Home » அரசியல்வாதிகளின் குடும்பங்களும் உறவினர்களுமே முன்னேறினர்
கடந்த காலங்களில்

அரசியல்வாதிகளின் குடும்பங்களும் உறவினர்களுமே முன்னேறினர்

வாக்களித்த மக்கள் எவ்வித பிரயோசனமும் அடையவில்லை

by Damith Pushpika
October 20, 2024 6:38 am 0 comment

கே. உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்

ப. நான் ரிஸ்வி சாலிஹ். கொழும்பு இசிப்பத்தான கல்லூரியில் கல்வி கற்றேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகள் இலண்டனில் விசேட வைத்திய நிபுணராக கடமையாற்றுகிறார். மகன் பொறியியலாளராக கொழும்பில் கடமையாற்றுகிறார். எனது மனைவி ஓர் ஆங்கில ஆசிரியை.

நான் வைத்தியராக முதன் முதலில் அரச வைத்திய அதிகாரியாக நுவரெலியா வைத்தியசாலையில் கடமையாற்றினேன். அங்கு 4 வருடங்களாக மலையக மக்களது சுகாதார தேவைகளுக்காக காலை 7 மணி தொடக்கம் அதிகாலை 2 மணி வரை அந்த மக்களோடு இருந்து சேவையாற்றினேன். மருத்துவமும், மனிதாபிமான சேவையும் என் இரத்தத்தில் இரண்டறக் கலந்தவை. அதனால் பணம், நேரம் எதுவும் பார்க்காமல் வைத்திய சேவையை வெற்றிகரமாக செய்து வருகின்றேன்.

மருத்துவ அதிகாரியாக அல்பிட்டிய இந்துரவவில் ஓரு வருடம் கடமையாற்றினேன். அதன் பின்னர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் பின்லாந்து அரசாங்கம் செயற்படுத்திய விபத்துச் சேவைப் பிரிவில் இணைந்து கடமையாற்றினேன்.

37 வருடங்களாக வைத்தியத்துறையில் சேவையாற்றி வருகின்றேன். இப்பிரதேச மக்களுக்கு என்னால் முடிந்தளவு சேவையாற்றுகின்றேன். மூன்று தலைமுறைகளாக என்னிடம் பிரசவ வைத்தியம் பார்த்த குடும்பத்தினர் இங்குள்ளனர். மருதானை, மாளிகாவத்தை, தெமட்டகொட, குணசிங்கபுர எனப் பல பிரதேசங்களைச் சேர்ந்த மத்திய தர வருமானம் கொண்ட சாதாரண மக்களும் பண வசதி இல்லாத ஏழை மக்களும் என்னைத் தேடி வருவார்கள். நான் கடமையில் இல்லையென்றால் மீள வீடு சென்று விடுவார்கள்.

அவர்களிடம் நான் பணம் எதிர்பார்த்து மருத்துவம் செய்வதில்லை. அவர்கள் கஷ்டமான சூழ்நிலையில் கொழும்பில் வாழ்பவர்கள். பரம்பரை பரம்பரையாக என்னிடம் வருபவர்கள். அவர்களது வாழ்க்கைத் தரம், கல்வி, வருமானம், வீட்டு வசதிகள், உயர ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். அரசியல் அதிகாரம் இருந்தால் அதனூடாக அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நாம் உண்டோம், குடித்தோம், வாழ்ந்தோம். நாம் நமது நாட்டுக்கு நமது சுற்றத்தாருக்கும் நம் சமூகத்தாருக்கும் என்ன செய்தோம்? கடந்த கால அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் குடும்பங்கள் அவர்களது உறவினர்கள் அபிவிருத்தியடைந்தார்களே தவிர, வாக்களித்த மக்கள் எவ்வித பிரயோசனமும் முன்னேற்றம் அடையவில்லை. அந்த மக்கள் இன்றும் அதே சேரிப்புற வீடுகளிலும் ஒரு வீட்டில் பல குடும்பங்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது பிள்ளைகளை பாடசாலையில் கூட சேர்த்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள். பிள்ளைகள் படித்தாலும் வறுமை காரணமாக இடை நடுவில் கல்வியை கைவிடுகின்றார்கள். கடைகளுக்கும் கூலித் தொழில்களுக்கும் செல்கின்றார்கள்.

ஓரு நாட்டின் இதயம் தலைநகரம். கொழும்பு வாழ் மக்கள் கல்வியில், தொழில் வர்த்தகம், சுகாதாரம், இருப்பிட வசதி என்பனவற்றில் அபிவிருத்தி காண வேண்டும். இங்கு வாழும் மக்கள் அரச தொழில், வர்த்தகம், சிறந்த கல்வி வசதிகளை பெற வேண்டும். அதற்காகவே நான் ஊழலற்ற, சிறந்ததொரு ஒழுக்கமுள்ள தேசிய மக்கள் சக்தியை தேர்ந்தெடுத்து, இம்முறை தேர்தலில் போட்டியிட்டு, மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்ய ஆசைப்படுகிறேன்.

கே. ஏன் தேசிய மக்கள் சக்தியில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் எப்போது இணைந்தீர்கள்?

ப. நான் 10 வருடங்களுக்கு முன்புதான் பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்திற்கு சென்றேன். எனக்கு சட்டத்தரணி நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவரது 4 பிள்ளைகளின் பிரசவத்திலும் நான்தான் மருத்துவர். அதில் நட்பு ஏற்பட்டு அவர்கள் அன்று தேசிய மக்கள் சக்தித் தலைவர் தலைவர் அநுர குமாரவைச் சந்திப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றேன். அவர்களுடன் நிறைய கலந்துரையாடினேன். அதன் பின்னர் அவர்கள் அலுவலகத்திலேயே அவரவர் தட்டை எடுத்து சாப்பிட்டு அந்த தட்டைக் கழுவி உரிய இடத்தில் வைப்பது, மீதியின்றி முற்றாக சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கண்ணுற்றேன். இது எமது இஸ்லாம் மதத்திலும் உள்ளது. இவ்வாறு அவர்களின் எளிமையான வாழ்க்கை முறை எனக்கு பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் கட்சியில் இணைந்திருந்தேன். அதன் பின்னர் கடந்த முறைத் தேர்தலில் வாக்கு கேட்க அழைத்தார்கள். அத்தருணத்தில் நான் விபத்தொன்றில் சிக்கியிருந்தேன்.

இம்முறை அவர்களாகவே என்னை அழைத்து கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக என்னையும் தமிழ் வேட்பாளர் சார்பாக சிவாவையும் நியமித்திருக்கிறார்கள். எனது மருதானை கலீல் வைத்தியசாலை கட்டடத்திலேயே கடந்த 3 வருடமாக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு ஜனாதிபதி அநுரகுமார அடிக்கடி கட்சி அலுவல்கள் சம்பந்தமாக ஆராய வந்துள்ளார்.

கே. தற்பொழுது உங்கள் கட்சியின் பிரசார நடவடிக்கைகள், கொழும்பு மாவட்டத்தில் எவ்வாறு உள்ளன?

ப. எமது கட்சி கொழும்பு மாவட்டத்தில், பிரதமர் ஹரிணி தலைமையில் வேட்பாளர்களை நியமித்துள்ளது. நாங்கள் ஒருபோதும் விருப்பு வாக்குக்காக பணம் செலவழித்து இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிப்பதில்லை. உதாரணமாக எனக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது போன்று சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும். அதேபோன்று சிங்கள, தமிழ் மக்கள் ஏனையோருக்கு தமது 3 விருப்பு வாக்குகளை இடல் வேண்டும். நான் தெஹிவளை முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்லும் போது என்னுடன் எங்கள் சிங்கள வேட்பாளரும் வருவார். கொழும்பு மத்திக்கு செல்லும் போது சிவா போன்ற வேட்பாளர்களை அழைத்துக் கொண்டு செல்வோம் அதில் எங்களது பிரதமர் ஹரிணிக்கும் எமது ஆதரவாளர்கள் விருப்பு வாக்கினைச் செலுத்துவார்கள். நாங்கள் பெரிதாக சுவரொட்டி, கட்அவுட் என்பனவற்றுக்கு பாரியளவில் பணம் செலவழிக்காமல், கட்சிக்காக நாம் இலங்கையர் என்ற ரீதியில், கூடுதலான விருப்பு வாக்குகளை எடுக்க வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சியில் நான் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர். அதனால் சிறந்த ஆட்சி மாற்றம், ஊழல் அற்ற ஆட்சி என்பனவற்றை விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்குப் போடுவார்கள். மக்களுக்கு சீரான சேவைகளை வழங்க நாம் இம்முறை அமோக வெற்றி பெறுவோம். அதே போன்று 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சி ஊடாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன்.

குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஓர் புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணியுங்கள். நமது எதிர்கால சந்ததியினருக்காக புதிய சிந்தனை கொண்ட இளைய அரசியல் பிரதிநிதிகளை மக்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division