ஈழத்து நவீன இலக்கியம் 50களில் தொடக்கம் பெறுகிறது. இதில் இடதுசாரி முற்போக்கு இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. மெரினா பீச் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அதற்கு எதிரான இயக்கமான இடதுசாரி முற்போக்கு இயக்கத்தின் பங்களிப்பானது ஈழத்துத் தமிழ் கலை இலக்கியத்தின் போக்கைத் திசை திருப்பியது. அதன் வெளிப்பாடாகக் காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட, பிரித்தாளும் தந்திர உபாயத்திற்குப் பயன்பட்ட சாதியம், அரசியலுக்கும் எதிரான இயக்கமாகவும் தோற்றம் பெற்றது. வர்க்கப் போராட்டம், தேசிய இலக்கியம், பிரதேச இலக்கியம், மண்வாசனை இலக்கியம் எனப் பல போக்கில் எழுதும் பல படைப்பாளிகள் தோற்றம் பெற்றார்கள். அந்த வகையில் இவற்றுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள் பெரும் உந்து சக்தியாக அமைந்தன.
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சாதிய கொடுமையும், ஒடுக்கப்பட்டவர்கள் சமூக ரீதியாகப் பல வழிகளில் எதிர் கொண்ட கொடுமைகளையும் அநியாயங்களையும் ஈழத்துத் தமிழ் படைப்பாளிகள் தம் படைப்புகளில் வெளிப்படுத்திய பொழுது, ஈழத்து தமிழ்ச் சூழலில் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கிய இயக்கம் உருவானது. அந்த இயக்கத்தின் ஒருவராக ஜீவா திகழ்ந்தார்.
ஜீவா ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். கடைசி வரை இடதுசாரி சிந்தனையில் இயங்கியவர். சாதிய அரசியால் மிகவும் பாதிக்கப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர். அதை மீறியும் தன்னை தக்க வைத்துக் கொண்டவர். ஈழத்து தமிழ்ச் சூழலில் குறிப்பாக யாழ்ப்பாண சூழலில் சாதிய அரசியல் உச்ச நிலை இருந்த காலகட்டத்தில் எழுத வந்தவர்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியப் பிரதிகளைத் தந்த முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அடுத்தவர் கே.டானியல்.
ஜீவா ஒடுக்கப்பட்ட, சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் இயக்க ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் இயங்கியவர்.
ஜீவா படைத்த சிறுகதைகள், மற்றும் அவர் ஆரம்பித்த மல்லிகை இதழ்களில் தந்த அ-புனைவு பிரதிகள் வழியாகவும், அவர் எதிர் கொண்ட சாதிய மற்றும் வர்க்கப் போராட்டங்கள் வழியாகவும் தான் பெற்ற அனுபவங்கள் சார்ந்த கருத்துகளை முன் வைத்தார்.
இதற்கு உதாரணமாக ஜீவாவின் பல படைப்புகளை எடுத்துக் காட்டாலாம். அவரது இரு கதைப் பிரதிகளை வைத்து மேற்படி தலைப்பில் சில கருத்துகளை முன் வைக்கிறேன்.
அவரது “காலத்தால் சாகாதது “ என்ற கதைப்பிரதியை ஜீவா இப்படி ஆரம்பிப்பார்..
”நூற்றைம்பது ஆண்டுகளாக இலங்கை மக்கள் மீது ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள்தான் விதானைமார்கள். இந்தத் திருக்கூட்டத்தினர், இப்பொழுது பல்லிழந்த பாம்புகளைப்போல தங்கள் அதிகாரங்கள் பலவற்றை இழந்திருப்பினும், இந்த உண்மையை உணராத விதானையார் பரம்பரையில் உதித்த, மமதையுடன் வாழ்பவர்தான் மயில்வாகனம் அவர்கள்”
இவர்களால் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை பொலிஸ் உத்தியோகத்தில் இணைய தேவையான அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற விதானையாரிடம் வருகிறான், ’இவன் எல்லாம் என்ன பெரிய உத்தியோகத்திற்குப் போறது’ என சாதித் திமிருடன் அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி நாளை வா என்று சொல்லி அனுப்பி விடுகிறார், ஒரு நாள் அந்த விதானையாரின் மகள் கிணற்றில் விழுந்து விடுகிறாள். விதானை அத்தாட்சிப் பத்திரதை பெறமுன்னர் வந்த பொன்னுத்துரை, அவ்வழியாக வந்தான். எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்தக் கிணற்றில் குதித்து விதானையாரின் மகளைக் காப்பாற்றி விடுகிறான்.
பொன்னுத்துரை விதானையாரின் மகளை காப்பாற்றியதற்கு நன்றியாக அவன் கேட்ட அந்த அத்தாட்சிப் பத்திரத்தை விதானையார் கொடுப்பார் என வாசகர்கள் எதிர்ப்பார்கள்.
ஆனால் விதானையார் செய்தது என்ன? தாங்கள் குளிக்கும் கிணற்றில் அவரால் தாழ்த்தப்பட்டவன் என அடையாளப்படுத்தப்பட்ட, ஒருவன் குதித்து, அக்கிணற்றை தீட்டுப்படுத்தி விட்டான் என்ற காரணத்தால் அந்த கிணற்றை இறைக்கச் சொல்லுகிறார். இச்செயல் விதானையாரின் சாதி வெறியையும் திமிரையும் அப்பட்டமாக எடுத்து காட்டியது,
இப்படியாக ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தின் உயர்வான அந்தஸ்தையும் கல்வியில் வளர்ச்சி பெறுவதையும் விரும்பாமை, நன்றி பாராட்ட வேண்டிய இடத்திலும் கூட, சாதி திமிரைக் காட்டியமை போன்ற உயர்குடியினராகக் கருதப்படுவோரின் குணங்களை ஜீவாவின் மேற்படி பிரதி எடுத்துக்காட்டியது.
இவ்வாறான பல விடயங்கள். ஒடுக்கியவர்களின் சாதித் திமிரால் ஜீவாவின் தனிப்பட்ட வாழ்விலும் நடந்திருக்கின்றன என்பதை அவரது சுயசரிதை நூலான ”எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” எனும் நூலில் மூலம் அறிந்து கொள்ள கூடிதாக இருந்தது.
சில சம்பவங்கள்
1.பாடசாலையில் ஜீவா ஆரம்பக் கல்வியை கற்று கொண்டிருந்த நேரத்தில் சாதித்திமிர் பிடித்த வாத்தியார் ஜீவாவின் சாதியைச் சொல்லி உங்களுக்கெல்லாம் எதற்கு படிப்பு? என்று சொல்லி அவமானப்படுத்தியிருப்பார். அந்த கோபத்தால் ஜீவா பாடசாலை கல்வியை கை விடுகிறார்.
2. ஜீவா அவரது சிறுகதைத் தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் தொகுப்புக்கு சாகித்திய விருது பெற்றதை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட வரவேற்பைக் கேள்விப்பட்ட ஆசிரியர் ஒருவர் அவரது சாதியைச் சொல்லி அவ்வாறானவர்களுக்கெல்லாம் சாகித்திய விருதா? என்று நக்கலாக கேட்டார். இதுவும் சாதித் திமிர்.
3.ஜீவா நடத்திய மல்லிகையின் ஒரு பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய ஒரு இளைஞர், சாதித் திமிரால் யாழ்ப்பாணத்து நடு வீதியில் கிழித்தெறிந்து ஜீவா முகத்தில் வீசியது.
(பிற்காலத்தில் ஜீவாவை ஐரோப்பிய நாடொன்றின் வீதியில் சந்தித்த அதே இளைஞன் மேற்படி சம்பவத்தை நினைவூட்டி மன்னிப்பு கேட்டதை அந்த நூலில் எழுதி இருப்பார்.)
இப்படியாக சாதித் திமிர் தொடர்ந்தது. பின் காலனியச் சூழலில் ஒடுக்கப்பட்டவர்களின் இயக்கம் எழுச்சி பெற்றது. அதன் காரணமாக ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தமையை ஒடுக்கியவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.
இவ்வாறாகச் சாதிய அரசியல் வர்க்கப் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையைப் பற்றி குறியீடாக சில பிரதிகளிலும் ஜீவா பேசி இருப்பார். அவரது பெரும்பான்மை பிரதிகள் சாதிய அரசியலை பற்றியும் வர்க்கப் பிரச்சினை பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் வர்க்கப் போராட்டம் பற்றியும் பேசும்
இந்த வரிசையில் 1958 இல் எழுதப்பட்ட ஜீவா வின் அடுத்த பிரதியான தீர்க்கதரிசி பற்றி..
பிரபலமான அப்புகாத்து பாரிஸ்டர் பரநிருசிங்கர், 1956ஆம் ஆண்டு, சாதி, பிரதேசம், பொருளாதாரம், மதம் போன்ற எந்த விதமான பேதங்களுமின்றி, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்.
அதனால் பெரும்பான்மை மக்கள் பற்றிய கருத்தினை மாற்றிக் கொண்டவராக , வெள்ளைக்காரன் நல்லவன் என்று தீர்மானித்தவராக, தான் பிறந்த மண்ணான இலங்கை ஒரு மோசமான நாடு என்ற முடிவுடன், காலனியவாதிகளுக்கு விசுவாசமான பாரிஸ்டர் பரநிருசிங்கர் லண்டனுக்கு குடும்பத்தார் சகிதம் இடம் பெயர்கிறார். லண்டனுக்குப் போக கப்பலேறுகிறார், லண்டனில் இலங்கை நண்பர்கள் பலருக்கும், தான் வரப்போவதாக அறிவித்தும், அவர்களில் ஒருவரேனும் தன்னை வரவேற்க வராததைக் கண்டு ஏமாற்றம் அடைகிறார்.
அவர்கள் அங்கு வராமல் போனதற்கான காரணத்தை அறியாதவராக துறைமுகத்தை விட்டு குடும்ப சகிதம் வெளியே வருகிறார்.
அவர் தங்க நினைத்த ஹோட்டலுக்கு போக டாக்ஸி வண்டியை நிறுத்த முயற்சிக்கும் பொழுது எந்த வண்டியும் நிறுத்தாமல் போனது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு என்ன நடந்தது? எனக் கேள்வி எழுகிறது.
கொஞ்சத் தூரம் நடந்து வந்தபோது கறுப்பின மக்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு நிகழும் ஆர்ப்பாட்டங்களைக் காண்கிறார். தன்னையும் கறுப்பின நீக்ரோவாக எண்ணி விடுவார்களோ (அவர் தோல் கறுப்பாக இருப்பதனால்) என்ற பயமும் சந்தேகமும் அவருக்கு எற்படுகிறது. அந்த பயத்துடனும் சந்தேகத்துடன் தங்க நினைத்த ஹோட்டலுக்கு வருகிறார்.
அந்த ஹோட்டல் வாசலில் நின்ற வெள்ளைக்கார பணியாள் அவரை வெளியே தூரத்தி வாசலில் வைத்திருக்கும் அறிப்பு பலகையை காட்டுகிறார். அதில் பின்வருமாறு எழுதி இருப்பதை வாசித்தார்.
“நாய்களும் கறுத்தவர்களும் இந்த ஹோட்டலுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்”
அந்த காலத் தொடக்கம் மேலைநாடுகளில் கறுப்பின மக்களை வெறுத்தொதுக்கும் இயக்கத்தின், மனோபாவத்தின் நீட்சியாக, தோல் நிற அரசியலின் அடிப்படையிலும், சமூக பொருளாதார, கலாசார வேறுபாடுகளின் காரணமாகவும் ஆசிய, குறிப்பாக கீழைத்தேய மக்களை வெறுத்தொதுக்கும் இயக்கம் தோன்றும் என்பதை தீர்க்கதரிசனமாகப் பேசி. இருப்பார், 1958ஆம் ஆண்டில் ஜீவாவால் எழதப்பட்ட ‘காலத்தால் சாகாதது’ ‘தீர்க்கதரிசி” ‘ ஆகிய இரு பிரதிகள் குறிப்பிடத்தக்க பிரதிகளாகும்
மேமன்கவி