சமூகவலைத்தளங்களில் சமீப காலமாக வரம்புமீறிய பதிவுகள் இடப்படுகின்றன. இப்பதிவுகளில் அரசியல் சார்ந்த பதிவுகளைத்தான் அதிகம் காண முடிகின்றது. சமூகஊடகங்கள் கடிவாளம் இல்லாத குதிரை போன்று கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றன.
தமக்குப் பிடித்தமானவர்களை உச்சத்தில் வைத்துப் போற்றுகின்றார்கள். தமக்கு எதிரானவர்களை மிக மோசமாகத் தூற்றுகின்றார்கள். அவர்களது தீர்ப்புகள் மக்களைச் சென்றடைகின்றன. மக்கள் இப்பதிவுகள் மீது நம்பிக்கை வைக்கின்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால் எந்தவொரு நபரையும் கீழ்த்தரமாக வசைபாடுவதற்கான களத்தை சமூக ஊடகங்கள் வழங்கியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சமூக ஊடகப் பதிவுகள் தீவிரமடையத் தொடங்கின. தற்போது தேர்தல் முடிந்த பின்னரும் கூட விஷமப் பதிவுகள் நின்றபாடாக இல்லை. அரசியல்வாதிகளின் தனிப்பட்ட அந்தரங்கங்கள் தொடர்பாகவும் பலரும் பதிவிடுகின்றனர். இவ்வாறான தகவல்களில் போலியானவைதான் அதிகம்.
இத்தகைய விஷமிகளால் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு பாதிப்பும் அவப்பெயரும் ஏற்படுவது ஒருபுறமிருக்க, அதிகமான மனஉளைச்சலும் ஏற்படுகின்றது.
வடபகுதி தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் மோசமான விடயங்களை முகநூலில் ஒருவர் பதிவு செய்யப் போய், இறுதியில் அது விபரீதமாகவே முடிந்து விட்டது. அந்த அரசியல்வாதி பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
கைத்தொலைபேசியை பலர் பக்குவமாக பயன்தரும் விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், மற்றொரு தரப்பினரோ குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்ததற்கு ஒப்பாக விஷமத்தனம் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
முகநூல் பதிவுகள் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டுமென்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். முகநூல் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானவர்கள் தம்மை ஊடகவியலாளர் எனக் கருதியே அபாண்டமான விடயங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
எந்தவொரு பிரஜையானாலும், அவருக்கென்று தனித்துவ உரிமைகள் உள்ளன. விஷமத்தனம் புரிவோரின் செயல்களால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்கலாகாது. இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உரிய அதிகாரிகளுக்குரியதாகும்.