பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் யாவும் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த தடவை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் போன்று எதிர்வரும் பொதுத்தேர்தலும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டதாகவே உள்ளது. நாட்டு மக்கள் ‘முறைமை மாற்றம்’ ஒன்றை நாடி நின்றதனால், பாரம்பரியக் கட்சிகளையும் பின்தள்ளி விட்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது மிகவும் பரபரப்பு நிறைந்ததாகும்.
பாரம்பரியக் கட்சிகள் இத்தனை தூரம் பின்தள்ளப்பட்டுள்ளதும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதும் வரலாற்றுப் புதுமைகளாகும். இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவிவந்த விரக்தியின் வெளிப்பாடே இதுவாகும். ‘முறைமை மாற்றம்’ ஒன்றின் ஊடாக நாட்டில் ஊழல் மோசடிகள் மற்றும் வீண்விரயங்களைத் தவிர்த்து நீதியான ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென்பதே மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது.
அதன்படி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற வேண்டுமானால், தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றப் பெரும்பான்மை அவசியமாகும்.
பாராளுமன்றமானது சட்டத்தை உருவாக்குகின்ற சபை ஆகும். பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டத்திருத்தங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.
எனவேதான் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தேசிய மக்கள் முன்னணியானது மக்களின் ஆதரவைக் கோருகின்றது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு மக்களின் ஆணையைக் கோருகிறது தேசிய மக்கள் முன்னணி.
எனவேதான் பொதுத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது தேசிய மக்கள் முன்னணியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு பொதுத்தேர்தல் முடிவுகள் அவசியமாகின்றன.