Home » சுபீட்சமும் ஜனநாயகமும் மேலோங்க கட்டியம் கூறுமா பொதுத் தேர்தல்?

சுபீட்சமும் ஜனநாயகமும் மேலோங்க கட்டியம் கூறுமா பொதுத் தேர்தல்?

by Damith Pushpika
October 27, 2024 6:30 am 0 comment

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று சுமார் ஒரு மாத காலமாகிறது. புதிய ஜனாதி பதியின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் நாடு புதிய திசையில் நகர ஆரம்பித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் 76 ஆண்டு கால வரலாற்றில், இந்தத் தேர்தல் ஒரு பெரும் திருப்புமுனை அல்லது தளமாற்றம் (Paradigm Shift) என்றே பரவலாக உணரப்படுகிறது. சமீபத்திய அரசியல் போக்குகளில், இதனை ஒரு தீர்க்கமான நகர்வாகக் கணிக்கின்றனர்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 3% வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, 2024 ஜனாதிபதித் தேர்தலில் முதன்மையான கட்சியாக முன்னேறியது எப்படி? 3 வீதம் 42 வீதமானதன் பின்னாலுள்ள சமூக- அரசியல் காரணிகள் யாவை?

உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களினதும் பகுப்பாய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்திருக்கும் மிக முக்கியமான அம்சமாக இதுவே உள்ளது.

இப்போது பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். 42% மக்கள் ஆதரவு 50-–60% ஆக வளரும் என்ற கணிப்புகள் பல வெளிவந்த வண்ணமுள்ளன.

தேர்தல் அலையைப் பொறுத்த வரை பாகம் -1 ஐ (ஜனாதிபதித் தேர்தலை) விட, பாகம் -2 (பொதுத் தேர்தல்) அதிகளவு மக்களது ஈர்ப்பைப் பெற்று வருகிறது.

இங்குதான் ‘மக்கள் அரசியலின்’ பண்பு மாற்றம் புலப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மை அதிகரித்துச் செல்வதன் விளைவே இதுவாகும்.

நாடெங்கும் புத்துணர்ச்சியும் புது நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. மாமூல் அரசியலுக்கு வெளியே கொள்கை சார் அரசியல் பாதையொன்று உள்ளது என்பதை மக்கள் பரவலாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசியல் கட்சிகள், மக்கள் விரோத- வர்க்க நலன் அரசியலைத்தான் முன்னெடுத்து வந்துள்ளன என்ற விமர்சனம் பொதுப் பரப்பில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

வளமும் செழிப்பும் கொழித்த இந்த அழகிய தேசத்தை வங்குரோத்தான நிலைக்குத் தள்ளியது, இவர்கள் முன்னெடுத்த சுயநல பகல் கொள்ளை அரசியலே என்பதை மக்கள் இப்போது நன்குணர்ந்துள்ளனர். இந்த அரசியல் வியாபாரிகளின் ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் குடும்ப செல்வாக்கும் இப்போது மக்களது கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

ஆதலால், குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.

இவ்வறான சட்ட நடவடிக்கைகள் மூலம், எதிர்காலத்தில் நிகழச் சாத்தியமுள்ள ஊழல், மோசடிகளைத் தடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

இன்னொருபுறம் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உசுப்பேற்றி வளர்க்கப்பட்ட இனவாதம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இனவெறியும் வெறுப்புப் பேச்சும் ஓய்ந்துள்ளன. அரசாங்கம் இவற்றை ஊக்குவிக்காமல் நடந்துகொள்வது, இதில் சாதகமான பொது மனநிலையைத் தோற்றுவித்துள்ளது.

1994 இல் சமாதானமே பேசுபொருளாக இருந்தது. 2005 க்குப் பின் யுத்த முழக்கங்கள் கேட்டன. 2015இல் ஜனநாயக மீட்பு அதிக கவனம் பெற்றது. 2019 இல் பேரின மேலாண்மை பற்றி அதிகம் பேசினார்கள். ஆனால், 2024 சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுக்கான காலமாக மலர்ந்துள்ளது.

போருக்குப் பிந்திய இலங்கையை புதிய திசைவழியில் கட்டியெழுப்பும் பெருங்கனவு, கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியமாகத் தொடங்கியுள்ளது.

“இதுவரை ‘சிங்கள ஜனாதிபதிகளைக்’ கண்டு வந்தோம். இப்போதுதான் ‘இலங்கை ஜனாதிபதியைக்’ கண்டுணரும் காலத்தில் இருக்கிறோம்” என்று சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார். இது மிக முக்கியமான அவதானம்.

துருவமயமாகி ஆழமாகப் பிளவுண்டு போயிருக்கும் இலங்கை தேசத்திற்கு, இந்த அரசியல் காலநிலை மிகப்பெரும் நம்பிக்கையின் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக நலிந்து போன இலங்கை மேலும் மோசமாகச் சிதைந்து சின்னாபின்னமாகும் என்றே எல்லோரும் கணித்தனர். இது தோல்வியுற்ற நாடு (Failed State) என்ற முடிவுக்கு பலர் வந்திருந்தனர்.

இப்படி நம்பிக்கை வற்றியிருந்த தேசத்தில்தான், தேசிய மக்கள் சக்தியின் வெற்றி புதிய சாத்தியங்களுக்கான கதவைத் திறந்துள்ளது.

பாரம்பரிய பொருளாதார மூலங்களான விவசாயம், மீன்பிடித் துறை, கால்நடை வளர்ப்பில் அரசின் கவனம் குவிந்துள்ளது.

அத்தோடு கைத்தொழில் வளர்ச்சியிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகிறது. சிறிய, நடுத்தர தொழில் முனைவோர் (SME) துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு எண்ணிமப் பொருளாதாரம் (Digital Economy) குறித்து தீவிர அக்கறை செலுத்தப்படுகிறது. அடுத்த அமைச்சரவையில் இதற்கென தனியான அமைச்சொன்றை (Dedicated Ministry for Digital Economy) உருவாக்கவுள்ளதாகவும், துறைசார் நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பொருளாதாரத் துறை மீதான அரசின் கவனம், பன்முகத் தளங்களில் விரிவடைந்து வருகிறது. இவ்வாறான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க, பாராளுமன்றப் பலம் இன்றியமையாதது. அதனால்தான் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களைக் குறிவைத்துள்ளது.

எளிய பெரும்பான்மையான 113 என்ற இலக்கை அது இலகுவாகக் கடந்து விடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 130 ஆசனங்கள் என்ற வெற்றி இலக்கைத் தாண்டும் என்ற கணிப்புகளும் உள்ளன.

‘சக்திமிக்க பாராளுமன்றம்தான்’ தேசிய மக்கள் சக்தியின் இப்போதைய இலக்கு. நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் அதற்கான தீர்க்கமான பதிலை வழங்கும்.

‘வளமான நாடு- அழகான தேசம் என்ற ஜனாதிபதித் தேர்தல் சுலோகமும், தேர்தல் விஞ்ஞாபனமும் அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் ‘களைகளைக் களைவோம் – மலர்களை நடுவோம்’ என்கின்ற சுலோகத்தினூடே இந்த நாடு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

நம்மினிய தாய்த் திருநாட்டில், பன்மைத்துவமும் பரஸ்பர புரிந்துணர்வும் அபிவிருத்தியும் சுபீட்சமும் ஜனநாயகமும் நல்லிணக்கமும் மேலோங்கட்டும்.

அதற்கு இந்தப் பொதுத் தேர்தல் கட்டியம் கூறட்டும்.

சிராஜ் மஷ்ஹூர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division