மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கு பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளுடன் வெளியேறியது. ஆரம்ப சுற்றின் முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை பெற்ற மோசமான தோல்விகளுக்கு பெரிதாக வியாக்கியானங்கள் சொல்லத் தேவையில்லை.
இந்த மூன்று போட்டிகளிலும் அணித் தலைவி சமரி அத்தபத்து பெற்ற ஓட்டங்கள் 6, 3 மற்றும் 1. இதனால் இலங்கை அணி இந்த ஒரு போட்டியில்கூட 100 ஓட்டங்களையேனும் பெற முடியாமல் போனது. கடைசியில் தோல்வி என்பது வழக்கமானது.
இலங்கை மகளிர் அணி அண்மைக் காலத்தில் பெரும் எழுச்சி பெற்றிருப்பதை காண முடிந்தது. அதன் உச்சம் கடந்த ஜூலையில் நடத்த மகளிர் ஆசிய கிண்ணப் போட்டி. இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 166 ஓட்ட வெற்றி இலக்கை இலங்கை அணியால் எட்ட முடிந்தது.
அதாவது இந்த உலகக் கிண்ணத்துக்கு வரும் முன்னர் ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரு தரப்பு டி20 தொடர்களை வென்றது. இந்த வெற்றிகள் அனைத்துமே இலங்கைக்கு புதியது. இதற்கு முன்னர் வீழ்த்த முடியாத அணிகளாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபரிக்கா மற்றும் இந்திய அணிகளையே இலங்கை மகளிர்கள் சாய்த்தனர்.
எனவே, மகளிர் டி20 உலகக் கிண்ணம் பற்றிய எதிர்பார்ப்பு முன்னரை விடவும் அதிகமாக இருந்தது. அது அணியிலும் எதிரொலித்தது. உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே சமரியும் ஐக்கிய அரபு இராச்சியம் சென்றார். என்றாலும் தனது குழுவில் ஒப்பீட்டளவில் பலவீனமாக பாகிஸ்தானிடம் 31 ஓட்ட வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணியால் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலிய மற்றும் இந்தியாவை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக, சமரி அத்தபத்துவே அணியை முழுமையாக சுமக்க முயன்றது தெரிகிறது. அது முடியாதபோது ஒட்டு மொத்த அணியும் வீழ்ச்சி கண்டிருப்பதும் புரிகிறது.
ஹர்ஷிதா சமரவிக்ரம, கவீஷா டில்ஹாரி போன்ற வீராங்கனைகள் அண்மைக் காலத்தில் வளர்ந்து வந்தபோதும், அணியை பொறுத்தவரை முழுக்க முழுக்க சமரி அத்தபத்துவிடமே தங்கியுள்ளது. அது இலங்கை அணிக்கு எவ்வளவு சாதகமானதோ அந்த அளவுக்கு பாதகமானது. இதற்கு இந்த டி20 உலகக் கிண்ணமே போதுமான உதாரணம்.
‘ஆடுகளத்தின் மீதோ அல்லது யாரின் மீதே எமக்கு குற்றம் சுமத்த முடியாது. நாம் சந்தித்த அதே சவாலை அடுத்த அணிகளும் சந்தித்தன. அவர்களால் அவைகளைத் தாண்டி வர முடியும் என்றால் ஏன் எம்மால் முடியாது’ என்று உலகக் கிண்ணத் தோல்விகள் குறித்து சமரி குறிப்பிடுகிறார்.
இத்தனைக்கும் உலகக் கிண்ணம் சென்ற இலங்கைக் குழாத்தை எடுத்துக் கொண்டால், அனுபவம் அற்ற அத்தனை இளமையான அணி என்று குறிப்பிட முடியாது. இலங்கைக் குழாத்தின் சராசரி வயது 30. பிரியதர்ஷனி, பிரபோதனி மற்றும் ரணவீர ஆகிய அனைவரும் 37க்கு மேல். அத்தபத்த உட்பட மேலும் அறுவர் தமது 30 வயதுகளில் இருக்கிறார்கள். எனவே, இந்த அணிக்கு நீண்ட எதிர்காலம் இல்லை.
‘சமரியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் குறைந்தது 4 ஆண்டுகள் ஆட வேண்டும். அவர் இன்னும் 34 வயதில் இருக்கிறார். எனவே பெண்களால் 39 அல்லது 40 வயது வரை ஆட முடியுமாக இருக்கும்’ என்று இலங்கை மகளிர் அணியின் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க குறிப்பிடுகிறார்.
கடந்த ஒன்றரைத் தசாப்தமாக இலங்கை மகளிர் அணிக்காக ஆடும் சமரி அத்தபத்துவின் சாதனைகள் இலங்கையின் வேறு எந்த மகளிராலும் இதுவரை எட்ட முடியாதது. அவர் ஓய்வு பெறுவது பற்றி அரசல் புரசலாகக் கூறி வருகிறார். என்றாலும் அவரை விடுவதற்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் இன்னும் தயாரில்லை என்பது தெரிகிறது. மறுபுறம் அவரில் முழுமையாக தங்கி இருக்கும் சூழலை மாற்றி திறமையான இளம் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்தினாலேயே நிரந்தர வெற்றிகளும் கிடைக்கும்.
எஸ்.பிர்தெளஸ்