‘பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற மாபெரும் வெற்றியானது, இந்நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது கொண்டுள்ள நம்பிக்கையை அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது’ என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவைக் குறைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்தும். இதற்காக முன்னுரிமையளிக்கும் துறைகளாக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற துறைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மீது காணப்படும் பெறுமதி சேர் வரியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற மாபெரும் வெற்றியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 159 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய 68 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாட்டின் அரசியல் வரலாற்றில் தனியான ஒரு அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும். நாட்டில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானத்திற்கு வருமாறு நாம் அழைப்பு விடுத்திருந்தோம், இந்த சிரமதானத்தைச் செய்வதற்கு மக்கள் பெக்கோ இயந்திரத்துடன் வந்துவிட்டனர். கடந்த பல தசாப்தங்களாக நிலவிய ஊழல் அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்பதே மக்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
மக்களின் ஆணையுடன் நாம் மிகவும் துடிப்பான பாராளுமன்றத்தை உருவாக்குவோம். இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியானது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி என்ற பதாகையின் கீழ் போட்டியிட்டுள்ளனர். இவ்வாறானதொரு அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட்டதில்லை. நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நாட்டு மக்கள் வலுவான பாராளுமன்ற அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் ஒரே நாட்டின் குடிமக்களாக வாழ விரும்புவதைக் காண்பித்துள்ளனர். மக்கள் வழங்கிய இந்த வலுவான செய்தியை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்கால சந்ததியினருக்காக வளமான நாட்டை உருவாக்கப் பாராளுமன்றத்தில் மறுமலர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த முழு அர்ப்பணிப்புடன் நாம் இருக்கின்றேம். மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றியுள்ளதால், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நனவாக்கும் பொறுப்பையும் அரசு நிறைவேற்றும். தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், பொதுமக்களின் நிதியைக் கொள்ளையடித்த குற்றவாளிகளை கைது செய்ய புதிய சட்டங்கள் வகுக்கப்படும். மோசடி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டைக் கட்டியெழுப்ப மக்களை கைகோர்க்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சி என்ற வகையில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்தும் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. இந்த முன்னேற்றத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் உள்ள மக்கள் தம்மை இனிமேலும் இன, மத அடிப்படையில் தவறாக வழிநடத்த முடியாது என வலுவான செய்தியை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வழங்கியுள்ளனர். முதன்முறையாக யாழ்ப்பாணம் மற்றும் வடக்கின் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது, சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி ஒரே இலங்கைத் தேசமாக முழுநாட்டையும் நம்பிக்கையால் வென்றுள்ளோம். இதனை அடையாளப்படுத்தும் வகையில் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுப்பயணம் செய்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்களை ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லையென்றால் இப்போதாவது கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குமாறும் வடக்கு, கிழக்கு மக்களிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதியின் இந்த அழைப்புக்கு மக்கள் சாதகமாகப் பதிலளித்துள்ளனர், மேலும் நாங்கள் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட மாட்டோம் அல்லது எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக நம்புவதால் எம்முடன் கைகோர்த்துள்ளனர். அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்தி நாங்கள் எங்கள் கடமைகளை மனசாட்சியுடன் நிறைவேற்றுவோம் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த வெற்றிகள் அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் நீண்டகால அரசியல் வரலாற்றில் அதன் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளால் அடையப்பட்டவை என்று நாங்கள் நம்புகின்றோம்.
உங்கள் கருத்துப்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்?
தற்போது இலங்கையில் இளைஞர்களின் வேலையின்மை மிக அதிக அளவில் உள்ளது. அதேபோன்று கல்வித்துறையிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதுடன், சுகாதாரத்துறையும் சில பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே, புதிய அரசு இத்துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தித் துறையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதை மேம்படுத்த அரசின் தலையீடு அவசியம். அந்நிய செலாவணி வருவாயைப் பெறுவதற்கு குறுகியகால தீர்வுகளை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். மக்கள் தடையின்றி மகிழ்ச்சியாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும்.
பொதுத்தேர்தல் காலத்தில் எவ்வித தேர்தல் சட்டமீறலும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்திய அனுபவத்தை மக்கள் பெற முடியும். அதனால்தான் தேர்தல் பிரசாரத்திற்கு அரச வளங்கள் அல்லது அதிகாரங்கள் பயன்படுத்தப்படவில்லை மற்றும் தேசிய மக்கள் சக்தி தேர்தல் சட்டங்களை கடுமையாகப் பின்பற்றியதால் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆட்சியில் இருந்த முன்னாள் அரசாங்கங்கள் தேர்தல் சட்டங்களை மீறி அரச அதிகாரத்தையும் வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தன. இருந்தபோதும் எமது தேசிய மக்கள் சக்தி, அதே பழைய நடைமுறையைப் பின்பற்றவில்லை. தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது. இதுவே நாட்டுக்கு மிகவும் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு சிறந்த நாட்டிற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளோம்.
செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் 14 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட புதிய அரசியல் மாற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென்று நாம் அழைப்பு விடுத்திருந்தோம். இதுதான் நாம் முன்னிலைப்படுத்திய ‘சிஸ்டம் சேஞ்ச்’. நாட்டில் இருந்த பாரம்பரிய அரசியல் கட்சி முறைமைக்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம், இதையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இருந்து விலகி, ஒரு புதிய அரசியல் இயக்கம் உருவாகியுள்ளது, அதைச் சுற்றி மக்கள் திரண்டுள்ளனர்.
நாம் ஏற்கனவே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம், இப்போது பொருளாதார மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டை வளர்ந்த மற்றும் பணக்கார நாடு என்ற நிலைக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம்.
பெருமளவிலான புதிய முகங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை புலனாகின்றது. எவ்வாறாயினும் அனுபவமற்ற அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் அமைக்கப்பட்டால் நாட்டை அபிவிருத்தி செய்யவோ அல்லது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவோ முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி நீங்கள் கூற விரும்புவது யாது?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியால் குளிர்காய்ந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் குழுவினர் பின்னர் இவ்வாறான கோழைத்தனமான கருத்துக்களை வெளியிட்டனர். அவர்கள் தங்கள் கனவுகளைக் கண்டு பயந்து, அத்தகைய கருத்துகளை முன்வைத்திருப்பதாகவே தெரிகின்றது. ரணில் விக்கிரமசிங்க அதிகாலையில் எழுந்தவுடன், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக எதிர்காலத்தில் எதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைத்து நடுங்கக்கூடும். பாராளுமன்றத்தில் ஆசனங்களையும் ஒலிவாங்கிகளையும் உடைத்து, அக்கிராசனத்தின் மீது தண்ணீரை வீசிய அநாகரிகவாதிகளை இனிமேல் பாராளுமன்றத்தில் பார்க்க முடியாது. மக்கள் அவர்களை திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற அனுபவசாலிகள் யார்? மத்திய வங்கியின் பகல் கொள்ளையில் ஈடுபட்டு, சீனி ஊழல், தேங்காய் எண்ணெய் ஊழல், தரமற்ற உர ஊழல், தரமற்ற மருந்து இறக்குமதி என பல கோடிக்கணக்கான பொதுமக்கள் நிதியை மோசடி செய்த பழைய ஊழல்வாதிகளைத்தான் அவர் குறிப்பிடுகிறாரா? எனினும், தேசிய மக்கள் சக்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட குழு ஒரு நல்ல கல்விப் பின்னணியைக் கொண்டுள்ளது. அவர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் கடமைகளைச் செய்த பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
அதிகரித்துக் காணப்படும் வாழ்க்கைச் செலவு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கும்?
அடுத்த வருட ஆரம்பத்தில் எமது அராசங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். பொருட்கள் மீதான வரி எவ்வாறு குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேபோன்று, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தனிப்பட்ட வரிகள் மீதான வரிகளை குறைப்பது குறித்தும் ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே, மக்களுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவது குறித்து ஆலோசித்துள்ளோம். அரசாங்கம் தனது முதல் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும்.