நான்
ஒரு திறந்த புத்தகம்
தலைப்பை மட்டுமே வாசித்து
தவறாக புரிந்து கொள்ளும்
ஒரு சமூகத்தால்
சூழப்பட்டிருக்கிறேன்.
என் அட்டைப் படத்தை
எதிர்மறையாய் பார்த்து
விமர்சனத் தீ மூட்டும்
விருப்புக்குரிய
விரோதிகளும்
என்னை
ஒரு முறையாவது
வாசிக்க வேண்டுமென்று யாசிக்கிறேன்.
ஆனால்
சிலர் மட்டுமே
என்னை
திறந்து பார்க்கிறார்கள்.
எளிமையாக
இனிமையாக
இதயங்களை
வருட நினைக்கும்
என் வாழ்வியல் வரிகளை
வாசிக்காமலேயே
தூஷிக்கிறார்கள்.
முதல் பக்கங்களிலேயே
சிலர்
என் முதுகில் குத்துகிறார்கள்
நடுப்பக்கம் வரை வரும்
நண்பர்கள் கூட
நடுவில்
என்னை முறிக்கிறார்கள்.
என்னை
முழுசாய் படியுங்கள்
புரிந்து கொள்வீர்களென்று
புலம்பிய போதும்
அரைகுறையாய் படித்து
அசிங்கப்படுத்துகிறார்கள்
என்னிதய பக்கங்களில்
உயிர் எழுத்துக்களாக
ஒட்டி வைத்த
உறவுகள் கூட
அவ்வப்போது
கழன்று விழுந்து
என்னை தவறாக
அர்த்தப்படுத்துகிறார்கள்.
சிலர்
எனது விலக்கல்களை
ஏவல்கள் என்கிறார்கள்
இன்னும் சிலர்
முற்றுப் புள்ளியை
தொடக்கப் புள்ளி என்கிறார்கள்
வினாக்களை
விமர்சனம் என்கிறார்கள்.
இந்த
எளிய புத்தகத்தைப்
புரிந்து கொள்வதில்
இத்தனை சிக்கல்களா..?
பொறாமை
குரோதம்
வஞ்சகம்
தாழ்வு மனப்பான்மை
என்ற கண்ணாடிகளை
கழற்றி வைத்துவிட்டு
என்னை படியுங்கள்
அப்போது
நானும்
ஒரு மனிதனாக தெரிவேன்.