அன்புக்கு ஆணவம் என்பது இல்லை
அடிமையாதலையே
அரசகிரீடமெனச் சூடிக் கொள்ளும்
அன்புக்கு ஏமாற்றங்கள்
ஒரு பொருட்டே அல்ல
அதற்கு வெட்கம் என்பதே கிடையாது
மீண்டும் மீண்டும்
உன் வாசலை நோக்கியே அது பார்க்கிறது
மீண்டும் மீண்டும்
உன் பக்கமே சரிந்து திரும்புகிறது
மென்மையின் நேசத்தை
முடிவின்றிப் பிரசவிக்கிறது
மிதந்தலையும் மேகமாய்த்
ததும்பி வழிகிறது
அனுமதிக்காக காத்திருக்க
அதற்குத் தோன்றுவதில்லை
அழைப்பு வரும்வரையது
அமைதியாயிருப்பதில்லை
ஆழ்கடலின் அமைதியுள் பெருஞ்சுழி
கருக்கொண்டது நகர்ந்து செல்லும்
அழுகை விழுங்கி
அந்தரத்தில் தொங்கியது மூச்சடக்கி நிற்கும்
வாயிற்கதவைத் தட்டிவிடவே
அது எத்தனிக்கிறது
தொடர்பு எல்லைக்கு அப்பாலும்
தொட்டுவிடத் துடிக்கிறது
திறந்தாலது கொண்டாடித் தீர்க்கும்
ஆகாயம் வரை தன் சிறகுகள் வளர்க்கும்
திறக்கா விட்டாலும்
கொண்டாடித் தீர்க்கும்
தீராக்கனவுகளோடு வாழ்ந்து நிற்கும்
புறக்கணிப்பு
கொல்கின்ற வலிதான் ஆயினும்
சட்டென மறந்து உன் புன்னகை தேடும்
குழந்தையாகிறது அது
கொட்டிய நேரமருகியதும்
கொண்டாடிய நேசம் கசந்ததும்
ஈரலித்த நெஞ்சில் வெப்பக்காற்றின்
பாலைமணலை அறையும்
வலிந்து நேசத்தைக் காண்பித்து
பின்னொரு நாளில்
வலித்து விலகுவது குறித்த
உறுத்தல்களின்மை
மௌனக்கிடங்கில்
தள்ளி மரணம் நிகழ்த்தும்
இதயத்தைக் கொத்திக் கொண்டு போய்
எரிகின்ற தீக்கங்கில்
வீசி விழுத்தியது போலும்
பொசுங்கிய வாடை எழும்
பிரதியற்ற ஒன்று என
அறிந்தும் அறியாதது போலும்
அரிதாரம் பூசுவதை அறிந்ததன் பலனாய்
என் சாலையில் கண்ணீர் இரத்தம்
இரண்டு தடவை பாடம்
படித்திருக்கிறேன்….
மூன்றாம் தடவையும்
உன்னிடம் ஏமாறவே
பிடித்திருக்கிறது
இந்தக் கவிதையும்
என் நேசமும் ஒன்று,
தொடங்கிய இடத்தை அடைந்ததும்
முடிந்து விடுகிறது