இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்து மாகாணங்களிலுமுள்ள மக்கள் அதற்கு பங்களிப்பு செய்துள்ளனர்.
இனவாதத்துக்கு இடமளிக்கப்படாது:
இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை, சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளையில் அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலிலும் சமூகத்திலும் அவதானித்திருக்கின்றோம். ஆனால், அனைத்து இன மக்களும் எம்மை நம்பிய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
எம்மை நம்பாது ஏனைய கட்சிகளை நம்பும் மக்களும் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமாக அமையாது.
பல்கட்சி முறையை பலப்படுத்துவோம் :
பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்பு ஜனநாயகமாகும். அதேபோன்று பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே, ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து மக்களதும் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகின்றது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம், அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே, அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். அதன் பலனாக எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.
எனவே, நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கையை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளியாமல், இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்துக்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம்.
தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்:
எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்தவிதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்கக்கூடாது என்ற பொறுப்புடன் செயற்படவேண்டும்.
அரசியல் செய்ய, பொருளாதாரம், ஜனநாயகம் என பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம். ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என உறுதியளிக்கிறேன்.
பாராளுமன்றத்தின் கௌரவத்தை மீள ஏற்படுத்துவோம்:
நாட்டு மக்கள் ஆணையில் மற்றுமொரு எதிர்பார்ப்பும் மறைந்திருந்தது. அது நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட முறையற்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதாகும். 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவான நான், 24 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினேன். 24 வருடங்களும் இந்த பாராளுமன்றம் மக்கள் வெறுப்பை தேடிக்கொண்ட காட்சிகளை கண்ணால் கண்டுள்ளேன். பாராளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததை அவதானித்திருக்கின்றோம். சபைக்குள்ளும் சபைக்கு வெளியேவுள்ள மக்கள் மத்தியிலும் இந்த உயர் சபை தொடர்பான நம்பிக்கை படிப்படியாக அற்றுப்போனது. உயர்வான ஒரு சபையில் இருந்துகொண்டு மக்களை புறக்கணிக்கும், மக்கள் வெறுப்பை தூண்டும், மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறானதொரு பாராளுமன்றம் இந்த நாட்டை ஆள்வதற்கு பொருத்தமானதாக அமையுமென நான் நம்பவில்லை. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பொருத்தமானது அல்ல. அந்த பாராளுமன்றம் மக்களின் நிதி, அதிகாரத்தை கையாள்வதற்கு பொருத்தமற்றது. மக்கள் நிதியை கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கே உள்ளது.
எனவே, தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான பாராளுமன்றமாக இருக்க முடியாது. இந்தப் பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். இப் பாராளுமன்றம் பெருமளவான புதிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்துள்ளது. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை துரிதமாக வழங்கக்கூடிய பாராளுமன்றம் இது.
புதிய சபாநாயகரும் பணிக்குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இந்த பாராளுமன்றத்தை மீள்கட்டமைக்க ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கு மறைவான குகையாக இருக்கக்கூடாது. இந்தப் பாராளுமன்றத்தில் போதுமான நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கமைய நாளாந்தம் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக இருக்கும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது.
மக்களுக்கு வெளிப்படையான நிலையமாக மாற்ற நாம் தொடர்ந்தும் முயற்சிசெய்து வருகிறோம். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாயின் நாம் பேசும் விடயம், நடத்தை, வெளியிடும் கருத்து என அனைத்தும் மக்கள் முன்னிலையில் ஆராயப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதே இறுதிமுடிவு என நான், யாராவது நினைப்பதாக இருந்தால் அது இறுதியானதல்ல. அடுத்த அதிகார பரிமாற்றம் வரை மற்றும் அடுத்த மக்கள் ஆணை உரசிப்பார்க்கப்படும் வரை எம்மை பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்குள்ளது. இந்த பாராளுமன்றம் எதிர்வரும் சில வருடங்களில் மக்களின் பரிசோதனையில் சித்தியடைந்த பாராளுமன்றமாகும் என கருதுகிறேன். அதற்கு சபாநாயகரதும் எம்.பிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும்
இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்துக்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள் ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பாக மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் சில பாதகமான எண்ணங்கள் காணப்படுகிறது. அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பாகவும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையுமே எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.
மக்கள் ஆணையின்போது, சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கச்சார்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை. உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது.
அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள், இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும். அதனால் செயற்றிறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவையை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கு அரச சேவையிலிருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அது தொடர்பாக நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஜனநாயக அரசை உருவாக்குவோம்:
விசேடமாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பாக, நாட்டின் அனைத்து பிரஜைகளும் தாம் பின்பற்றும் மதம், மொழி மற்றும் கலாசாரத்துக்கமைய தனிமைப்படத் தேவையில்லை.
தாம் பின்பற்றும் மதம் தனக்கு மேலதிக அழுத்தத்தைத் கொடுப்பதாக எண்ணத் தேவையில்லை. தமது கலாசாரம் தனக்கு மேலதிக அழுத்தம் தருவாதாக நினைக்கத் தேவையில்லை.
தாம் ஆதரிக்கும் அரசியல் மேலதிக அழுத்தம் கொடுப்பதாக கருதத் தேவையில்லை. அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குமிடையில் தமக்கென தனித்துவங்கள் இருக்கலாம். ஆனால், சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது.
எனவே, அச்சமோ, சந்தேகமோ இன்றி ஜனநாயக நாடொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம் :
மேலும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது பிரதானமானதாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதென்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களின் ஊடாக மாத்திரமல்ல.
இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சமயங்களில் நீண்ட கலந்துரையாடல்கள், தொடர்ச்சியான விவாதங்களின் ஊடாக முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். சட்டங்களை நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல. அவற்றை உரிய வகையில் அமுல்படுத்த வேண்டும்.
அதேபோன்று சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கை தகர்ந்துள்ளது.
தமக்கு ஏதாவது அநீதி நடந்தால் சட்டத்தின் முன்பாக சென்று நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அந்த அநீதிக்காக சட்டத்தின் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுக்கள் மத்தியில் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தாமல் நல்லாட்சியொன்றை கட்டியெழுப்ப முடியும் என நாம் கருதவில்லை. சிறந்த ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு சட்டத்தின் ஆட்சி அதில் பிரதான அம்சமாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
நாம் அரசு என்ற வகையில், ஜனாதிபதியும் அரசாங்கமும் சட்டத்துக்கு உட்பட்டுள்ளன. எந்தவொரு அரசியல்வாதியோ அதிகாரமுள்ள எவருமோ இனிமேல் சட்டத்தை விட உயர்வாக இருக்கமாட்டார். அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்படவேண்டும். அதேபோன்று சட்டம் மீதான மக்களின் வீழ்ச்சியடைந்த நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படவேண்டும். இதில் எவரிடமும் பழிவாங்கவோ, துரத்திச் சென்று வேட்டையாடும் நோக்கமோ எமக்குக் கிடையாது. அனைவரினதும் அரசியல் செய்யும் சுதந்திரத்தை உறுதி செய்வோம்.
பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்:
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பல குற்றச்சம்பவங்கள் உள்ளன. அவை காலப்போக்கில் மூடிமறைக்கப்படும் என குற்றவாளிகள் நினைத்தால், அது சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை வீழுச்சியடையச் செய்வதாக அமையும். சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருந்தால் சர்ச்சைக்குரிய குற்றச்செயல்கள் தொடர்பாக மீள விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் நடந்துள்ள குற்றச் செயல்கள் அரசியல் மேடைகளில் அரசியல் கோசங்களாக பயன்படுத்தப்பட்டன. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அது தொடர்பாக நியாயத்தை நிலைநாட்ட தவறியுள்ளன.
சர்ச்சைக்குறிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை அம்பலப்படுத்துவோம். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவோம். பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை நிலைநாட்டுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். சட்டம், நியாயம் என்பன நிலைநாட்டப்படும் ஆட்சியொன்று எமக்கு அவசியம். அதனை இந்த மக்கள் ஆணையிலாவது நிலைநாட்ட தவறினால் மீள அவ்வாறான ஆட்சிதொடர்பாக கனவு காண்பதில் எந்தப் பயனும் இல்லை.
இந்த மக்கள் ஆணையில் அந்த நோக்கம் உள்ளது. அந்த ஒப்பாரி உள்ளது. இந்த மக்கள் ஆணையில் தமது இறந்த உறவினரின் வெளிப்பாடுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நண்பர்களின் ஒப்பாரி இந்த மக்கள் ஆணையில் இருக்கின்றது. அவர்களுக்கு நாம் நியாயத்தை நிலைநாட்டாவிட்டால் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? யாருக்குப் பொறுப்புக்கொடுக்க முடியும்?
அவற்றை நிறைவேற்றாவிட்டால் நீதி, நியாயம் தொடர்பான கனவுகள் இந் நாட்டில் மடிந்து போய்விடும். கனவில் கூட நீதி, நியாயம் தொடர்பான எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படும் என நினைக்கவில்லை.
அதனால் நீதி, நியாயம் இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும். குற்றங்கள் தொடர்பாகவும் ஊழல் மோசடி தொடர்பிலும் சட்டத்தை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியையும் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையையும் மீள உறுதிப்படுத்துவோம். அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நாம் செய்யாவிட்டால் யார் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எம் முன் உள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்