Home » பொதுத் தேர்தலில் பொதுச் சின்னத்தில்

பொதுத் தேர்தலில் பொதுச் சின்னத்தில்

களமிறங்குகிறார் திலித் ஜயவீர

by Damith Pushpika
September 29, 2024 7:30 am 0 comment

பாராளுமன்ற தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவதுடன் பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் பிரசாரத்தின் போது பொய்யான வாக்குறுதிகளை நான் வழங்கவில்லை.

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். அதேபோல் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மவ்பிம ஜனதா கட்சியின் உறுப்பினர்களை களமிறக்குவேன். பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம். பலமாக அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போமென்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை முன்னிலைப்படுத்தி மக்களாணையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார்.

அவரது முயற்சியை மக்கள் தோற்கடித்தனர். அதேபோல் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்களையும் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தேசியத்தை பேசிக் கொண்டு ராஜபக்ஷர்களால் இனி ஆட்சிக்கு வர முடியாது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division