இவ்வருடம் நடைபெற்ற தரம்–5 புலமைப் பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் வெளியே கசிந்துள்ளதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரமானது பெற்றோர் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தரம்–5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை போன்ற தேசியப் பரீட்சைகளின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியே கசியும் விவகாரம் எமது நாட்டுக்குப் புதியதல்ல. கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் இவ்வாறான குற்றச்செயல் இன்னுமே நின்றபாடாக இல்லை.
வினாக்கள் முன்கூட்டியே வெளியே கசிந்து விடுகின்ற குற்றத்தை முற்றாகத் தடுத்து நிறுத்துவதற்கு கடந்தகால அரசாங்கங்கள் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பின், இதுபோன்ற சம்பவங்கள் இன்றும் தொடர்வதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. எனினும் வினாத்தாள் கசிவு தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
இது போன்ற குற்றத்துக்குப் பொறுப்பான சூத்திரதாரிகள் கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்ட சில விஷமிகளே தவிர, வெளிநபர்கள் இல்லையென்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். வினாத்தாள்கள் கசிவதற்கு எந்தத் தரப்பினர் காரணமாக இருக்கிறார்களோ, அங்குள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வினாத்தாள் தயாரிப்புடன் சம்பந்தப்பட்ட எவராவது ஒருவரின் சம்பந்தமின்றி வினாக்கள் வெளியே கசிவதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே வினாத்தாள் தயாரிப்புக்குப் பொறுப்பானவர்களைத் தெரிவு செய்வதில் கண்டிப்பான நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகின்றது.
இவ்விடயத்தில் குற்றம் இழைப்போருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதும் முக்கியம்.
ரியூசன் ஆசிரியர்களுக்கிடையிலான போட்டாபோட்டிகள்தான் வினாத்தாள் கசிவதற்கான பிரதான காரணமென்று கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாதிருக்கின்றது. தங்களிடம் கற்கின்ற மாணவர்களை திறமையாக சித்திபெறச் செய்வதன் மூலம், தங்களின் ரியூஷன் மாணாக்கர்களை கவர்ந்திழுத்துக் கொள்ளலாமென்று ஆசிரியர்கள் பலர் எண்ணுகின்றனர். பணஉழைப்புதான் இங்கு குறியாகின்றது.
அதேசமயம், தங்களது பிள்ளைகளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்வதற்கு எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு பெற்றோர் பலர் தயாராக உள்ளனர். பெற்றோரின் பலவீனத்தைப் புரிந்தவாறு சில ஆசிரியர்கள் பணத்துக்காக தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனரோ என்ற சந்தேகமும் இங்கே நிலவுகின்றது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்ற இலட்சியத்துடன் மாணவர்கள் அல்லும்பகலும் படாதபாடு படுகின்றனர். இவர்களில் ரியூஷன் வகுப்புக்குச் செல்ல முடியாத வறிய மாணவர்களும் உள்ளனரென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறிருக்க, குறுக்குவழியினால் மாணவர்கள் சித்தியடைவதென்பது நியாயமானதல்ல. அதனைப் பாவச் செயலென்றே கொள்ள வேண்டும்.
சிரமப்பட்டுக் கற்கின்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கலாகாது.
கல்வியை காசாக்க நினைக்கும் குற்றச் செயல்களைக் களைந்தால்தான் பரீட்சைகள் மீது மாணவர்களுக்கு முழுதான நம்பிக்கை ஏற்படுமென்பதை மறந்துவிடலாகாது.