விதை
ஆணி வேராகி
மண்ணின் ஆழத்திற்குள்
ஊடுருவியதால்
மரம்
பெரும் விருட்ஷமாகி
விண்ணைத் தொட்டது
ஆணி வேர்
மண்ணுக்குள் புதைந்து
உறிஞ்சிய வளத்தையெல்லாம்
மரத்தின் வளர்ச்சிக்கு
உரமாக்கியது.
ஆணி வேரின்
அர்ப்பணிப்பில்
பக்க வேர்கள்
பலம் அடைந்ததால்
அந்த சமூக மரம்
சத்திய காய்களை பிரசவித்தது
வேரின் உறுதியில்
வைரமாக்கப்பட்ட
விழுதுகள்
பசுமையை
உடுத்திக் கொண்டு
பார்ப்போரை
வசீகரம் செய்தன
ஆணி வேர்
மேலும் மேலும்
மண்ணுக்குள் அமிழ்ந்தது
அதனால்
அந்த மரம்
மேலெழுந்து வளர்ந்தது
கிளை பரப்பி
இலை பரப்பி
உரிமை நிழல் மேவிய
மரத்தடியிலே
மறுக்கப்பட்ட
சமூகமொன்று
இளைப்பாறியது
உரிமைக் குரல்
உடைக்கப்பட்டு
ஓரங்கட்டப்பட்ட
அங்கே
கல்வி மொட்டவிழ்ந்து
கல்விமான்கள் பூத்தார்கள்
அதனால்
உரிமை காய்த்து
விடுதலை கனிந்தது
ஆதறவற்ற
அநாதைச் சமூகத்தை
இந்த மரக்கை
அணைத்துக் கொண்டது
அதிகார கால்களால்
மிதிக்கப்பட்ட
அடிமைக் குருவிகள்
இந்த மரத்திலேதான்
சுதந்திர கூடு கட்டின
மரத்தின் அசுர வளச்சி
சூரிய குடும்பத்தில்
குழப்பத்தை உருவாக்கியது
இதனால்
ஆணிவேரை அழிப்பதற்கு
அதிகாரம் சதி செய்தது
ஒரே நாளில்
ஆணிவேர்
அறுந்து போனது
பக்க வேர்கள்
பலவீனப்பட்டு
ஆணிவேரின்
அர்ப்பணிப்புகளை
அசிங்கப்படுத்தின
ஓற்றை மரத்தை
கோடரிக் காம்புகள்
குறி வைத்தன
அடி மரம்
நடு மரம்
நுனி மரம் என
பக்க வேர் போராளிகள்
பங்கு போட்டதால்
அந்த மரம்
மரத்தின் அடிச்சுவடுகளும்
அழிக்கப்பட்டு
ஒரு ஊனச் சமூகம்
உருவாக்கப்படுகிறது
பாவம்
அந்த விதை
சமூகம் தளைப்பதற்காய்
அது
தன்னைப் புதைத்தது.
ஆனால்
வேரின் விருட்சத்தில்
தளைத்த கிளைகளோ
தமது பசுமைக்காய்
அந்த சமூகத்தை புதைத்தன
நிழல் கொடுத்த
அந்த மரம்
இன்று
நிஜமிழந்து போனது
அதனால்
உஷ்ணத்தைச் சுமந்த
இந்த சமூகம்
மெது மெதுவாய்
கருகிக்கொண்டிருக்கிறது.
-வரக்காமுறையூர் ராசிக்