இலங்கை மாத்திரமன்றி, சர்வதேசமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பரபரப்பு தணிவதற்கிடையில், பொதுத்தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகி விட்டன. எனவே இவ்வருட இறுதிவரை நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கப் போகின்றது.
இலங்கை மக்கள் அனைவருமே வியக்கும்படியாக, வன்முறைச் சம்பவங்களின்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றது ஜனாதிபதித் தேர்தல். கடந்த காலத்தில் நிலைமை இவ்வாறாக இல்லை. கைகலப்புகள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள், தாக்குதல்கள் என்றெல்லாம் ஏராளமான வன்முறைகளுடனேயே தேர்தல்கள் நடந்து முடிவதுண்டு.
ஆனால் இம்முறை நடைபெற்றுள்ள தேர்தல் வியப்பு அளிக்கின்றது. மேற்குலக நாடுகளில் நடைபெறுகின்ற தேர்தல்களை ஒத்ததாக இலங்கையிலும் தேர்தலொன்று நடைபெற்றுள்ளது.
வன்முறைகள், ஆரவாரங்கள் எதுவுமின்றி அமைதிப் புரட்சியின் ஊடாக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயக அரசியலில் எமது மக்கள் முன்னேறிச் செல்கின்றரென்றே கூற வேண்டியுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இவ்வாறே அமைதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்பதே அமைதியை விரும்புகின்ற மக்களின் விருப்பமாகும். எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கின்ற ஜனநாயக உரிமை வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. வாக்காளர்கள் தமது உரிமையை தேர்தலில் இரகசியமாக வெளிப்படுத்துவதே உகந்தது.
எதிர்தரப்பு ஆதரவாளர்களை அகெளரவப்படுத்துவதோ, அவர்களுக்கு ஊறு விளைவிப்பதோ நாகரிகம் அல்ல. இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நாகரிகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது. அதேவேளை, இத்தேர்தலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. வெற்றி பெற்ற தரப்பினர் தமக்கு எதிரானவர்களுக்கு துன்பம் விளைவித்ததாக எந்தவொரு முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. வெற்றி பெற்றவர்கள் மாத்திரமன்றி, தோல்வியுற்ற தரப்பினரும் அமைதியையே கடைப்பிடித்துள்ளனர்.
இதுவே அரசியல் நாகரிகம் என்பதாகும். அரசியலைப் பொறுத்தவரை இவ்வாறான புரிந்துணர்வு, ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார். அரசியல் விரோதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் நலன்கருதி ஒத்துழைப்புடன் செயற்படுவதே அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று கடைப்பிடிக்க வேண்டிய பண்பு ஆகும்.