ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய 9 ஆவது பாராளுமன்றம் கடந்த 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்று, நவம்பர் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் உடனடியாகப் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் கூறிவந்தார்.
அவர் கூறியதைப் போன்று ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடனேயே பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு முன்னராக காபந்து அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் தமது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோரையும் உள்ளடக்கியதான மிகவும் சிறியதொரு அமைச்சரவையை நியமித்தார். அமைச்சரவை நியமனம் இடம்பெற்ற கடந்த 24ஆம் திகதி நள்ளிரவே பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு விட்டது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் சூட்டோடு சூடாகப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களைக் காணமுடியும்.
இவ்வாறு நடத்தப்பட்ட தேர்தல்களில் ஜனாதிபதியாக வெற்றிபெற்ற தரப்புக்குப் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் கிடைத்திருப்பது வரலாறு. இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.
இதற்கு முன்னரான தேர்தல்களிலும் இவ்வாறான பெரும்பான்மைகள் பெறப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தனது கொள்கைகளை நிறைவேற்றுவதற்குப் பலமான பாராளுமன்றமொன்றைக் கோரி தேர்தலுக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
‘சிஷ்டம் சேஞ்ச்’ என்ற முறைமை மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்திருந்த நாட்டு மக்களுக்கு மற்றுமொரு ஜனநாயக சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
ரணிலின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் குழப்பமும்:
‘பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் தேவையில்லை’ என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தமக்குப் பொருத்தமான, நேர்மையான மக்கள் பிரதிநிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு தற்பொழுது மக்களுக்குக் கிடைத்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்காக பணிசெய்யக் கூடிய பிரதிநிதிகளை வாக்காளர்கள் தெரிவுசெய்ய வேண்டியது மக்களின் கடமை ஆகும். வாக்காளர்களுக்கு ஜனநாயக ரீதியான தெரிவுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்குத் தயாராக மிகவும் குறுகிய காலமே அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தரப்பிலும், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தரப்பிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ‘அநுர அலை’ அதிகரிக்கத் தொடங்கியபோதே சஜித்- ரணில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷம் வலுத்திருந்தது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்த விடயம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப் போவதில்லையென்றும், தேசியப் பட்டியல் ஊடாகப் பாராளுமன்றம் நுழையப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் ருவன் விஜயவர்தன அறிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐ.தே.கவையும் இணைப்பதற்கான முயற்சிகளை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இரு தரப்பையும் இணைக்கும் பொறுப்பு அவருக்கே கட்சியினால் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளும் நிலைப்பாட்டை இன்னமும் சஜித் எடுத்திருப்பதாகத் தெரியவில்லையென்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூடிய ஐக்கிய மக்கள் கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக சஜித்தைக் களமிறக்குவதென்றும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியிலேயே தொடர்ந்தும் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடவில்லையென்றால், அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எந்தப் பயனும் இல்லை என சஜித் பிரேமதாச பகிரங்கமாக ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.
இருந்தபோதும், ஐ.தே.கவையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் இருதரப்பிலுமுள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இருதரப்பையும் இணங்கச் செய்வதற்கு வர்த்தகப் பிரமுகர்கள் சிலரும் களமிறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐ.தே.கவின் உபதலைவர் ருவன் விஜயவர்த்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பு சஜித்துக்கு வழங்கப்பட்டால் இருதரப்பும் இணைந்து செயற்படுவதில் அர்த்தமிருக்கும். இல்லாவிட்டால் இணைவதில் பலனில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் இணைந்து கொள்வது குறித்துக் கவனம் செலுத்தியுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை நம்பி அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்ற பொதுஜன பெரமுனவின் முன்னாள் முக்கியஸ்தர்கள் நெருக்கடியில் உள்ளனர். அவர்கள் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி புதிதாக கூட்டணி அமைத்துக்கொண்ட தரப்பினர் ஆவர்.
குறிப்பாக பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி ரணிலுடன் இணைந்து கொண்டவர்கள் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கியிருந்தனர். ஐ.தே.க தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டால் இவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் ‘மஹிந்த ராஜபக்ஷ’ என்ற அரசியல் பிம்பத்தை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றத்துக்குத் தெரிவான இவர்கள், ரணில் விக்கிரமசிங்கவை நம்பி நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும், பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அவர்கள் ரணிலுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறான முடிவுகளை எடுப்பது என்பதில் குழம்பிப் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபக்கத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன இம்முறை தனித்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளது.
மோசடிக்காரர்கள், திருடர்கள் எனப் பெயரெடுத்த எவருக்கும் இம்முறை தாம் வேட்புமனுக்களை வழங்கப் போவதில்லையென அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ 3 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார். இந்த நிலையில் பொதுத்தேர்தல் அவர்களுக்கு எந்தளவு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியே ஆகும்.
நம்பிக்கையுடன் தேசிய மக்கள் சக்தி:
எதிர்க்கட்சிகளின் குழப்பம் இவ்வாறானதாக இருக்கையில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தல் குறித்து நம்பிக்கையுடன் உள்ளது. ஏனைய கட்சிகளைப் போன்று தமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விருப்பு வாக்குகளுக்கான மோதல்கள் இல்லையென்பதால் வேட்புமனுக்கள் குறித்து தமது கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்பது நீண்டகால அரசியல் அனுபவம் உள்ள ஜே.வி.பி மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் சிவில் அமைப்புக்கள் எனப் பல்தரப்பினரையும் உள்ளடக்கிய பரந்த சமூகமொன்றின் ஒன்றிணைவே ஆகும்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இதில் அங்கம் வகிப்பதால் மக்கள் எதிர்பார்க்கும் அறிவார்ந்த சமூகத்தைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தெரிவுகள் பல அவர்களிடம் உள்ளன. எனவே, ஜனாதிபதி அநுர குமார மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு பலமான பாராளுமன்றத்தின் அவசியத்தை உணர்ந்து மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அநுர அலை பொதுத்தேர்தலிலும் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், அக்கட்சி அதிக ஆசனங்களை வெல்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகின்றன. சவாலான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களின் மனங்களை வெல்லும் வகையில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பொதுத்தேர்தலில் அவர்களின் கட்சிக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்பதே பலரதும் கருத்தாகும்.
அதேபோல, நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் பல அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடத்தைப் புகட்டுமொரு தேர்தலாக அமையப் போகின்றது. குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் கொண்ட, அவ்வப்போது கட்சி தாவும் அரசியலை மேற்கொள்ளும் பலர் இத்தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். எனவே, எதிர்வரும் நாட்கள் அரசியல் பரபரப்புக்கள் நிறைந்த நாட்களாக அமையப் போகின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பி.ஹர்ஷன்