Home » எரிக் காமினி ஜினப்பிரியவின் நூலும் தேர்தல் ஆணைக்குழுவும்

எரிக் காமினி ஜினப்பிரியவின் நூலும் தேர்தல் ஆணைக்குழுவும்

by Damith Pushpika
September 8, 2024 6:04 am 0 comment

இலங்கையினுள் தேர்தல் செயற்பாடுகளைச் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும், நியாயமாகவும் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான கடமையாகும். அதனால்தான் இலங்கை அரசியலமைப்பினால் தேர்தல் ஆணைக்குழு ஒரு சுதந்திர நிறுவனமாக நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட கட்டளைகளுக்கு அமைவாகவும் அரசியலமைப்பிற்கு அமைவாகவும் நடத்தும் பொறுப்பை தேர்தல் ஆணைக்குழு நிறைவேற்றுகிறது. எனவேதான் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் இந்தக் காலத்தினுள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் பாரிய பணிகளை தேர்தல் ஆணைக்குழுவினால் செய்ய வேண்டியுள்ளது.

அந்தவகையில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் போது தேர்தல் ஆணைக்குழுவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அது தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இந்நாட்டில் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனம் ஈர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. செப்டெம்பர் 04ஆம் திகதி திவயின பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எரிக் காமினி ஜினப்பிரியவினால் எழுதப்பட்ட “NPP கதையும் ஜே.வி.பி நடவடிக்கையும்” என்ற நூல் பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் வைத்து வெளியிடப்படவிருந்தது. இந்த நிகழ்விற்கு பெங்கமுவே நாலக தேரர் தலைமை தாங்கவிருந்ததோடு, ஓமரே கஸ்ஸப தேரர், சி.ஏ.சந்திரபிரேம மற்றும் சுமேத வீரவர்தன ஆகியோரினால் உரைகள் ஆற்றப்படவிருந்தன.

அவ்வாறிருக்கையில் இந்தக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய, பொரளை பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். எனினும் ஏற்பாட்டாளர்கள் இது தொடர்பில் விடயங்களை முன்வைத்ததன் பின்னர் அதிதிகளின் உரைகள் இன்றி குறித்த நூலை வெளியிடுவதற்கு இடமளிக்கப்பட்டது. இலங்கை எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட புத்தகத்தை வெளியீடு செய்வதைத் தடை செய்தமை தொடர்பில் நாம் கேள்விப்படுவது இதுவே முதல் தடவையாகும். நாட்டின் அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கு ஊடகங்கள் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்றாலும் ஒரு எழுத்தாளரால் வெளியிடப்படும் ஒரு புத்தகம் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தொடர்பில் தேர்தல் சட்டத்தினால் இனங்காணப்பட்டிருப்பதாகவும், புத்தக வெளியீட்டை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் விதிகள் உள்ளனவா என்பதும் தெரியவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில், பல்வேறு எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் தொடர்பில் அறியக்கிடைக்கின்றது. 1965 அல்லது 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது, ​​ஐக்கிய தேசியக் கட்சியின் ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் “திப்பத்தயே பௌத்த சங்காரய” என்ற புத்தகம் விநியோகிக்கப்பட்ட முறை எனக்கு நினைவிருக்கிறது. அதன்போது எனக்கும் ஒரு புத்தகம் கிடைக்கப்பெற்றதோடு, இன்று வரை அந்தப் புத்தகம் என்னிடமுள்ளது. நாட்டில் மார்க்சியம் வலுப்பெற்றால் பௌத்தம் அழிந்து போகலாம் என்பதை பொதுமக்களுக்கு புரியவைக்கும் வகையில் புத்தகம் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

1977ஆம் ஆண்டு தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியால் வெளியிடப்பட்ட “குடும்ப மரம்” என்ற புத்தகம் நினைவுக்கு வரக்கூடிய மற்றுமொரு வெளியீடாகும். பண்டாரநாயக்கா குடும்பம் “குடும்பம்” என்ற கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரமாக மாறியதை அந்தச் சிறிய புத்தகம் விபரிக்கிறது. அந்தத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தப் புத்தகம் விற்கப்பட்டது. அது பணத்துக்காக விற்கப்பட்டாலும், இலங்கையினுள் இந்தப் புத்தகம் எப்படி அதீத பிரபலமடைந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது.

மறுபுறம், இந்த ஆண்டு தேர்தலுக்காக அரசியல் கட்சிகளினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை அவதானிக்கும் போது, ​​அவையும் புத்தக வடிவிலான வெளியீடுகள் என்பது தெளிவாகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் A4 தாளில் 62 பக்கங்களைக் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனம் அதே அளவு 233 பக்கங்களைக் கொண்டது. சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் அதே அளவு 38 பக்கங்களைக் கொண்டது. பல்வேறு விஷயங்களில் அந்தந்த கட்சிகள் வைத்திருக்கும் சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகங்கள் என்றும் அவற்றை அழைக்கலாம். தேர்தல் ஆணைக்குழு நியாயமான தேர்தல்களுக்கான தனது அளவுகோல்களை வகுக்கும் போது எப்போதும் பயன்படுத்தி வந்துள்ள ஒரு சொல் “வேட்பாளர்களை ஊக்குவிக்கும் அல்லது மற்றைய வேட்பாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும்” என்பதாகும். உதாரணமாக, எந்தவொரு வேட்பாளரையும் ஊக்குவித்தல் அல்லது மற்றைய வேட்பாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறையை ஊடகங்கள் பின்பற்றக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் எந்தவொரு வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனமும் அந்த வேட்பாளரை மக்கள் மத்தியில் பரபலப்படுத்துவதற்குப் பயன்படுவதோடு, நிச்சயமாக அது மற்றைய வேட்பாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனினும் அவ்வாறான தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடுவதைத் தடுக்கும் திறன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எரிக் காமினி ஜினப்பிரியவின் “NPP கதையும் ஜேவிபி நடவடிக்கையும்” என்ற நூல் வெளியீட்டு விழாவைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வாறு முடிந்தது என்பது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டினுள் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எழுத்தாளர்களின் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கோ, கட்டுப்படுத்தவோ எந்த ஒரு அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் சில புத்தகங்களைத் தடைசெய்யும் யோசனைகளை முன்வைத்த சந்தர்ப்பங்கள் இருந்தன. இருப்பினும், இதுபோன்ற செயல்கள் அரிதாகவே நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நாட்டில் எழுத்தாளர் தலைமுறையினர் அனுபவிக்கும் சுதந்திரத்தை தேர்தல் காலத்தில் கட்டுப்படுத்த தேர்தல் சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற பிரச்சினை எழுகிறது.

இந்தச் செயற்பாடானது அரசியலமைப்பில் கடுமையான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை கடுமையாக மீறும் செயற்பாடாகும். அந்த நூல் வெளியீடு ஏதேனும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எவராவது முறைப்பாடு செய்துள்ளார்களா என்பதை தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் அந்த இந்நிகழ்ச்சியைத் தடைசெய்யும் அளவுக்குப் போதிய விடயங்கள் அந்தப் புத்தகத்தில் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள எவராவது புத்தகத்தை வாசித்திருக்கிறார்களா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அந்த பேச்சாளர்களின் பேச்சுக்கள் தடை செய்யப்பட்டது அந்த உரைகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஏதாவது தீங்கு இருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் காரணமாகவா, இல்லாவிட்டால் அந்த அனுமானத்திற்கு அடிப்படையாக இருந்த சாட்சிகள் என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். நாட்டில் தேர்தல் நடத்தப்படுவதால் கல்வியலாளர் குழுவின் பேச்சை நிறுத்த எந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நியாயமான தேர்தலை நடத்தும் போது எந்தவொரு குழுவும் வற்புறுத்தல், அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுமானால் அத்தகைய நிலைமையைத் தடுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். நீண்ட காலமாக நாட்டின் இசைத்துறையில் மக்களை மகிழ்வித்து வரும் “மேரியன்ஸ் இசைக்குழு” அண்மையில் சந்தித்த சோகமான சூழ்நிலை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியால் இந்த இசைக்குழுவுக்கு கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுதல்கள் விடுக்கப்பட்டமை அனைவரும் அறிந்த உண்மையாகும். அந்தக் குழுவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். தனது உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தக் குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பிறகு யாருக்கும் தீங்கு விளைவிக்க விட மாட்டோம் என்று அறிவித்த அரசியல் கட்சியிடமிருந்து நாட்டில் உள்ள பிரபல இசைக் குழுவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மரண அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை அந்த இசைக் குழு, நாட்டுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. அவ்வாறானவர்கள் வெற்றி பெற்றால் நாட்டில் அமைதியான சூழல் பேணப்படும் என்ற கூற்று உண்மையல்ல என்பது அதனூடாகத் தெளிவாகிறது. இரண்டாவது புத்தகத்தின் ஒரு வசனத்தைக் கூட வாசிக்காத, புத்தக வெளியீட்டு விழாவை நடத்த தடை விதிக்கும் தேர்தல் ஆணைக்குழு மரண அச்சுறுத்தல் தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாமலிருப்பது எவ்வகையான தர்மமாகும்? எரிக் ஜினபிரியாவின் புத்தக வெளியீட்டைத் தடுப்பதற்கு அனுப்பப்பட்ட பொலிஸாருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு மறந்துள்ளது. தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கேள்வி, தேர்தல் ஆணைக்குழுவினுள் உள்ள ஒருவரின் அழுத்தம் காரணமாக அது ஒரு கட்சிக்கு சார்பாகச் செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகமாகும். தேர்தல் காலம் முழுவதும், ஒரு கட்சியோடு தொடர்புடைய நிறங்கள் முச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டமை, அவ்வாறே பயணிக்கின்றமை போன்றன தொடர்பில் ஏராளமான தகவல்கள் வெளியாகியும் தேர்தல் ஆணைக்குழு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனினும் ஐக்கிய தேசிய கட்சியினர் காலி முகத்திடலில் முச்சக்கர வண்டிகளில் இவ்வாறான ஸ்டிக்கர்களை ஒட்டும்போது, ​​வாகனங்களில் அவ்வாறானவற்றை ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் எவரோ ஒருவரின் அழுத்தங்களுக்கு அடிபணியாது ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையினை ஏற்படுத்திக் கொள்வது ஆணைக்குழவின் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்..

மக்கள் நேசன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division