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப் போவதுமில்லை, தேசியப் பட்டியல் ஊடாகச் செல்லப் போவதும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் அறிவித்திருந்தார். இருந்தபோதும், கிடைத்திருக்கும் தேசியப் பட்டியல் ஊடாக ரணில் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்த்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதும், இதற்கிடையிலேயே ரவி கருணாநாயக்க தனது பெயரை அறிவித்து விட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தலதா அத்துகோரளவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப எதிர்பார்த்திருந்ததாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, ஐ.தே.கவுக்கு ஒரு தேசியப் பட்டியல் கிடைத்திருப்பதால் ஏனைய கட்சிகளின் சார்பில் வேறொருவருக்கே இதனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுபோன்று பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் தமக்குள் முரண்படத் தொடங்கியுள்ளன. இருந்தபோதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன், சர்வஜன பலய கட்சியின் சார்பில் அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் பாராளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இந்தப் பாரிய வெற்றியானது எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பி. ஹர்ஷன்