இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டுவாரங்கள் கடந்து விட்டன. இந்தக்காலப்பகுதியில் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட உத்தேசித்துள்ளதாக மேற்குலக நாடுகள் கோடிகாட்டியுள்ளன. அநுர நிர்வாகம் மாறியுள்ள உலக நிலவரங்களை சரிவர புரிந்து கொண்டு மிக அவதானத்துடன் சர்வதேச தொடர்புகளையும் உள்நாட்டு விவகாரங்களையும் கையாள முற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. சர்வதேசங்களின் தூதுவர்கள் புதிய ஜனாதிபதியைச் சந்தித்து தமது வாழ்த்துக்களையும் ஒத்துழைப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை இலங்கையின் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற நபர்கள் புதிய அரசாங்கத்தை நாகரிகமற்ற விதத்தில் கடுமையாக விமர்சிப்பதையும் காண்கிறோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் உபாய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. நிதியமைச்சின் செயலாளரும் மத்தியவங்கி ஆளுநரும் மாற்றப்படவில்லை. இது மிகவும் காத்திரமான ஒரு முடிவு. அரசாங்கம் மாறினாலும் அரச நிருவாகக் கட்டமைப்பு அவ்வாறே இயங்கும். இயங்க வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் அரச நிர்வாக அதிகாரிகள் மத்தியிலும் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியல்வாதிகளின் முகங்களே கமராவுக்குத் தெரிந்தாலும் அவர்கள் முன்வைப்பதாகவோ அல்லது செயற்படுத்துவதாகவோ பகிரங்கப்படுத்தும் கொள்கைகள் அவர்களுடையவை அல்ல. மாறாக கல்விகற்ற பயிற்றப்பட்ட நிபுணத்துவ அனுபவமுள்ள நிர்வாக அதிகாரிகளினாலேயே அவை எமுதப்படுகின்றன. ஒரு சில அரசியல்வாதிகள் தவிர அவற்றில் உள்நுழைந்து ஆராய்ந்து பங்களிக்கும் அளவுக்கு ஆளுமை அரசியல்வாதிகள் பலருக்கு இருப்பதில்லை. ஆகவே புதிதாக பதவியேற்ற அரசாங்கம் இந்த அதிகாரிகள் வர்க்கத்தைக் காயப்படுத்தமல் அவர்களையும் அரவணைத்து லாவகமாகக் காய்களை நகர்த்தினால் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவது பிரச்சினையாக இருக்காது. ஆனால் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாணியில் அணுகினால் முடிவுகள் மோசமானவையாக இருக்கும். இப்போதே பலர் புதிய அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் இல்லை என்கின்றனர். பழைய ஆட்களே பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வருவார்கள் என்ற பேராசையும் அவாவும் பலருக்கு இருக்கிறது. இலங்கையில் இயங்கும் அரசுசாரா பொருளாதார சிந்தனைக்குழாங்களும் இதே நிலைப்பாட்டில் இருப்பது போலத் தெரிகிறது. வெளிநாடொன்றில் வசிக்கும் கொழும்பைச் சேர்ந்த தமிழ்மொழிபேசும் பேராசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெறமுன்பிருந்தே அவரையும் அவரது கட்சியையும் ஊடக தர்மத்திற்கு அப்பாற் சென்று மிக மோசமாக விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக 58 சதவீதமான வாக்காளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் அதனால் அநுர சிறுபான்மை ஜனாதிபதி என்றும் கூறுகிறார். மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்று பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் பற்றி இவர் ஒன்றுமே இதுவரை கூறவில்லை. ஆகவே தெரிவு செய்யப்பட்ட மறதிநோயால் பீடிக்கபட்ட கல்வியாளர்கள் என்று சொல்லப்படுபவர்களின் விமர்சனங்களையும் உரியவாறு கையாள வேண்டியிருக்கும். பொதுத்தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியாளர்களால் மக்களுக்கான நிவாரணங்களை உடனடியாக அறிவிக்க முடியாது. அவ்வாறு செய்வதும் பிழை. அது மட்டுமன்றி மக்களின் எதிர்காலம் பற்றிய எதிர்பார்க்கைகள் பிரகாரமாக இருக்குமாயின் அதுபற்றிய ஆட்சியாளர்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவார்களாயின் பொதுமக்கள் தமது சுமைகளை இன்னும் சிறிது காலத்திற்கு பொறுத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கையர்கள் புதிய அரசாங்கத்திற்கு நிதிப்பங்களிப்பை வழங்கவும் முன்வருவார்கள். ஆகவே பொதுத்தேர்தலுக்கு முன்பதாக அரசாங்கம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பில்லை. உடனடியாக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிக்காட்ட ஜனாதிபதி அற்புத விளக்கு எதையும் வைத்திருக்கவில்லை. ஆகவே அவருக்கும் அரசாங்கத்திற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு, திருட்டு என்ற கோசங்கள் குற்றச்சாட்டுகளின் பிரதிபலிப்பாகவே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எல்லோரும் திருடர்கள் அல்ல என்று ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி குறிப்பிட்டார். அது உண்மைதான். எல்லோரும் அப்படியல்ல. ஆனால் பெரும்பாலானோர் தெரிவுசெய்யப்பட்ட உடனேயே முழுக்குடும்பத்தையும் வெவ்வேறு பதவிகளுக்கு நியமித்து அவர்கள் மூலம் அரச சொத்துக்களை தமது குடும்ப சொத்துக்களாக பயன்படுத்தி கழிவறைக் கடதாசியைக் கூட அரசாங்கத்தின் பணத்தில் பெற்றவர்களை நாம் கண்டுள்ளோம். ஆகவே தாம் எதையும் திருடவில்லை என்பதை அவர்கள் சுலபமாக நிரூபிக்கலாம். தமது பேரிலும் தமது பினாமிகள் பேரிலும் உள்ள சொத்துக்களை கணக்குக்காட்டி தமது கடந்தகால வருமானத்தைக் கொண்டு அவை எவ்வாறு உழைக்கப்பட்டன என்ற விபரத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்துவார்களாயின் இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்க்கலாம். அதைவிடுத்து முடிந்தால் பிடி என்று சவால் விடுப்பதால் அதிலிருந்த விடுபட முடியாது.
இந்த ஆட்சிமாற்றத்தின் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஊழல்வாதிகளுக்கு தமது கட்சியில் இடமில்லை என்று அறிவித்துள்ளது முன்னர் பதவியிலிருந்த கட்சி. ஆண்டவா அப்படியானால் கட்சியில் எவருமே இருக்கமாட்டார்களே ஐயா என்று அங்கலாய்க்கிறது பொது சனம். புரதான கட்சிகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து தேசிய மக்கள் சக்தியை எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பது பற்றிய வியூகங்களைப் பெரும்பாலும் வகுத்துவிட்டன. எல்லோரும் சேர்ந்து கூட்டாக அடிக்கப் போகிறார்கள். அதனால் மக்களால் வெளிப்படையாக ஊழல்வாதிகள் என்று பச்சை குத்தப்பட்டவர்களை இம்முறை ஒதுக்கிவிட வாய்ப்பிருப்பதால் புதிய முகங்களை எல்லாக்கட்சிகளும் களமிறக்க வாய்ப்புண்டு. பாராளுமன்றத்தில் தூங்கிவழியும் முதியவர்களும் தமது வீடுகளில் தமது உறக்கத்தை தொடர மக்கள் வாய்ப்பளிப்பார்கள். ஆக இம்முறை புதிய முகங்களுக்கு எல்லாக்கட்சிகளும் வாய்ப்பளிக்க இடமுண்டு. குறிப்பாக படித்தவர்கள், வாண்மையாளர்கள் தொழிலதிபர்கள் களம் காணலாம்.
தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுவில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்வியாளரை தொடர்பு கொண்டு கேட்டேன் தேர்தலில் நிற்கிறீர்களா என்று. நின்றால் மாத்தறை மாவட்டத்தில் இரண்டாவதாக வருவேன். ஆனால் ஏற்கெனவே பல்கலைக் கழகத்தில் பெற்ற கடனை பெருந்தொகையில் மீளச் செலுத்த வேண்டியுள்ளது. பதவியை இராஜிநாமா செய்தால் அதை உடன்மீளச் செலுத்த வேண்டும். அது போக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று ஐந்து வருடங்கள் முடிவடைந்து வீட்டுக்கு வந்தால் ‘சோற்றுக்கு’ என்ன செய்வது? எங்கள் கட்சி ஊழலை எதிர்க்கும் கட்சி. ஆகவே அரசியலில் யாரும் சம்பாதிக்க முடியாது. ஆதலால் போட்டியிட மாட்டேன் என்கிறார். வேறொரு கட்சியைச் சேர்ந்த இன்னொரு பேராசிரியர் நான் போட்டியிட மாட்டேன் தேசியப்பட்டியலில் வருவேன் எனக்காக பணம் செலவிட ஒரு வர்த்தக நண்பர் இருக்கிறார் ஆகவே எனக்கு அது பிரச்சினை இல்லை என்கிறார்.
ஆக இலங்கை அரசியலில் பணபலமும் அரசியல் பின்புலமும் இல்லாத, நாட்டுக்காக உழைக்க விரும்பும் நபர்களால் பாராளுமன்றம் செல்வது கடினம் தான்.