ஹமாஸ் – இஸ்ரேல் போர் ஏறக்குறைய 11 மாதங்களை கடந்து நகர்கிறது. தற்போதைய பிராந்திய அரசியல் சூழலில் யூதர்கள், போரை தொடங்கிய ஹமாஸின் மீதான நடவடிக்கையை விடுத்து இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். பணயக் கைதிகளை மீட்டெடுக்கும் கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரண்டு நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய போராட்டம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை நோக்கிய புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்த விளைகிறது.
போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பல பணயக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக ஹமாஸ் அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீண்ட அறிக்கை ஒன்றினை ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளின் குடும்பங்களுக்காக வெளிப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பதிலாக இராணுவ அழுத்தத்தினால் பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு அரசாங்கம் வலியுறுத்துவது என்பது பணயக் கைதிகள் தங்கள் குடும்பங்களுக்கு சடலங்களாக திருப்பி அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதாக அமைவதோடு அவர்கள் இறக்க வேண்டுமா அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா என்பதை பணயக் கைதிகளின் குடும்பங்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31.08.2024 காசாப் பகுதியில் ஆறு பணயக் கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இதன் பிற்பாடு ஹமாஸுடைய அறிக்கையும் யூத மக்களினுடைய எதிர்ப்புணர்வும் நெதன்யாகு அரசாங்கத்துக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கி பல சந்தர்ப்பங்களில் யூதர்கள் போரை நிறுத்துவதற்கு பல போராட்டங்களை ஆரம்பகாலத்தில் பணயக் கைதிகள் தொடர்பாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் அவை எவையும் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது இஸ்ரேலின் தொழிற்சங்கங்கள் பாரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. டெல்அவிவ் உட்பட இஸ்ரேலின் நகரங்கள் அனைத்திலும் போராட்டம் நிகழ்ந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதற்கு எதிராக இராணுவமும் காவல்துறையும் செயல்பட்ட போதும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. யூதர்கள் நெருக்கடி மிக்க சூழலில் தமது உறவுகளை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்தை ஹமாஸ் முன் வைத்திருக்கும் பேச்சுவார்த்தை மற்றும் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதோடு பணயக் கைதிகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன. கடந்த 01.09.2024 இல் இஸ்ரேலில் நாடு முழுவதும் செயல்படும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தன. அத்தகைய அழைப்பை ஏற்று பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். புரதான வீதிப் போக்குவரத்து மற்றும் பென்கூரியர் விமான நிலையமும் குறிப்பிட்ட நேரத்துக்கு மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. போராட்டத்தை நீடிப்பதன் மூலம் இஸ்ரேல் அரசின் ஹமாஸுக்கு எதிரான நடவடிக் கைகளை நிறுத்த முடியுமா என்ற கேள்வி முதன்மையானது. இதனை விளங்கிக் கொள்வதற்கு இது சார்ந்து எழுந்திருக்கின்ற பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
முதலாவது, இஸ்ரேல் நடத்தும் போர் ஹமாஸுக்கும் பலஸ்தீன மக்களுக்கு எதிரானது என்ற ஒரு பார்வை பொதுத்தளத்தில் நிலவுகிறது. ஆனால் அடிப்படையில் அது பிராந்திய ரீதியான ஒழுங்கையும், சர்வதேச அரசியல் ஒழுங்கையும் கட்டமைப்பதற்கான போராக அமைந்துள்ளது. அடிப்படையில் அதற்கு ஏதோ ஒரு பிராந்தியப் பரிமாணம் உள்ளது. குறிப்பாக அராபிய மக்களின் மீதான போர் என்ற அடிப்படையில் மேற்காசியாவில் எழுச்சி பெறக்கூடிய அரசுகளை முற்றாகவே அழித்தொழிப்பது என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட போராக உள்ளது. அதனால் இத்தகைய போரை நிறுத்துவது என்பது அல்லது கைவிடுவது என்பது கடினமான ஒரு செய்முறையாக காணப்படுகிறது. ஈரானுக்கு எதிரான அணுகுமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரேல், மேற்குலகம் அது குறித்தான அரசியலுடன் இராணுவ, பொருளாதார ஒழுங்கையும் கட்டமைப்பதில் கரிசனை கொண்டு செயல்படுகிறது. இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக மட்டும் இந்த போர் நிகழ்த்தப்படவில்லை. முழு அராபிய நாடுகளுக்கு எதிராகவும், அராபியர்களை துணையாக வைத்துக் கொண்டும் இத்தகைய போரை இஸ்ரேலும் மேற்குலகமும் ஒன்றிணைந்து செயல்படுத்துகின்றன. இஸ்ரேல் பணயக் கைதிகளின் குடும்பங்கள் கூறுவது போல் அதனால் இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதும் அல்லது அவர்களை மீட்பதற்காக போரை கைவிடுவதும் சாத்தியமான ஒன்றாக தென்படவில்லை. அதனை ஒரு உத்தியாக பயன்படுத்திக் கொண்டாலும் அதற்கான விளைவுகள் ஹமாஸினால் முன்னிறுத்தப்படும். அவ்வாறு முன்னிறுத்தப்படும் விளைவுகள், இஸ்ரேலுக்கும் மேற்கு உலகத்துக்கும் தொடங்கப்பட்ட போரை உண்மையான நோக்கத்தை இல்லாமல் செய்துவிடும். ஆகவே இப்போது இலகுவில் சாத்தியமான ஒரு செய்முறை போல் உள்ளது. சுமூகமான ஒரு தீர்வுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பது கடினமானது.
இரண்டாவது சர்வதேச அரசியல் ஒழுங்கு, போருக்கு ஊடாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது. சீனாவால் எழுச்சி பெற்று வந்த பட்டி மற்றும் பாதை முன்முயற்சி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே பிரிக்ஸ் என்ற அமைப்பின் விரிவாக்கம் மேற்காசிய நாடுகளையும் இணைப்பதில் கொண்ட ஈடுபாடு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனாவுடனான அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் அணுகுமுறை ஆழமானதாக உள்ளதோடு நோக்கு நிலையிலும் மேற்குலகத்துக்கு ஆரோக்கியமான விளைவுகளை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதனால் இப்போது உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் அதிக மாற்றத்தை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இந்த போரில் வெற்றி பெற்ற தரப்பாக சீன கருதப்பட்டாலும் அதாவது சமகாலத்தில் ஏகாதிபத்திய அரசுகளுக்குள்ளேயே உக்ரேன் ரஷ்யப் போரிலும் ஹமாஸ் – இஸ்ரேல் போரிலும் சீனா பங்கெடுக்காமல் அமைதியாக இருப்பது என்பது, அதன் வெற்றியை உறுதிப்படுத்தியதாக பல தரப்புகள் விவாதித்து வருகின்றன. ஆனால் இப்போரில் ஈடுபட்ட மேற்குலகம் அதனூடாக அதிக இலாபங்கள் உட்பட்ட உலக ஒழுங்கை வரையறுப்பதில் வெற்றிகரமான பங்கை உறுதிப்படுத்தி இருக்கின்றன. அது மட்டுமல்ல சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி வடிவங்களையும் போக்குகளையும் திசைதிருப்பி உள்ளது. ஆப்பிரிக்காவையும் இலத்தீனமெரிக்க நாடுகளையும் சீனா பெரிய அளவில் ஒன்றிணைத்த போதும் மேற்காசியாவுக்குள் இஸ்ரேலின் அணுகுமுறையினால் அத்தகைய ஒன்றிணைப்பை வெற்றிகரமாகசாத்தியப்படுத்த முடியவில்லை. ஆசியாவின் உப பிராந்திங்கள் அனைத்துமே குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. உலக ஒழுங்கு மீளவும் முழுமையான மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் தங்கியுள்ளது. இத்தகைய சூழல் ஒன்றை நோக்கி இஸ்ரேல்- – ஹமாஸ் போர் விரிவாக்கப்படுகிறது. அதனால் இந்த போரை பணயக் கைதிகளின் குடும்பங்கள் கருதுவது போல் இலகுவில் கைவிடுவது என்பது இஸ்ரேலால் மட்டுமல்ல, மேற்குலகத்தாலும் முடியாததாக உள்ளது.
எனவே, இஸ்ரேல் – ஹமாஸ் போர் பணயக் கைதிகளுக்கானதாக அல்லது அதற்கான சமாதான முயற்சிகளுக்கான ஒத்துழைப்பினை தரக்கூடியதாக அமையுமா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. ஆனால் இஸ்ரேலிய புலனாய்வுத்துறை யூத பணயக் கைதிகளை மீட்பது பெரும் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. போர் தொடங்கி 11 மாதங்களாக பணயக் கைதிகள் மறைத்து வைத்திருக்கப்படும் இடங்களையும் சந்தர்ப்பங்களையும் மொசாட் உளவு பிரிவினால் கண்டுபிடித்து மீட்க முடியாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு வகையில் ஹமாஸ், காசா எல்லைக்குள்ளேயே பணயக் கைதிகளின் சடலங்களை விட்டுச் செல்வதனால் பலவீனம் அதிகரிக்கின்றது. அதேவேளை ஹமாஸ் தரப்பு மொசாட்டையும் கையாளும் திறன் உடையதாக மாறிவருகிறது என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். யூத இராணுவத்துக்கும் இது ஒரு பெரும் எச்சரிக்கையாகவும் பலவீனமானதாகவும் தென்படுகிறது. எனவே பணயக் கைதிகள் குடும்பங்கள் எத்தகைய போராட்டத்தை முன்னெடுத்தாலும் அதற்கான சரியான தீர்வை இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குரியது. காரணம் இது ஒரு பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் பரிமாணங்களைக் கொண்ட போர் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.