சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வர்த்தகர் மலேசியாவிலிருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்நிலையில் வர்த்தகர் விமான நிலையத்தின் Green Channel வழியாக வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளை திறந்து பார்த்த போது தேயிலை பொதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தேயிலை பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட 10 கிலோ 179 கிராம் ஐஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.