தேர்தல் வருடமாக அமைந்துள்ள 2024ஆம் ஆண்டின் மற்றுமொரு தேசிய தேர்தல் இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது.
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதையடுத்து உடனடியாகவே பொதுத்தேர்தலும் நடத்தப்படுவதால், அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி அரசியல்வாதிகள் பலருக்கும் இத்தேர்தல் வாழ்வா சாவா என்ற போராட்டமாக மாறியுள்ளது.
அநுர அலைக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் துவண்டு போயுள்ள அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கப் போவதுடன், புதிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இளம் தலைமுறையினர் பலருக்கான அரசியல் பாதை திறக்கப்படவும் போகின்றது என்பது உறுதியாகி விட்டது.
இன்றைய புதிய அரசியல் சூழ்நிலையில், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் பிரிந்து நிற்கும் தமிழ்த் தரப்புக்கள்:
ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்து இதுவரை வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து நான்கு கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
எனினும், இம்முறை தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமாக மாறியுள்ளது. அது மாத்திரமன்றி, சனத்தொகையின் அடிப்படையில் இம்முறை யாழ்மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒன்றினால் குறைந்துள்ளது. ஒரு பிரதிநிதித்துவம் குறைந்திருக்கும் பின்னணியிலும் அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மக்களின் வாக்குகளை மேலும் சிதறடிக்கும் வகையில் செயற்படுகின்றன.
வடக்கு, கிழக்கை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அநுர அலையின் தாக்கத்திலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாகவே அதன் தலைமைப் பதவிக்கான போட்டியினால் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்பட்டு விட்டன.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கும் ஏனைய பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவற்றை இரத்துச் செய்து மீண்டும் புதிய தெரிவுகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த இழுபறிக்கு மத்தியில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இக்கட்சியில் இருந்தவர்கள் வெவ்வேறு தரப்பினருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தமை கட்சியின் ஒற்றுமை குறித்த கேள்வியை எழுப்பியிருந்தது.
மத்திய குழு கூடி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுத்ததாக சுமந்திரன் அறிவித்தார். எனினும், குறித்த கூட்டத்திற்குத் தான் செல்லவில்லையென்பதால் கட்சி எடுத்த முடிவு பற்றித் தனக்குத் தெரியாது என கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். மறுபக்கத்தில் சில அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து களமிறக்கிய பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் என்பதுடன், அவருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிறிதரன் எடுத்திருந்தார்.
அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோநோகராதலிங்கம் போன்றவர்கள் எடுத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த மாவை சேனாதிராஜா, தான் சஜித்துக்கும், ரணிலுக்கும் வாக்களித்திருந்ததாகக் கூறியிருந்தார்.
இவ்வாறு தமிழரசுக் கட்சி ஒரு உறுதியான நிலைப்பாடு இன்றி ஜனாதிபதித் தேர்தலைக் கையாண்டிருந்தது.
மறுபக்கத்தில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் தெரியப்படுத்துவதற்காக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது.
இதன் பலனாக தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற ஏழு கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து பொது உடன்படிக்கையை ஏற்படுத்தி பொதுவேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை களமிறக்கியிருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்தது. இது பொதுவேட்பாளரை ஆதரிக்கவுமில்லை, ஏனைய வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கவுமில்லை.
அதேநேரம், அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தா, சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் பிரிந்துநின்று தீர்மானங்களை எடுத்திருந்தன.
சிதறடிக்கப்படும் மக்கள் நம்பிக்கை:
இவ்வாறான பின்னணியில் பொதுத்தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்க் கட்சிகள் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து வாக்குகளைச் சிதறடிக்கும் கைங்கரியத்திற்குத் தயாராகி வருகின்றன. தமிழரசுக் கட்சி வீடு சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. வேட்பாளர் தெரிவு விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் கடுமையான குழப்பம் ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை சுமந்திரன் வைத்திருப்பதாகப் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். தனக்கு ஆதரவானவர்களையே அவர் வேட்பாளர்களாகக் களமிறக்கியிருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இம்முறை தேர்தல் மாத்திரமன்றி கடந்த காலத் தேர்தல் காலத்திலும் சுமந்திரன் மீதான குற்றச்சாட்டுக்களே அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன. எந்தக் கட்சியினரைப் பார்த்தாலும் சுமந்திரன் மீதே விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
சுமந்திரனின் செயற்பாட்டைக் காரணம் காட்டி தமிழரசுக் கட்சியில் உள்ள சிலர் ஜனநாயக தமிழரசுக் கட்சியென்ற பெயரில் சுயேச்சையாகக் களமிறங்கவுள்ளனர். தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவராக இருந்த கே.வி.தவராசா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபன் உள்ளிட்ட சிலர் இணைந்து சுயேச்சையாகப் போட்டியிடவிருக்கின்றனர். இதனால் இலங்கைத் தமிழரசுக் கட்சி இரண்டாகப் பிளவடைந்துள்ளது.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் களமிறங்கிய கட்சிகள் இம்முறை இரண்டு தரப்பாகியுள்ளன. தமிழரசுக் கட்சி தனித்தும் ஏனைய கட்சிகள் ஒன்றாகவும் களமிறங்குகின்றன. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துக் களமிறங்குகின்றது.
இவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்குப் பயன்படுத்திய சங்கு சின்னத்தை தமது சின்னமாக எடுத்துள்ளனர். இந்தச் சின்னத் தெரிவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகக் கூறியிருந்தனர். இதற்காக சிவில் அமைப்புடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் குறித்த விடயத்தை எந்தவொரு தரப்பும் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்துவதில்லையென இணக்கம் காணப்பட்டிருந்தது.
எனினும், சங்கு சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கபளீகரம் செய்தது மாத்திரமன்றி, ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக வாக்களித்த ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதாவது, தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும் நோக்கிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. இது மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கச் செய்துள்ளது.
பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றிணைந்திருந்த சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் தனித்துக் களம் காண்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பார் பெர்மிட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இவ்வாறு பெர்மிட்டைப் பெறுவதற்கு விக்னேஸ்வரனும் சிபாரிசுக் கடிதமொன்றை வழங்கியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஏழைப் பெண் ஒருவருக்கு உதவும் வகையில்தான் இந்த சிபாரிசுக் கடிதத்தை வழங்கியதாக அவர் கூறியிருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இருந்தபோதும் அவருடைய கட்சி போட்டியிடுகின்றது. யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான குழுவொன்று யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.
மறுபக்கத்தில், கஜேந்திரகுமார் அணி வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்றது. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி அவர்களுக்கே உரிய வீணைச் சின்னத்தில் வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்றது.
இதற்கும் அப்பால் தேசிய மக்கள் சக்தி, ஐ.தே.க இணைந்த கூட்டணி, பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி போன்ற பிரதான அரசியல் கட்சிகளும் வெவ்வேறாகப் போட்டியிடுகின்றன. அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியேயும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போகின்றது.
இவ்வாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக தனித்துப் போட்டியிடுவதால் இம்முறை மக்கள் குழப்பம் அடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். அது மாத்திரமன்றி, மக்களுக்கு அன்றாடப் பிரச்சினைகள் பல இருக்கும் நிலையில், தமிழ்த் தேசியம் என்றதொரு விடயத்தை மாத்திரம் தேர்தல் காலத்தில் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பும் அரசியல் காய்நகர்த்தலே தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகின்றது.
பல்வேறு விடயங்களில் தெளிவு பெற்றுள்ள தமிழ் மக்கள் இம்முறை சுயநலம் கொண்ட அரசியல் கட்சிகளுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.