ஜனாதிபதி தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் உங்களால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?
ஆம். நிச்சயமாக வெற்றி பெறுவேன். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். தற்போது எமது தேர்தல் செயற்பாடுகள் பொது மக்களால் முன்னே கொண்டு செல்லப்படுகின்றது. சமீபகால வரலாற்றில் ஒரு அரசியல் முகாமை வெல்ல வைப்பதற்காக பொது மக்கள் திரண்டிருப்பதை நம் நாட்டில் முதன்முறையாகப் பார்க்கின்றோம். அளிக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பில் பாரிய வெற்றி கிடைத்துள்ளதாக எமக்கு தெரிய வருகின்றது. அதனைக் கருத்தில் கொண்டால் இந்த தேர்தலை எம்மால் வெற்றி பெறலாம். எனவே நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியும்.
நீங்கள் ஜனாதிபதியானால், புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையின் அமைப்பு மற்றும் எண்ணிக்கை எவ்வாறிருக்கும்?
பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாம் அமைக்கும் அரசாங்கத்தில், அதிகபட்சமாக 25 அமைச்சரவை அமைச்சர்களையும் அதற்குரிய எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்களையும் மாத்திரமே நாங்கள் நியமிக்க எதிர்பார்க்கின்றோம். இராஜாங்க அமைச்சர் எனப்படும் பதவிகள் இருக்காது. அமைச்சுப் பதவிகளுக்கு அரசியலமைப்பில் வரம்பு இருப்பதால், அந்த வரம்பை மீறும் வகையில் இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் பங்கேற்பதைத் தவிர மற்ற அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கத்தின் கீழ் அந்த அமைச்சுப் பதவிகள் நீக்கப்படும்.
நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அமைச்சரவை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் ஏற்படும்தானே?
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன் இந்த அமைச்சரவை உடனடியாக கலைக்கப்பட வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். அமைச்சரவை தொடர்பில் எந்தப் பிரச்சினையும் எழப்போவதில்லை. பொதுத் தேர்தல் நடக்கும் வரையான இடைக்காலத்திற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பின்பற்றப்படக் கூடிய மூன்று நடவடிக்கைகள் உள்ளன. எனது வெற்றியின் பின்னர் வெற்றிடமாகும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமித்து நான்கு பேர் கொண்ட அமைச்சரவை அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்படும். அவ்வாறில்லாவிட்டால் அனைத்து துறைகளையும் ஜனாதிபதியின் கீழ் வைத்துக் கொண்டு குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது. அது அரசியலமைப்புக்கு உட்பட்டது. அல்லது, தேர்தல் முடியும் வரை மற்ற கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் காபந்து அரசாங்கம் தொடரலாம். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒன்றைக் கொண்டு நாட்டை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது, பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் எதுவுமில்லை. இவ்வாறான நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலுக்கான பணத்தை எவ்வாறு விரைவாக ஏற்பாடு செய்ய முடியும்?
தேர்தல் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் ஒரு போதும் எழப்போவதில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நேரத்திலும், பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளீர்கள். எவ்வாறான தேர்தல் முறையை கொண்டு வர எதிர்பார்க்கிறீர்கள்?
பாராளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் கடந்த காலங்களில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், தற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையில் சில சித்தாந்தங்கள் உள்ளன. சிறிய மக்கள் பலத்தைக் கொண்டவர்களும் கூட தமது கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுபோலவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேசியம் சார்ந்த அரசியல் இயக்கங்கள் இன்னும் உள்ளன. இந்த முறையின் கீழ் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கும் உள்ளது. எனவே, புதிய தேர்தல் முறையைத் தயாரிக்கும் போது எங்களுடைய அடிப்படை விடயமாக இருப்பது அனைத்துக் கருத்துக்களையும் கொண்ட மக்களின் விருப்பத்தை நியாயமான முறையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.
நீங்கள் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா? இதற்கு முன்னர் பல ஜனாதிபதி வேட்பாளர்களால் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும் ஆட்சிக்கு வந்த பிறகு அது நிறைவேற்றப்படவில்லை. இவ்விடயத்தில் நாங்கள் உங்களை எவ்வாறு நம்புவது?
ஆம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் அது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே இருந்து வருகின்றோம். இந்த யோசனையை எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கியிருக்கின்றோம். எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவது தேர்தல் முறையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்திருப்பதனால் அதனை ஒழிக்க முடியும் என்றாலும், நாம் எதிர்நோக்கும் சவால் என்னவென்றால் அதனுடன் இணைந்திருக்கும் தேர்தல் முறை தொடர்பான பிரச்சினையாகும். எனவே அது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர முடிந்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவோம்._
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் சில சில விடயங்களில் மாற்றம் செய்ய முற்பட்டால் ஒட்டுமொத்த வேலைத்திட்டமும் தகர்ந்துவிடும் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதில் உங்கள் கருத்து என்ன?
இந்தக் கருத்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கருத்தே தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து அல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பல சந்தர்ப்பங்களில் மாற்றப்பட்டுள்ளமைக்கான உதாரணங்கள் உலக நாடுகளில் ஏராளமாக உள்ளன. அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ள பல அளவுருக்கள் நாட்டிற்கு சாதகமானவை என்றாலும், அந்த அளவுருக்கள் வழியாக செல்லும் பாதை மக்களுக்கு துன்பத்தை வழங்குகின்றது என்றால் அந்த துன்பத்தைக் குறைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய பாதை எது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே நாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களிலிருந்து தன்னிச்சையாக விலகப்போவதில்லை. அதேபோன்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் கொண்டிருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இவை அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவை. உண்மையில், சர்வதேச நாணய நிதியத்துடன் வருங்காலங்களில் இணைந்து செயற்படப் போவது மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கமேயாகும். சர்வதேச நாணய நிதியம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற விரும்புகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் விதிமுறைகளை மாற்ற முடியாது எனவும், அது தொடர்பான ஐந்து சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
தாம் போட்ட முடிச்சுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என அரசு நினைக்கிறது. அது தவறு. என்றென்றும் ஆட்சியில் நிரந்தரமாக இருக்க முடியாது. இந்த இரு தரப்பினரின் பொய்களையும் மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். எனவே சட்டமூலங்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் மாற்றங்களுக்கு உட்பட்டன என்பது பற்றி உலகில் தேவையான உதாரணங்கள் உள்ளன. உலகில் எதுவும் நிலையானது இல்லை. ஒவ்வொரு நிபந்தனையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட முடியும். இந்த ஜனாதிபதி மற்றும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கருத்தை விட மக்களின் ஆணை மிகவும் வலுவானது. மக்கள் ஆணை குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றே நாம் கூறி வருகிறோம்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என நீங்கள் அறிவித்துள்ளீர்கள். ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?
நமது நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலைப் பற்றி மக்கள் கொண்டுள்ள மிகக் கேவலமான, மோசமான எண்ணத்தின் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை தேவை. நாடு பெரும் பாதாளத்தில் விழுந்திருக்கும் போது அரசியல்வாதிகள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் அவர்களின் சலுகைகளை மேலும் அதிகரித்துக் கொள்வதேதான். தற்போது வாகன இறக்குமதி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தங்களின் சிறப்புரிமைகளை பெற போராடுகின்றனர். அது எவ்வளவு அசிங்கமானது? அதேபோன்று கடந்த காலங்களில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்திலேயே எம்.பி.க்களின் எரிபொருள் கொடுப்பனவு ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கப்பட்டது. அந்த உதவித்தொகையை எடுக்காத ஒரே நாடாளுமன்றக் குழு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு மட்டுமேயாகும். நாம் மக்களுக்காக தொடர்ந்தும் தியாகங்களைச் செய்ய தயாராகவே உள்ளோம்.
எம். எஸ். முஸப்பிர்