சின்னச் சின்ன அடியெடுத்து
சிந்தை குளிர படிநடக்கும்
அன்பு மகளே ஆருயிரே
அப்பா சொல்வதைக் கேளம்மா
அன்னை யன்பே உயர்வம்மா
அவளே யுனது உயிரம்மா
அன்பா யவளை பாரம்மா
அதனா ளருளை சேரம்மா
உற்றார் உறவைப் பேணம்மா
ஒற்றுமையி லுயர்வை காணம்மா
கற்றார் மனதை வெல்லம்மா
கசப்பினு முண்மை சொல்லம்மா
சிறுவருக் கன்பை காட்டம்மா
சிறப்பை வாழ்வில் கூட்டம்மா
பெரியவர் மனதில் ஒட்டம்மா
பெருமையை மண்ணில் ஓட்டம்மா
கருணையா லுலகை ஆக்கம்மா
கசடுகளை மனதில் போக்கம்மா
பேராசை மண்ணில் நீக்கம்மா
பெரியோர் வழியை நோக்கம்மா
உயிர்களை யுறவாய்க் கொள்ளம்மா
உன்னத அறிவைக் கல்லம்மா
பயிர்ப்புடன் வாழ பழகம்மா
படித்தவரைக் கண்டால் புகழம்மா
கடமைகள் செய்து வாழம்மா
கடவுளைத் தொழுது கேளம்மா
மடமையி லிருந்து மீளம்மா
மதியா லுலகை ஆளம்மா
விண்ணும் மண்ணும் உனதம்மா
வையகமே யுனக்கு உறவம்மா
மண்ணை பொன்னாய் மாற்றம்மா
மனதா லிறையைப் போற்றம்மா
காலையில் விழித்து எழம்மா
கடவுளை துதித்துத் தொழம்மா
மாலையில் ஓடி ஆடம்மா
மறையை யொருதரம் ஓதம்மா
அன்னையாய் குருவை
போற்றம்மா
அவரன்பை மனதில் ஏற்றம்மா
உண்மையா லுயர்வை எட்டம்மா
உத்தமியாய் வாழ்ந்து காட்டம்மா