Home » சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை சாத்தியமானதா?
இஸ்ரேலிய பிரதமர் மீதான

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை சாத்தியமானதா?

by Damith Pushpika
November 24, 2024 6:36 am 0 comment

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீண்டும் ஒரு பிரகடனத்தை வெளிப்படுத்தி உள்ளது. 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக கைது செய்யும் உத்தரவை அது பிரகடனப்படுத்தியது. 2024 இல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சர்யோவ் ஹெலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கு எதிராகவும்; பிடியாணை பிறப்பித்துள்ளது. போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை காசா மீதான போரில் மேற்கொண்டதாகவும் இஸ்ரேலியர்; மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. காசாவில் நிகழ்த்தப்படுவது இனப்படுகொலை என்றும் இனப்படுகொலைக்கான காரணங்களை அடையாளம் காணப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் பொதுமக்கள் மீது தாக்குதலை மட்டுமின்றி உணவை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தியவை மற்றும் மருத்துவ வசதி வாய்ப்புகளை வழங்காது தடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஹமாஸ் தலைவர் முகமட் ட்டிப் உட்பட எல்லோரும் கைது செய்யப்பட முடியும் என குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கைது செய்யக்கூடிய ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாத சூழலில் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள்; முதன்மையானதாகவும் பார்க்கப்படுகின்றது. இக்கட்டுரை காசா மீதான இஸ்ரேலியர்களின் போர், குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கையால் மாற்றப்படக் கூடியதாக உள்ளதா என்பதை தேடுவதாக உள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியான பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிடும்போது, யூத இன வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு என்ன தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இதனை 1894 பிரான்சில் ஜெர்மனிக்காக உளவு பார்த்தார் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆல்ப்ரெட் ட்ரேபஸ் விசாரணை உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட ஆல்ப்ரெட் ட்ரேபஸ் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு போலியானது என்ற முடிவுக்கு அமைவாக பிரான்ஸ் இராணுவத்தில் இணைக்கப்பட்டார். அத்தகைய இராணுவ வீரரோடு ஒப்பிடப்படும் நெதன்யாகுவும் இத்தகைய விசாரணையையும் குற்றச்சாட்டையும் போலித்தனமானது என்று தெரிவித்துள்ளார். இதே நேரம் குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொறுத்து உலக நாடுகளின் அதிர்வலைகள் எவ்வாறுள்ளது என்பதை விரிவாக நோக்குதல் அவசியமானது.

பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயின் நோபல் பேரட் பிபிசிக்கு தெரிவிக்கும்போது ICC is decision is the formalisation of an accusation, it is by no means the judgement என அதன் யதார்த்தத்தை விபரித்துள்ளார். ஆனால் அவரது நீண்ட உரையாடலில் காசாவில் மீறப்படும் மனிதாபிமான சட்டம் தொடர்பில் அதிக கேள்விகளை முன்வைத்துள்ளார். உலகளாவிய ரீதியில் சர்வதேச விதிமுறைகளையும் சட்டத்தையும் மீறுவது என்பது உலக நியாயாதிக்கத்தை நிராகரிப்பதாகவே அமையும் என்றார். மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சட்டம் தெளிவாக கொண்டிருக்கும் போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது, ஐரோப்பிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது என்றும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்துள்ளன. இதற்கான அடிப்படைக் காரணங்களை மனிதாபிமான சட்டத்தை முன்னிறுத்தி விவாதிக்கின்றனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மனித குலத்துக்கு எதிரான செயல்முறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதன் மீது கட்டுப்பாட்டையும் வரையறையையும் ஏற்படுத்த வேண்டும் என ஐரேப்பிய நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அங்கீகரிக்கும் பிரித்தானிய போர் நிறுத்த உடன்பாட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் இத்தகைய செய்முறை அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கைது செய்யும் பிரகடனம் எதிர்த்தரப்பையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதாவது தார்மீக சமத்துவத் தன்மை ((Moral Equivalence) இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

நான்காவது அமெரிக்காவை பொறுத்தவரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு உறுப்புரிமையை கொண்டிராத நாடு. அதன் அடிப்படையில் மட்டுமின்றி இஸ்ரேலிய- ஹமாஸ் போரின் முக்கிய பங்காளியாக விளங்குவதானாலும் அதன் ஆதரவு இஸ்ரேல் பக்கமே உள்ளது. அமெரிக்காவின் ஆயுத தளபாடங்களையும் இராணுவ உத்திகளையும் பகிர்கின்ற நாடாகவும் அமெரிக்கா விளங்குவதனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற கூற முயலுகிறது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலிய பிரதமருடன் தொடர்பு கொண்டு இதனை ஆதாரமற்றது என்றும் மூர்க்கத்தனமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் பலமான கண்டனங்களும் ஆதரவும் நெதன்யாகுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடைமுறையில் போரை நடத்தும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் வேறுபட்டுள்ளன. இது செயல்பாடு யதார்த்தமானதா என்ற கேள்வியும் எழுப்புகிறது. காரணம் இப்போது இஸ்ரேலுக்கான ஆயுத தளபாடங்களையும் தொழில் நுட்ப ஒத்துழைப்பையும் உளவு நடவடிக்கைகளையும் அதிகம் வழங்குகின்ற நாடுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் காணப்படுகின்றன. பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் பாரிய அளவில் ஆயுத தளபாடங்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்றன. அமெரிக்கா நேரடியாக இப்போரில் தனது தளபதிகளையும் கடல் படையையும் விமானப்படையையும் ஈடுபடுத்தி வருகின்றது. இதில் ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்து வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதும் பிரதான சட்டம் நிராகரிக்கப்பட்டது தொடர்பிலும் எந்த அளவுக்கு நியாயப்பாட்டுடன் செயல்படுகின்றன என்பது கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகவுள்ளது. 2023 இல் ரஷ்ய ஜனாதிபதி மீது இவ்வகை கைது நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அது பெருமளவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை மேற்கு நாடுகளால் கையாளும் ஒரு விடயமாகவே தெரிந்தது. ஆனால் அத்தகைய செய்முறை, நடைமுறையில் எத்தகைய நெருக்கடியையும் ரஷ்ய தலைவருக்கு ஏற்படுத்தவில்லை. அவ்வாறான ஒன்றாகவே தற்போதைய நெதன்யாகு மீதான கைது தீர்மானமும் அமையவுள்ளது.

சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் நியாயாதிக்க அம்சங்களும் சட்டங்களும் நடைமுறைத் தன்மை அற்றதாக மாறுவதோடு தனித்து பலம் வாய்ந்த வல்லரசு நாடுகளான மேற்கு நாடுகளதும் நலங்களுக்கு இசைவானதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்றாகவே காணப்படுகின்றது. இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கும் பங்குண்டு. மேற்கு நாடுகளின் தலைவர்களால் வழங்கப்படும் ஆயுத தளபாடங்களும், ஒத்துழைப்புமே இப்போரின் நிலைத்திருப்பதற்கான அடிப்படை காரணமாகும். இதேநேரம் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை வழங்கியுள்ளமை; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கையில் அதிக குழப்பத்தையும் நெருக்கடியையும் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.

யூதர்கள் மீதும் பலஸ்தீனர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் இத்தகைய அழிவுகளுக்கு பின்னால் ஐக்கிய நாடு சபையும் அதனை வழிநடத்துகின்ற மேற்கு நாடுகளும் பின்புலத்தில் இருக்கின்ற காரணிகளாக கொள்ள முடியும். அவ்வாறான சூழலில் எதிர்த்தரப்புகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான விசாரணைகளும் நடைமுறைகளும் சாத்தியப்படுத்தப்படுகின்ற போது மட்டுமே உலகில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நியாயாதிக்கத்தை ஏற்படுத்த முடியும். தவறும் பட்சத்தில் படுகொலைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் பின்னரான விசாரணைகளும் நாடுகளின் அரசியல் நலன்களுக்கான ஒன்றாக அமையும். ஐக்கிய நாடுகள் சபை என்பது அடிப்படையில் வல்லரசு நாடுகளில் அல்லது மேற்கு நாடுகளின் நலன்களுக்கு உட்பட்ட சபையாகவே காணப்படுகிறது. வலுவான நாடுகள் அல்லது அத்தகைய வலுவான நாடுகளுக்கு இசைவாக செயல்படும் நாடுகளின் தலைவர்கள் இத்தகைய இனப்படுகொலையில் இருந்தும் பாதுகாப்பு பெறுகின்றவர்களாக காணப்படுகின்ற மரபு தொடர்ச்சியாக காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு.

எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையானது ஏனைய அம்சங்களை போன்று அரசியல் நலனுக்கானதாக உச்சரிக்கப்படுவதாகவே தெரிகின்றது. இஸ்ரேலை பாதுகாக்கும் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் நியாயாதிக்க செய்முறைகள் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய சூழலுக்குள்ளேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காணப்படுகிறது. ஆனால் நடைமுறையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை வழி நடத்தும் அமைப்புகளும், அதன் பொறுப்புரிமையாளர்களும் மேற்கு நாடுகளின் நலன்களை மாற்றாத வகையில் குற்றச்சாட்டுகளையும் கைதுகளையும் சர்வதேச சட்டங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் விளைவு மாற்றத்துக்கானது அல்ல மாறாக ஏமாற்றத்துக்கான செய்முறை ஒன்றை கையாளுகின்ற உத்தியாகவே காணப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய பிரிவினை கட்டப்பட்டாலும் நடைமுறையில் அதன் நியாயாதிக்கத்தை நிறுவுவதற்கான போலி முயற்சியாகவே இந்த தீர்மானம் காணப்படுகின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division