மும்முனைப் போட்டியாக மாறியிருக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் பிரதான வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் முன்வைக்கப்பட்டு அவை தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுநோய் சூழல் அதன் பின்னர் பொருளாதாரப் பாதிப்பு எனத் தொடர்ச்சியான பின்னடைவுகளைத் தொடர்ந்து தற்போது முகங்கொடுக்கும் தேர்தல் என்பதால் உள்நாடு மாத்திரமன்றி வெளிநாட்டின் பார்வையும் இலங்கை மீது குவிந்துள்ளது.
பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தமது விஞ்ஞாபனங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ள போதும், அவற்றின் நடைமுறைச் சாத்தியம் குறித்த கேள்விகள் காணப்படுகின்றன. நாடு எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென்றாலும், அந்த நிலைமையைப் போக்குவதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளின் சாத்தியக்கூறுகள் தொடர்பில் சந்தேகமே காணப்படுகின்றது.
பிரதான வேட்பாளர்களில் ஒருவரான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளில் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், அமைச்சரவையை 25 ஆக மட்டுப்படுத்தல் உள்ளிட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை அக்கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான பிரச்சினையில், ஒவ்வொரு அரச நிறுவனங்களினதும் மூலோபாய ரீதியில் பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் அவற்றை மதிப்பிட வேண்டிய தேவை பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான பெறுமதி சேர் வரியைக் குறைப்பது மற்றும் வருமான வரியை அதிகரிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகள் என்பனவற்றை அதில் காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் முன்வைத்திருக்கும் இந்த யோசனைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை சர்வசேத நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதால் இதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது தெளிவாக இல்லை.
ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான 05 வருடங்கள்:
சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான 05 வருடங்கள்’ என்ற தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. ‘தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025 இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை ஆகிய ஐந்து பிரதான தலைப்புகளின் கீழ் இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்னெடுத்த செயற்றிட்டங்களின் நீட்சியாகத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருப்பது தெளிவாகப் புலனாகின்றது.
மக்கள் அன்றாடம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையான வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான யோசனைகள், அரசாங்க ஊழியர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான யோசனைகள், மறைமுக வரிகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கான யோசனைகள், அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்தல், இளையோருக்கு மேலும் தொழில்வாய்ப்புக்கள் எனப் பல்வேறு யோசனைகளையும் முன்மொழிவுகளையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டுள்ளது.
விவசாயிகளை வலுப்படுத்தும் வகையில், உரம் அல்லது இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடப்படுவதோடு, போகத்திற்கு போகம் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறிய மீன்பிடி படகுகள் முதல் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் வரை, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு சலுகை ரீதியிலான பொறிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்,
2025 ஆம் ஆண்டுக்குள் மீன்பிடி நகரங்களைச் சார்ந்து முறையான குடியிருப்பு மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மீன்பிடி நகரங்கள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தனது விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 2035 ஆம் ஆண்டாகும்போது, தற்போதைய வருடாந்த பால் உற்பத்தியை 380 மில்லியன் லீற்றரிலிருந்து 820 மில்லியன் லீற்றராக அதிகரிப்பதுடன், 2035 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் தற்போதைய வருமானம் 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையாக அதிகரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது நோக்கமாக அமைந்துள்ளது. இதுபோன்று பல்வேறு துறைகள் குறித்தும் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை:
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாட்டை மீட்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும் திட்டங்களின் விஸ்தரிப்பாக ஜனாதிபதியின் முன்மொழிவுகள் காணப்படுகின்றபோதும், எதிர்க்கட்சிகளின் யோசனைகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பது பொருளாதார நிபுணர்களால் எழுப்பப்படும் கேள்வியாகவும் உள்ளது.
தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். பொருளாதாரத்தை அதன் அசைக்க முடியாத ஸ்திரத்தன்மைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு அவசியமானது. இந்த மறுசீரமைப்புக்கள் குறுகிய காலத்தில் வேதனையளிக்கும் என்றாலும், நீண்ட காலதாமதமான சீர்திருத்தங்களை செயற்படுத்த அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்பும் பொருளாதாரத்தை நிலையான மற்றும் விரிவான வளர்ச்சியின் பாதையை நோக்கி வழிநடத்த முக்கியமானது.
அத்தகைய முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எந்தவொரு அரசியல் அல்லது சமூக நிச்சயமற்ற தன்மை அல்லது கடின முயற்சிகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் தலைகீழ் மாற்றமானது, மறுசீரமைப்பு செயல்முறைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் போக்கை மாற்றும் மற்றும் பொருளாதாரத்தில் மாற்ற முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியிருந்தார்.
மத்திய வங்கியின் ஆளுநரின் இந்த எச்சரிக்கையை நாம் இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. நாடு நெருக்கடியான காலத்துக்கு முகங்கொடுத்திருந்தபோது சவாலைப் பொறுப்பேற்றிருந்த அவர், அரசியல்வாதிகளுக்கு நேருக்கு நேர் பதில் வழங்கக் கூடிய ஒருவராவார். அவ்வாறானதொருவரின் எச்சரிக்கையை இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது.
மீண்டும் நாடு பொருளாதார நெருக்கடிக்குச் சென்று மீண்டும் வரிசையில் நிற்கும் நாட்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நடைமுறைச் சாத்தியமான முறையிலுமான தீர்வுத் திட்டங்களே தற்பொழுது அவசியம்.
இதனைவிடுத்து, மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கும் அரசியலையோ அல்லது நடைமுறைச்சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்கேனும் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் கிடைத்திருக்கும் இந்தச் சூழல் தொடர்ந்தும் நீடித்து மீண்டும் பழைய நிலைக்குச் செல்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே வாக்காளர்கள் ஆகிய நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் விஞ்ஞாபனம்:
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘சகலருக்கும் வெற்றி’ என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் மகாசங்கத்தினருக்குக் கையளிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 04ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் நீண்டகால நிலைத்தன்மைக்காக, இலங்கையின் ஓய்வூதிய முறையை முற்றிலும் மறுசீரமைத்தல், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அரச துறையை மேம்படுத்தல், வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு போன்ற தலைப்புக்களின் கீழ் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு இவர்கள் முன்வைத்திருக்கும் தீர்வுகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானவை என்பது பற்றி ஆய்வாளர்கள் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஒப்பீட்டளவில் நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டவராக ஜனாதிபதியே காணப்படுகின்றார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை நாட்டிலுள்ள மக்கள் உணரத் தொடங்கியிருப்பதுடன், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் உணர்ந்து கொண்டிருப்பதாலேயே ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.