நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கொழும்பின் தமிழ் வாக்காளர்கள் தெரிவுசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் தெரிவித்தார்.
இத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனோடு இணைந்து போட்டியிடும் ARV லோஷன் என்று அறியப்படும் வாமலோஷனன், நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்.
“கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவுசெய்யப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக இது நடைபெறவில்லை என்பது வேதனைக்குரியது. இதனால், தலைவர் மனோ கணேசன் மாத்திரமே கொழும்பில் வாழும் தமிழ் மக்களுக்குரிய ஒரே பிரதிநிதியாக இருக்கிறார்.
தேசிய ரீதியில் கிளை பரப்பி இருக்கும் ஒரு கூட்டணியின் தலைவராகவும் வளர்ச்சி கண்டிருக்கும் அவருக்கு இருக்கும் பெரும் சுமைகளின் மத்தியில், கொழும்பு மாவட்ட மக்களுக்கு இன, மத பேதம் பாராமல் உழைக்கும் கடமையையும் அவர் சுமந்துள்ளார். சளைக்காமல் மலையகம், வடக்கு, கிழக்கு ஆகிய பிராந்தியங்களுக்கும் குரல் கொடுத்துக்கொண்டே தலைநகரத் தமிழ் பேசும் மக்களுக்கும் பணியாற்றும் அவரது கரங்களை பலப்படுத்த இன்னுமொரு பிரதிநிதியையும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது மிக அவசியமானதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“இலங்கையில் பெரும்பான்மையின மக்கள், மாற்றத்துக்காக வாக்களிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படும் நிலையில், அம்மாற்றத்துக்கு மத்தியில் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்பட அனுமதிக்கக்கூடாது.”
“இதற்கு முன்னர் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டபோது, கொவிட் நோய் காரணமாக இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அவர்களது மதக் கோட்பாட்டுக்கு விரோதமாக எரிக்கப்பட்டன.
இன்னமும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன” எனச் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர், கொழும்பில் தற்காலிகமாக வாழ்ந்த தமிழ் மக்களும் இவ்வாறானதொரு அறுதிப்பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் ஒன்றிலேயே திருப்பியனுப்பப்பட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய ARV லோஷன், அப்போதும் தலைவர் மனோ கணேசன் அதற்காகப் போராடியதையும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அதிகரித்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் ஒருமுகமாக வாக்களித்தால், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது கடினமானதாக இருக்காது. ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களால் போதிய தாக்கத்தைச் செலுத்த முடியாது போயிருக்கலாம். ஆனால், பாராளுமன்ற தேர்தலில் எமது மக்கள் முன்னரை விட அதிக ஆர்வத்தோடு வாக்களிக்க தயாராகி உள்ளதை இன்று அவதானிக்க முடிகிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசிச் சின்னத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், ARV லோஷனும் போட்டியிடுகிறார்கள்.