2023/2024ஆம் ஆண்டுகளுக்குரிய வருமான வரியை செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு 1944 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள தமது பிராந்திய அலுவலகத்தை நாடுமாறும், உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்தது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய அனைவரும் அந்த மதிப்பீட்டு ஆண்டுக்குரிய அனைத்து வருமான வரிகளையும் நாளை திங்கட்கிழமை 30ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்க வேண்டுமென இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சேபாலிக்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய குறிப்பிட்ட திகதிக்குள் வரி செலுத்த தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுமென்பதுடன், வட்டி தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாதெனவும், இறைவரி திணைக்களம் தெரிவித்தது.
எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன் நிலுவையிலுள்ள அனைத்து முன்னிருப்பு வரிகளையும் செலுத்தி முடிக்க வேண்டுமெனவும் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களம், குறிப்பிடப்பட்ட திகதிக்கும் பின்னர் வரி செலுத்தாது தவறும் போது வரிகளுக்கான உள்நாட்டு இறைவரி சட்ட நியதிக்கமைய சட்ட நடவடிக்கையுடன் கடுமையான சேகரிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டது.