பொதுத்தேர்தல் பரபரப்பு நாடெங்கும் அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்விதமான பெரும் பரபரப்பு நிலவியதில்லை, வன்முறைச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியிருக்கவில்லை. ஆனால் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான பரபரப்பு நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஓரிரு தரப்புகளுக்கு இடையில் மாத்திரமே போட்டி நிலவியது. எனவே போட்டாபோட்டிகள் குறைவாகவே இருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் என்பது அவ்வாறில்லை. பல்வேறு கட்சிகள் இத்தேர்தலில் குதித்துள்ளன. ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களே விருப்புவாக்குக்காக முட்டிமோதிக் கொள்கின்ற விசித்திரமான நிலைமையைக் காண முடிகின்றது.
விருப்புவாக்குக்காக மோதிக் கொள்ளாத கட்சியாக தேசிய மக்கள் சக்தியை மாத்திரமே குறிப்பிட முடியும். தங்களது கட்சிக்கு ஆதரவு தேடுவதிலேயே தேசிய மக்கள் சக்தியினர் அக்கறையாக உள்ளனர். எனவே பொதுத தேர்தல் களத்தில் இன்று நிலவுகின்ற போட்டாபோட்டிகளில் ஏனைய கட்சிகளே சம்பந்தப்பட்டிருக்கின்றன.
அதேசமயம் வாக்குகளை வசீகரிப்பதற்காக வேட்பாளர்களில் பலர் மக்கள் மத்தியில் ஆற்றுகின்ற உரைகள் நாகரிகமானதாக இல்லை. எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் அபாண்டம் சுமத்துவதைக் காண முடிகின்றது. சிலரது தேர்தல் பரப்புரைகள் சட்டத்துக்கு விரோதமான முறையிலும் உள்ளன.
அரசியல் எதிராளியை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் இவ்விதம் செயற்படுவது முறையல்ல. நாட்டில் சிறப்பான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல்வாதிகள்தான் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடலாகாது.
இதுஇவ்விதமிருக்க, தேசிய மக்கள் சக்தியின் மீது அதன் எதிர்த்தரப்புகள் சுமத்துகின்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று சொற்ப காலமே கடந்துள்ள நிலையில், எதிர்த்தரப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியினால் மக்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தமை உண்மை. ஆனால் ஓரிரு மாதகாலத்தில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றி விடுவோமென்று தேசிய மக்கள் சக்தியினர் மக்கள் மத்தியில் ஒருபோதுமே கூறியதில்லை. அத்தனை உறுதிமொழிகளையும் ஓரிரு மாதங்களில் நிறைவேற்றிவிட முடியுமென்று எதிர்பார்ப்பதும் தவறு.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அத்தேர்தலில் பாராளுமன்ற பலத்தைப் பெற்றதுமே தேசிய மக்கள் சக்தியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமென்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றப் பலத்தையே தேசிய மக்கள் சக்தி இன்று மக்களிடம் கோருகின்றது. ஜனாதிபதிப் பதவியென்பது அனைத்தையும் ஒரே ஆணையில் நிறைவேற்றுவதற்கான சர்வாதிகாரம் கொண்டதல்ல என்பதை எதிர்த்தரப்பினர் புரிந்து கொள்வது அவசியம்.