ருவண்டி பிளஸ் 20+’ என்ற பெயரில் 105 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது புத்தளம் பைஸானா என்ற புனைபெயரில் எழுதி வருகின்ற செல்வி பைஸானா பைரூஸ் வழங்கியிருக்கின்ற தமிழ்க் கவிதை நூல்.
இஸ்லாஹியா பெண்கள் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முதலாம் வருட மாணவியாக கல்விபயிலும் அவரின் முதலாவது நூல் இது.
தன்னம்பிக்கை விதைகளை விதைக்கின்ற, தடைகளைத் தாண்டக் கட்டளையிடுகின்ற, உற்சாக மூட்டுகின்ற, இளமை வரிகளைக் கொண்டதான 55 கவிதைகளை நூல் உள்ளடக்கியிருக்கின்றது. இஸ்லாஹியா பெண்கள் கல்லூரி விரிவுரையாளர் எச். எம். மின் ஹாஜ் இஸ்லாஹி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் முறையே அணிந்துரை, வாழ்த்துரைகளை வழங்கியுள்ளனர்.
புதுக் கவிதை என்ற கட்டற்ற கவிதை (Free verse) வழங்கியிருக்கின்ற சுதந்திரத்தில் கருத்துகள் தம்மைத் தாமே ஆளும் வடிவத்தில் வரிகளை அடுக்குகிறார் பைஸானா.
வயதுக்கேற்ற துணிச்சலும் துடிப்பும் அச்சமின்மையும் வரிகளில் பரிணமிக்கின்றன. மானுட நேயம், பெண்மை, சமூக எழுச்சி, நீதி, சமத்துவம், உழைப்பு முதலிய பொருட்பரப்புகளில் இலட்சிய நோக்கில் கவிதைகள் விரிகின்றன.
“அடங்கி யொடுங்கி
அமைதி காத்து
அநியாயத்தையும் அடைகாத்ததால்
பிறந்த தென்னவோ
அநீதி என்கிற அரக்கன் ஒன்றுதான்!
தவறிழைக்க வில்லை
தப்பேதும் செய்யவில்லை
தனவந்தரிடம் தலைகுனிவது மட்டும்
எம்மாத்திரம்..
எதிர்த்துப் பேசு!போராடு!
எதிரிகளின் களத்தில்
உனக்கான நீதி கிடைக்கும் வரை .
கலங்காதே!
கதிகலங்க விடு !
கதைத்துப் பயனில்லை என்றால்
கால்கள் தான் களம் அமைக்க
வேண்டும்”
என்று அநியாயத்திற் கெதிராகக் கொதித்தெழ அழைப்பு விடுக்கிறார் இளையகவி பைஸானா.
புதிய ஆத்திசூடியில் புதுமைக் கவிஞன் பாரதி, “அச்சம் தவிர், ஆண்மை தவறேல், ஏறுபோல் நட” என்று ஆணை இடுவான். அதனையொத்த சிந்தனைகளை விதைப்பனவாக பலகவிதைகள் இந்நூலில் அமைந்திருக்கின்றன.
“என்னைப் பொறுத்தவரை
எனக்கு நானே வரையறை
வரம்புகள் விரிப்பேன். அதில் நானே
விதைப்பேன்
அதை நானே அறுவடை செய்வேன்
என் தேசத்தில் எனக்கு
நான்தான் ராஜா
நான் எடுப்பது தான் எனக்கு ஆணை
நான் தான் என்னை
வழிப்படுத்துகிறேன்!
நான் பார்ப்பது என் மனசாட்சிக்கு அது சரியா என்பதை மட்டும் தான்!
என்ற கவிதை, ‘நிமிர்ந்து நட, ஏறுபோல் நட’ என்று அறிவுரை கூறுவதாகவும், தைரியமூட்டுவதாகவும் அமைந்து வழிகாட்டுகின்றது. ஓர் ஊக்குவிப்புப் பேச்சாளரைப் போல மனங்களோடு பேசுகிறார் அவர்.
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீயே நீதிபதி” என்ற கவியரசர் கண்ணதாசனின் கவி வரிகளில் காணப்படும் பொருண்மையை இக் கவிதையிலும் நாம் சுவைக்கலாம் .
“எனக்குச் சிறகுண்டு
என்னால் பறக்க முடியும்
என்னால் சிகரத்தை தொட முடியும்
என்னால் மழைமேகத்தை கிழித்துக்கொண்டு வானத்தை தொடவும் முடியும்
என் பேனா வேண்டுகிறது நீதியை
அது மட்டும்
கதவுகளை திறக்கும் வரை
சிறகடிக்க நான் என்றும்
மறுக்கவே மாட்டேன்” என்று வீரியச் சொற்களில் உரத்துக் குரலெழுப்புகிறார் பைஸானா. ஒரு பெண்ணாக அவர் பாடுகின்ற வரிகள் பெண்களின் எழுச்சி, விழிப்புணர்வு என்பவற்றை எடுத்தியம்புவதாகவும் உரம் சேர்க்கிறது.
“புத்தியை தைக்கும் புதுக்கவிதைப் படைப்பாளி நான், புன்முறுவலோடு புதிரவிழ்க்க புனைந்துரைகளைப் புரட்டிப் பார்ப்பவள்!
உன்னத உத்திகள் பலதை
உதட்டளவில் உச்சரித்து
ஊசி முனைகளால் உருக்கி
படைப்புக்களை படைக்கும் படைப்பாளி நான்!”
என்று தனது கவிதைக்கோட்பாட்டை முன்வைக்கிறார் இளைய கவி பைஸானா.
வரிகள் ஒத்திசைப்போடு இயங்குவது கவிதை வாசகர்களுக்கு இன்பம் தருவதாகும். ஆயினும், ஒரே விதமான மொழி நடையிலேயே கவிதைகள் அனைத்தும் சொல்லப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். கவிதை வாசிப்பை இன்னும் தூண்டி விடுவதற்கு, வாசகர்களை ஈர்க்கும் வகையில் படிமம், குறியீடு, அங்கதம், முரண் போன்ற உத்திகளைக் கையாள்வது பயனளிக்கும் என்பதை இங்கு சொல்லி வைக்கலாம்.
நூலின் தலைப்பை “ருவண்டி பிளஸ் 20+” என்று ஆங்கிலத்தில் வைக்க வேண்டுமா? என்று மனம் வினாவெழுப்புவதை சொல்லாமலிருக்க முடியவில்லை.
தமிழ் செம்மொழி. சொல் வளம் நிறைந்த மொழி. மேலும், மொழியின் நாகரிகம் கவிதை என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான, தமிழ் மொழியில் அமைந்த கவிதை நூலுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு ஏன் என்று கேட்பதற்கு இடமுண்டு. கவிஞர் 20+ க்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்று கருதியிருந்தால் இலக்கத்தில் மாத்திரம் 20+ என்று தலைப்பிட்டிருக்கலாம் என்று சொல்ல மனம் விரும்புகிறது. கவிதைத் துறைக்குள் காலடி வைத்துள்ள இளைய கவி பைஸானாவின் கவிதைகள் உன்னத பொருட்பரப்பைப் கொண்டுள்ளன.
இலக்கியத் தேடல்களாலும், வாசிப்பின் தீவிரத்தாலும் கவித்துவ நுட்பங்களைப் புரிந்து கொண்டு இன்னும்பல நூல்களை அவர் தர வேண்டுமென்பதே நமது பிரார்த்தனையாகும்.
ஒப்பு நோக்கல், செம்மைப்படுத்தல் என்பவற்றில் கரிசனை செலுத்தும் போது, எழுத்துப்பிழைகள், அச்சுப்பிழைகள் என்பவற்றையும் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
****
நூலாசிரியருக்கு நமது வாழ்த்துகள்.
நூல்:- ருவெண்டி பிளஷ் 20/-
நூலாசிரியர் :- பைஸானா பைரூஸ்
வெளியீடு:- மூதூர் ஜே. எம். ஐ. வெளியீட்டகம்
விலை-:- ரூபா 500/-
பாவேந்தல் பாலமுனை பாறூக்