பேருவளை, சீனன்கோட்டை சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50 ஆவது வருட பூர்த்தி விழா (பொன் விழா) நிகழ்வுகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
கழகத்தின் பொன் விழாவை முன்னிட்டு, பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்படுகிறது.
சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் யாகூத் நளீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொன்விழா நிகழ்வில், பிரதம அதிதியாக ஜேர்மன் கிங்ஸின் கிரேஸ் மாநில முன்னாள் முதலமைச்சர் கர்ள் எகோபர் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும் பல முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இன்று மாலை நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வில் விசேட அம்சமாக சன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் இலங்கையின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான கொழும்பு சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகமும் நட்புரீதியான கண்காட்சி போட்டியில் பங்கேற்கவுள்ளன. போட்டி இன்று மாலை 6.15 மணிக்கு மின்னொளி போட்டியாக நடைபெறவுள்ளது.
பொன்விழாவை முன்னிட்டு முழு மைதானமும் விழாக்கோலம் பூண்டுள்ளது . சன்ரைஸ் விளையாட்டுக் கழகம் வெறும் விளையாட்டு கழகமாக மாத்திரமன்றி சமூக சேவை அமைப்பாகவும் ஊருக்கும் ஊருக்கு வெளியிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருவதை நன்றியோடு நினைவுகூர்வது காலத்தின் தேவையாகும். இன்றைய நிகழ்வில் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களும் கௌரவிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத்தின் செயலாளர் கிஸான் ஹாஷிம் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.
அஜ்வாத் பாஸி