எதிர்வரும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையொட்டி இலங்கை மூத்தோர்கள் கிரிக்கெட் சங்கத்தினால் முதல் முறையாக மூத்தோர்கள் கிரிக்கெட் தொடர் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாஸ்டர்ஸ் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகப் பிரிவாக செயற்படும் இலங்கை மூத்தோர்கள் கிரிக்கெட் சங்கம் இலங்கையில் உள்ள 40 வயதுக்கு மேற்கட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது முத்தோர்கள் கிரிக்கெட் விளையாடும் 10க்கும் மேற்பட்ட கழகங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் சங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கையில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இதனையொட்டில் இலங்கை அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பொருட்டு 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான 40 ஓவர் கொண்ட கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாஸ்டர் அணி உட்பட மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் நேற்று (ஓகஸ்ட் 31) ஆரம்பமானது. லீக் முறையில் நடைபெறும் இந்தத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதில் அரச சேவை கிரிக்கெட் அணி, வர்த்தக சேவை அணியும் பங்கேற்கின்றன. இரத்மலானை–தேசிய சேவை மைதானம், கொழும்பு–புளூம்பீல்ட் மைதானம், பீ. சரா ஓவல் மைதானம் மற்றும் மத்தேகொட, இராணுவ மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பில் விளக்கும் ஊடக சந்திப்பு ஒன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.