Home » ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவு
09 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்யும்

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவு

by Damith Pushpika
September 22, 2024 6:00 am 0 comment
  • 75 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு
  • சிறு சிறு சம்பவங்கள் தவிர்ந்த குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் பதிவில்லை
  • இன்று முழுமையான பெறுபேறுகள் வெளியிட முடியும்
  • வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறு அறிவுறுத்து

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மிக அமைதியான வகையில் நடைபெற்றது.

நாட்டு மக்கள் வாக்களிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதோடு இம்முறை தேர்தலில் 75 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு நடைபெற்றது.

கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும் போது இம்முறை சற்று குறைந்த வாக்குப் பதிவுகளே இடம்பெற்றுள்ளன. அத்துடன் தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் குறிப்பிடத்தக்க எத்தகைய வன்முறைகளோ முறைகேடுகளோ பதிவாகவில்லை என்றும் சிறு சிறு வன்முறை சம்பவங்களும் தேர்தல் சட்டங்களை மீறியுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 04 மணிக்கு நிறைவடைந்ததுடன் நேற்று நள்ளிரவு தபால் மூல வாக்களிப்புக்கான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்தும் மாவட்ட மற்றும் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதுடன் இன்றைய தினம் மாலை முழுமையான முடிவுகளை வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார்.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்றுக்காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவு பெற்றதுதுடன் அதற்கான நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

அதற்கிணங்க இம்முறை தேர்தலில் அதிகூடிய வாக்களிப்பு நுவரெலியா, கண்டி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த மூன்று மாவட்டங்களிலும் 80 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் 78 வீத வாக்களிப்பும் மொனராகலை மாவட்டத்தில் 77 வீத வாக்களிப்பு மற்றும் புத்தளம், இரத்தினபுரி மாவட்டங்களில் 75 வீத வாக்களிப்பும் பதுளை மாவட்டத்தில் 73 வீத வாக்களிப்பும் திகாமடுல்ல மாவட்டத்தில் 70 வீத வாக்களிப்பும் கிளிநொச்சி மாவட்டத்தில் 68 வீத வாக்கெடுப்பும் வன்னி மாவட்டத்தில் 65 வீத வாக்களிப்பும் இரத்தினபுரியில் 75 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

இம்முறை தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றதுடன் குறிப்பிடத்தக்க வன்முறைகள் மற்றும் முறைகேடுகளின்றி இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியாக நடந்த தேர்தல் இதுவென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் 4 மணியின் பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்குகளை என்னும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,713 நிலையங்களில் இரவு 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

நேற்றைய வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேர்தல் வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றதாகவும் தொடர்ந்து முழுமையான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இதே விதமாக அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதே நேரம் வெற்றியை மிக அமைதியாக கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமானால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் 13321 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது. அதனை யடுத்து 1,713 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குகளை என்னும் நடவடிக்கைகளுக்காக 50 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த வகையில் நேற்று வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மற்றும் கிழக்கில் சில பகுதிகளிலும் நண்பகல் 12 மணி வரை வாக்குப் பதிவுகள் மந்த கதியிலேயே வாக்களிப்பு இடம்பெற்றதுடன் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் வாக்கு பதிவு வீதம் வேகமாக அதிகரித்ததைக் காண முடிந்தது.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கணிப்புகளின்படி கொழும்பு மாவட்டத்தில் 15 தொகுதிகளில் 17,65,351 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 80 வீதமானோரும் , கம்பஹா மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 1,881,129 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 80 வீதமா னோரும் , களுத்துறை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 10,24,244 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீத மானோரும் வாக்களித்துள்ளனர்.

அத்துடன்,கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 11,91,399 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 78 வீதம் வரையிலானோரும் ,மாத்தளை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 4,29,991 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 74 வீதம் வரையிலானோரும் , நுவரெலியா மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 6,05,292 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 80 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 9,03,163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 74 வீதம் வரையிலானோரும் , மாத்தறை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 6,86,175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 83 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 5,93,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 67 வீதம் வரையிலானோரும் , வன்னி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 3,06,081 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 69 வீதம் வரையிலானோரும் வக்களித்துள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 4,49,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 69 வீதம் வரையிலானோரும் , திகாமடுல்ல மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 5,55,432 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 70 வீதம் வரையிலானோரும் , திருகோணமலை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 3,15,925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 76 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் 14 தொகுதிகளில் 14,17,226 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீதம் வரையிலானோரும் , புத்தளம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 6,63,673 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீதமானோரும் வாக்களித்துள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 7,41,862 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீதம் வரையிலானோரும் , பொலனறுவை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 3,51,302 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 78 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 7,05,772 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 73 வீதம் வரையிலானோரும் , மொனராகலை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 3,99,166 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 77 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 9,23,736 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீதம் வரையிலானோரும் , கேகாலை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 7,09,622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 75 வீதம் வரையிலானோரும் வாக்களித்துள்ளனர்

இம்முறை இலங்கையில் நடைபெறும் இந்த ஜனாதிபதித் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஆயிரக்கணக்கான உள்ளூர் கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான பணிகள் முற்றாக நிறைவு பெறும் வரை அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வெற்றி பெறும் வேட்பாளர் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் தமது வெற்றியை கொண்டாடுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division