ஜனாதிபதியின் கொள்கைகள் நாட்டுக்கு ஒத்துவராத காரணத்தினால்தான் நாம் விலகினோம்.
நீங்கள் இன்னனும் இளைஞர்தான். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நீங்கள் அவசரப்பட்டு விட்டதாக நினைத்ததுண்டா?
இது கட்சியில் உள்ள சிலரை பாதிக்கிறது. வயது முதிர்ந்தவர் வந்தால், வயதாகிவிட்டது என்கிறார்கள். ஒரு இளைஞன் வந்தால், அவன் மிகவும் சிறியவன் என்பார்கள். உலகில் வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் எமது வயதைக் கொண்ட இளைஞர்கள்தான் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டிருக்கின்றார்கள். வயதைப் பார்ப்பதை விட, யாரால் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும், யார் அரசியல் கட்டமைப்பிற்குள் திறன் கொண்டவர்கள் என்பதையே பார்க்க வேண்டும். அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கான அனுபவம் எனக்கு உண்டு.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உங்களுக்கு உள்ள உங்களது திறமை மற்றும் தகுதியை குறிப்பிட்டால்…?
உண்மையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தீர்மானம் மேற்கொண்டது கட்சியே தவிர நானல்ல. நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். ஆரம்பத்தில் நாங்கள் யாரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற எண்ணத்தில்தான் இருந்தோம். பின்னர், கட்சியின் தேசிய அமைப்பாளரான என்னையே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கட்சி தீர்மானித்தது. எனவே தேசிய அமைப்பாளர் என்ற வகையில் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல பணிகளைச் செய்துள்ளேன். கட்சியின் பொறிமுறையையும் மஹிந்தவின் சிந்தனையையும் புரிந்து கொண்டு, இந்த விடயங்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை நான் சுமந்து கொண்டு தற்போது தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றேன்.
உங்கள் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றாததாலேயே நீங்கள் உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக பலர் கூறுகின்றனரே?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக் ஷக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றார் என்பதே அவருக்கு எதிராக இருந்த மிகப்பெரிய குற்றச்சாட்டாகும். எனவே இந்த வாதம் நியாயமானதல்ல. ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டிவிட்டு இப்போது அதை செய்யாததால் வெளியேறிவிட்டார்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசியதில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இருக்கவில்லை. அவரது கொள்கைகள் நாட்டுக்கு ஒத்து வராததாலேயே விலகிக் கொண்டோம்.
மொட்டுக் கட்சியிலிருந்து உடைந்த பொரும்பாலானோர் தற்போது தேசிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றதே?
பொதுஜன பெரமுனவின் தேசிய நலனை அடிப்படையாக கொண்டு குறுகிய காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த போது சிலர் அவ்வாறு சென்றிருக்கலாம். இன்று நான் அவ்வாறானவர்களை எம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
கட்சித் தாவல்களால் புள்ளடிகள் மாற்றமடையுமா?
கட்சி தாவுவதால் மக்களின் புள்ளடிகளில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. உயர்மட்ட தலைவர்களே கட்சித் தாவுகிறார்கள். எங்கள் கட்சி ஆதரவாளர்கள் எங்கள் கொள்கைகளுடனேயே இருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களை ஒன்று திரட்டிக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளனவா?
நானும் எங்கள் கட்சித் தலைவர்களும் இலங்கையின் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியைப் போலவே சஜித் பிரேமதாசவும் அரச ஊழியர்களின் சம்பளம் பற்றி பேசுகிறார். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்ததுள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சம்பள உயர்வு தொடர்பாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து விளக்குவீர்களா?
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பதவி வழங்கல்கள் இந்த அரசியல் மேடைகளில் மேற்கொள்ளக் கூடாதவை. பணவீக்கத்திற்கு அமைவாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அது அரசாங்கம் மாறும் போது செய்யப்படும் தேர்தல் வாக்குறுதியாக இருக்கக் கூடாது. இவற்றை நாம் எப்போதும் கண்டோம். அன்று வரிகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய அரசாங்கமே இன்று சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகின்றது. நான் இதற்கான சிஸ்டம் ஒன்றை உருவாக்குவேன்.
“உங்களுக்காக அபிவிருத்தியடைந்த நாடு” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு எவ்வாறு உரமளிக்கப் போகிறீர்கள்?
இந்த நாட்டில் கிராமிய வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான தேசிய வர்த்தகத்தைப் பலப்படுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, கூட்டுறவு மற்றும் கிராமிய வங்கிகள் மூலம், தொழில்முயற்சியாளர்களுக்கு நிதி வலிமையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எமது பூமியில் விளையக்கூடிய ஒவ்வொரு பயிரையும் விளைவிப்போம். மீனவர்களுக்கு சலுகைகளை வழங்கி பிடிக்கக்கூடிய அனைத்து மீன் வகைகளையும் பிடிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது. உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
கடுமையான வரிச் சுமையைக் குறைத்து, மூன்று வேளை உண்ணக்கூடிய விரைவான பொருளாதார நிவாரணம் வழங்கும் உங்களின் திட்டத்தைக் கூற முடியுமா?
முதலாவது விடயம் வரிகளைப் குறைப்பது. அரசின் வரி அல்லாத வருமானத்தை அதிகரிப்பதோடு, அது சமமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்க வருவாயை பாதிக்காமல் மக்களால் உணரக்கூடிய வகையிலான வரிச்சுமை கொண்டு வரப்படும். தங்களால் தாங்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு பொருளாதாரத்தை உருவாக்குவோம். மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். அதற்கு சோலாருக்கான வரிச்சுமையை குறைத்து அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். நாம் நிலையான அரசாங்கத்தை உருவாக்கும் அதேநேரம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்களை வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்காக உங்களிடம் பலமிக்க குழுக்கள் உள்ளனவா?
ஆம். நிறைந்த அனுபவம் கொண்ட தற்போது வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ள அனேகமானோர் எம்மோடு கைகோர்த்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலோடு நாம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் சேவைகளைத் துரிதப்படுத்தல் மற்றும் அரச பொறிமுறையினை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். இன்று அதிகமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது இந்நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமனாலேயே என்றால் அதற்கான காரணங்களைத் தேட வேண்டும். போட்டித் தன்மையுடனான சந்தை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழில் சந்தையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத மாகாணங்களில் தொழில்நுட்பத்தை இணைத்துக் கொண்டு தேவையான பாடசாலை கல்வித்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதாரண தரத்தின் பின்னர் ஆங்கிலக் கல்விக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். சாதாரண தரத்திற்குப் பின்னர் தொழில் பயிற்சிக்கு அல்லது தொழில்நுட்பப் பயிற்சிக்குச் செல்வதா அல்லது உயர் தரத்தின் ஊடாக பட்டப்படிப்புக்குச் செல்வதா என்பதைப் பற்றி தேடிப்பார்த்து அனைத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 100,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை விளக்குங்களேன்….?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் நாங்கள் ஐந்து தொழில்நுட்ப கிராமங்களை ஆரம்பித்தோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீட்டாளர்களைக் கவராத பல பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவதன் மூலம் நாட்டை பின்னோக்கி திருப்புவதற்கு தயாராகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
IMF இன் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் உங்கள் செயற்பாடுகளைக் கூறுங்களேன்…?
IMF என்பது ஒரேயொரு மாற்று வழி அல்ல. அதில் நல்ல விடயங்களும் இருக்கின்றன. அதேபோன்று எமக்குப் பொருத்தமில்லாத விடயங்களும் உள்ளன. IMF மாத்திரம்தான ஒரே மாற்று வழி என நினைத்துக் கொண்டிருப்பவர்களால் இந்நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. IMF இனால் அடிப்படையாகக் கூறப்படும் விடயம் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வதும், அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதுமாகும். உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் எந்த தடையும் இல்லை. தொழில்முனைவை ஊக்குவிக்க எந்த தடையும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையென்றால் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்த கட்டமைப்பிற்குள், எங்கள் திட்டத்தை எளிதாக பின்பற்ற முடியும். ஏதாவது பிரச்சினை என்றால் ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம்.
எம். எஸ். முஸப்பிர்