இலங்கை அரசியல் பாதையில் என்றுமே மாற்றம் காணும் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு மாவட்டமாக பதுளை காணப்படுகிறது. எப்போதும் ஒருபக்க சார்பின்றி அரசியல் நாகரீகம் கற்றுக் கொடுக்கும் வாக்காளர் நிறைந்து காணப்படும் இம்மாவட்டத்தில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதும் விசேட காரணியாக அமைகின்றது. சிங்கள வேட்பாளர்களை தம்மை தேடி வரும்படி செய்யும் வெலிமடை, பசறை, அப்புத்தளை பகுதிகளில் நாற்பது சதவீத தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதனால் இறுதி நேரத்தில் பெரும்பான்மை கட்சி வேட்பாளர்கள் முகாமிட்டு வாக்கு தேடும் தொகுதிகளாக அவை விளங்குகின்றன.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சக்தி 219,647 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 197,283 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 115,138 வாக்குகளையும் பெற்றிருந்தன. மாவட்டத்தில் 22,364 மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி முதலிடம் பிடித்தது. கடந்த ஒரு மாதமாக அரசியல் மாற்றத்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் மனங்களை கவர்ந்து வருவதினால் இம்முறை அக்கட்சி முதன்மை இடம்பெறும் நிலையை உறுதி செய்துள்ளது.
கடந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாவார் என்று தொழிற்சங்க பிரசாரம் அவருக்கு 115,138 வாக்குகளை பெற்றுக் கொடுத்தது. இம்முறை அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அரவிந்தகுமார் தனிச் சின்னத்தில் அவரின் ஆதரவாளர் பதினொரு பேருடன் போட்டி இடுவதால் சுமார் முப்பதாயிரம் வாக்குகள் பிரிந்து செல்கின்றன. அதுபோலவே முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷும் புதிய சின்னம் ஒன்றில் போட்டியிடுவதால் அவருக்கு முப்பதாயிரம் வரை வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க அணியிலிருந்து பிரிந்து செல்கிறார்.
எனவே பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கடந்த முறையை விட குறைவான வாக்குகளை எடுத்து மூன்றாம் இடத்திலேயே பின்னணியில் உள்ளது. அக்கட்சி எந்த கட்சியின் வாக்குகளையும் பிரித்தெடுக்க முடியாமல் உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய வாக்குகள் இல்லாவிட்டாலும் தாம் பெற்ற வாக்குகளை தக்க வைத்திருப்பதிலேயே குறியாக உள்ளது. அதற்காக வெளிமடையில் முஸ்லிம் வேட்பாளரை இறக்கியும், அப்புத்தளையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் கட்சியின் பிரதேச சபை தவிசாளரை தமது கட்சி சார்பாக போட்டியிட வைத்துள்ளது.
இதனைக் கண்ட திகாம்பரம் கட்சியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர் ரணிலின் கட்சிக்கு சென்று வேட்பாளராக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் அப்புத்தளை தொகுதியில் அக்கட்சி சுமார் ஐயாயிரம் ஆதரவாளரை அம்பிட்டிகந்த, கொஸ்லாந்தை பகுதியில் இழந்துள்ளது. வெலிமடை முஸ்லிம் வாக்கை காக்க ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்ட நிலையில் இடையில் வடிவேல் சுரேஷ் குருத்தலாவ பகுதியிலிருந்தும் ஹாலி எல பகுதியிலிருந்தும் இரு முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார். இவற்றை விட மேலும் பதினைந்து முஸ்லிம் வேட்பாளர்களும் மக்களுக்கு தெரியாத கட்சிகளில் போட்டி இட்டு தமக்குள்ள நாற்பதாயிரம் வாக்குகளை ஆயிரம் ஆயிரமாக பங்கு போட்டுக் கொள்ள ஆசைப்படுகின்றனர். இதனால் முஸ்லிம் வாக்குகளால் வெற்றி பெற போவது ஒரு பெரும்பான்மை கட்சி உறுப்பினராகவே அமையவுள்ளார்.
தமிழ் மக்களின் ஒரு இலட்சத்து இருபதாயிரம் வாக்குகளை பெற்றுக் கொள்ள நூறு தமிழ் வேட்பாளர்கள் உள்ளார்கள். புதிய பெயரில் புதிய சின்னங்களில் கொத்து கொத்தாக தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. இந்த நூறு பேரும் வாக்கை பகிர்ந்து கொண்டால் ஒருவருக்கு ஆயிரத்து இருநூறு வாக்குகள் மட்டுமே கிடைக்கும். இன்றேல் எவரும் நாடாளுமன்றம் செல்ல முடியாமல் போகும் நிலை உருவாகும். தமிழ் பெண்கள் இருபது பேர் போட்டியிடுவதால் ஏதோ அரசியல் எழுச்சி ஏற்பட்டதாக கருத முடியாது. சில ஆண்களால் அவர்கள் தவறான அரசியல் சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
இம்முறை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அணுகுமுறையை சிறப்பானதாக அவதானிக்க முடிகிறது. தொழிற் சங்கங்கள் மறந்த பசறை தொகுதிக்கு கிட்ணன் செல்வராஜையும், அப்புத்தளை தொகுதிக்கு செல்வி அம்பிகா சாமிவேலையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளனர். சிங்கள மக்கள் வாழும் கிராமங்களிலும் தமிழர்களுக்கு வாக்கு கேட்கும் தொண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லா நகரங்களிலும் தமிழ், சிங்கள வேட்பாளர் இணைந்து நிற்கும் பதாதைகள் காணப்படுகின்றன. அதனால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து இரண்டு தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க இருப்பதானது இந்நாட்டின் இன, குரோத சிந்தனையை தீயிட்டு கொழுத்தும் செய்தியாகவே பதுளையில் காணப்படுகிறது.
அதிகமான பணவசதி, அதிகமான சந்தாவசதி, மத்திய மாகாண தலைவர்கள் வந்து ஆதரவு திரட்டும் கூட்டங்கள், மதுபான அவசர பிறந்தநாள் விருந்துகள் இவை எவையுமில்லாமல் சாதாரண தொழிலாளர்களின் பிள்ளைகளும் நாடாளுமன்றம் செல்லமுடியுமென்ற ஒரு ஜனநாயக தேர்தலை தொழிலாளர் வர்க்கம் இன்று சந்திக்கிறது. முதலாளித்துவத்திடம் பேரம் பேசும் சக்தி இழந்த தலைமைகள் தோல்வியை சந்திக்கின்றன. இளைஞர் சக்தி வெற்றி பெறுகிறது. கொழும்பிலும், கல்முனையிலும் செந்தமிழால் ஆட்சிமாற்றம் கொண்டுவந்த தமிழ் உறுப்பினர்கள் பதுளையில் வெற்றி பெறுவார்கள். அவர்களை வரவேற்க கிராம மக்களும், தோட்ட மக்களும் ஆரவாரமின்றி புன்சிரிப்போடு காத்திருக்கிறார்கள்.
பூனாகலை நித்தியஜோதி