காசா உட்பட பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பிரதேசங்களில் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துவரும் முன்னணி நிறுவனமான ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிவாரண அமைப்பை (UNRWA) இஸ்ரேல் தடை செய்து சட்டம் நிறைவேற்றியுள்ளது.
அத்தோடு காசா, மேற்குக்கரையில் மனிதாபிமானப் பணிகளை இந்த அமைப்பு முன்னெடுக்கவென 1967 இல் செய்து கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த திங்களன்று இஸ்ரேல் அறிவித்தும் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர்த் தாக்குதலில் யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ அமைப்பில் பணியாற்றுபவர்களும் பங்குபற்றியதாகவும், தீவிரவாதத்துக்கு இந்நிறுவனம் உதவுவதாகவும் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இஸ்ரேல் குறிப்பிட்டது. இக்குற்றச்சாட்டின் பின்னணியில் இந்நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கும் முஸ்லிம் நாடுகளும் நோர்வேயும் தவிர்ந்த அமெரிக்கா, இத்தாலி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பலவும் நிதியுதவியை நிறுத்தின.
இஸ்ரேலின் இக்குற்றச்சாட்டை நிராகரித்த இந்நிறுவனம், தமது பணியாளர்கள் பங்குபற்றியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு இஸ்ரேலிடம் கோரியது. அதற்கேற்ப 12 பேரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வழங்கியது. ஆனால் அவர்களில் இவ்வமைப்பில் பணியாற்றி ஏற்கனவே விலகிச் சென்றவர்களும் அடங்கி இருந்தனர். அத்தோடு ஒன்பது பேரை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியது யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனம்.
இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் பெரும்பாலானவை கடந்த ஏப்ரல், மே மாதங்கள் முதல் மீண்டும் நிதியுதவி வழங்க ஆரம்பித்தன.
ஆனால் இஸ்ரேல் கடந்த ஜுலையில் திடீரென யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனத்தில் ஹமாஸையும் ஏனைய பலஸ்தீன குழுக்களையும் சேர்ந்த 100 பேர் உள்ளதாகக் குற்றம் சாட்டியது. அக்குற்றச்சாட்டை நிராகரித்த இந்நிறுவனம், அதற்கான ஆதாரங்களையும் கோரியது.
ஆனால் ஆதாரங்களை வழங்காத நிலையில்தான் இஸ்ரேல் இவ்வமைப்பை தடைசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதற்கென இரண்டு சட்டங்களை கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இஸ்ரேல் நிறைவேற்றியது.
இவற்றில் முதலாவது சட்டம் இஸ்ரேலுக்குள் எந்த நடவடிக்கையையும் அல்லது சேவையையும் யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனம் முன்னெடுப்பதை தடைசெய்யக்கூடியதாகும். இச்சட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் 92 – 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இரண்டாவது சட்டம் யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாக அறிவிப்பதற்கும், இஸ்ரேலியர்கள் இந்த முகவரகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதை தடை விதிப்பதற்குமான சட்டமாகும். இச்சட்டம் 87 – 09 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் அடுத்துவரும் 90 நாட்களுக்குள் நடைமுறைக்கு வர உள்ளன. இச்சட்ட ஏற்பாடுகள் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ வளாகத்தை மூடுவதற்கு வழிவகுக்கும். அத்தோடு மேற்குக்கரை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவில் இந்நிறுவனம் பணிகளை முன்னெடுக்கவும் தடைவிதிக்கும்.
இச்சட்டங்களின்படி தமது பிரதேசங்களிலும் குறிப்பாக தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களிலும் இந்நிறுவனம் செயற்பட இடமளிக்க முடியாதென்கிறது இஸ்ரேல். குறிப்பாக கிழக்கு ஜெரூஸலம், காசா, மேற்குக்கரை ஆகிய பிரதேசங்களில் இவ்வமைப்பு செயற்பட இச்சட்ட ஏற்பாடுகள் தடைவிதிக்கின்றன. ஆனால் இப்பிரதேசங்கள் பலஸ்தீன அதிகார சபையின் கீழ் உள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புக்குள் ஹமாஸ் ஊடுருவி இருப்பதாகக் குறிப்பிட்டு இஸ்ரேல் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போதிலும் அக்குற்றச்சாட்டை யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ மற்றும் ஐ.நா. முகவரகங்கள் மறுத்துள்ளன.
இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனத்தின் தலைவர் பிலிப் லஸ்ஸரினி தமது ‘எக்ஸ்’ தளத்தில், ‘பலஸ்தீன மக்களின் துன்பத்தை ஆழமாக்கும் நடவடிக்கை இது’ என்று பதிவிட்டார்.
இந்நிறுவனத்தின் மீதான இஸ்ரேலின் தடையானது காசாவில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்வதில் மேலும் தடங்கல்களை உருவாக்கலாம் என மனிதாபிமான நிவாரண அமைப்புகள் எச்சரித்துள்ளன.
யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ வின் வெற்றிடத்தை ஐ.நா முகவர் நிறுவனங்களாலும் ஏனைய தொண்டர் அமைப்புக்களாலும் நிரப்ப முடியும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள போதிலும், காசா உள்ளிட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் பணியாற்ற யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனத்தின் அவசியத்தை அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
‘குறிப்பாக யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ. நிறுவனம் காசாவில் அவசரகால நிவாரண முகாம்கள், பாடசாலைகள், சுகாதார மத்திய நிலையங்கள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் என்பவற்றை முன்னெடுக்கின்றன. அவற்றின் நிர்வாகங்களை எங்களால் கையாள முடியாது’ என்று உலக உணவுத்திட்ட பெர்லின் அலுவலகத் தலைவர் மார்ட்டின் ஃப்ரிக் தெரிவித்திருக்கிறார். உலக உணவுத் திட்டம், உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட ஐ.நா. நிறுவனங்கள் யூ.என்.ஆர்.டப்ளியூ. ஏ போன்று காசா உள்ளிட்ட மக்களுக்கு வேறொரு தொண்டர் அமைப்பினால் பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளன.
காசா மீது ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் கடும் யுத்தத்தை முன்னெடுத்துவரும் சூழலில் அங்கு பட்டினி, பஞ்சம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக உலக உணவு திட்டம் எச்சரித்திருக்கிறது. இருந்தும் காசாவுக்குள் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு இஸ்ரேலிய படையினர் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் அமுல்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் இஸ்ரேல் ஜ.நா.வின் தொண்டர் அமைப்பை தடை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பமதானது காசாவின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் சிக்கல் மிக்கதாக்கும் என்று மனிதாபிமான உதவி நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார பேச்சாளர் மத்திவ் மில்லர், இஸ்ரேலின் இச்சட்டங்களையிட்டு ஆழ்ந்த கவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இச்சட்டங்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனித குலத்தின் அடிப்படைக் கொள்கைக்கும் முற்றிலும் முரணாக உள்ளது என்றுள்ளார்.
அத்தோடு இச்சட்டம் தொடர்பில் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடுமையான கவலையை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டனர். ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் உலகின் பல நாடுகளும் இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நடவடிக்கையின் விளைவாக காஸாவில் 20 இலட்சம் மக்களுக்கான உணவு மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிகள் ஸ்தம்பிதமடையும் என்று யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலிட்டி தௌமா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் ‘ஹாட்ரெஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ காஸாவில் 700 பாடசாலைகளை நடத்துவதாகவும் அங்கு 4 இலட்சம் பிள்ளைகள் கல்வி பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ‘யூ.என்.ஆர்.டப்ளியூ. ஏ தொடர்பில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. சட்டத்தரணிகள் மீளாய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ நிறுவனமானது பலஸ்தீனில் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 1949 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஸ்தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பலஸ்தீன மக்களுக்காக கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சிகள், சமூக சேவைகள், மனிதாபிமான நிவாரண உதவிகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. அதாவது இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன மக்கள் தங்கியுள்ள காஸா, மேற்கு கரை, கிழக்கு ஜெரூஸலம், ஜோர்தான், லெபனான், சிரியா ஆகிய பிரதேசங்களில் இந்நிறுவனம் செயற்படுகின்றது.
பலஸ்தீன மக்களுக்காக ஏழு தசாப்தங்களாகப் பணியாற்றிவரும் இந்நிறுவனத்தின் 2019 பதிவுகள்படி, பலஸ்தீனின் 59 இலட்சம் மக்கள் காஸா, மேற்குகரை ஆகிய பிரதேசங்களிலும் லெபனான், ஜோர்தான். சிரியா ஆகிய நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட 59 முகாம்களில் தங்கியுள்ளனர். காஸாவில் மாத்திரம் பாரிய 8 முகாம்கள் உள்ளன. அவர்களுக்காகப் பணியாற்றும் இந்நிறுவனத்தில் 30 ஆயிரம் பேர் கடமையாற்றுகின்றனர். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்தினால் இந்நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர்.
மர்லின் மரிக்கார்