Home » 1500 கி.மீற்றர் தூரத்தை கால்நடையாக பயணித்த சாதனை வீரன் சஹ்மி சஹீத்

1500 கி.மீற்றர் தூரத்தை கால்நடையாக பயணித்த சாதனை வீரன் சஹ்மி சஹீத்

பேருவளையில் நாளை மகத்தான வரவேற்பு

by Damith Pushpika
August 25, 2024 6:10 am 0 comment

பேருவளை பகுதியிலுள்ள எலந்தகொடை என்ற முஸ்லிம் கிராமத்தில் வறிய குடும்பமொன்றில் பிறந்து, தற்போது 25 வயதை எட்டியுள்ள இளைஞன்தான் இன்று இலங்கையில் மாத்திரமன்றி கடல் கடந்த நாடுகளில்கூட பேசுபொருளாக மாறியுள்ள இளம் சாதனை வீரன் இளைஞன் சஹ்மி சஹீத்.

இலங்கை வரலாற்றில் ஏதாவதொரு திறமையை வெளிப்படுத்தி வரலாற்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் நீண்ட எதிர்பார்ப்போடு இருந்த சஹ்மி சஹீதுக்கு, கடந்த ஜூலை 13 ஆம் திகதி அதிர்ஷ்டம் அடித்தது.

பேருவளை மஹகொடை ஐ.எல்.எம். சம்சுதீன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், மர்ஹூம் மொஹமட் சஹீத், பாத்திமா நூர்ஜஹான் தம்பதிகளின் புதல்வராவார். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞன். எட்டுப்பேர் கொண்ட குடும்பத்தில் நான்காமவர். சஹ்மி தனது 11ஆவது வயதில் தகப்பனை இழந்தார்.

கால்நடையாக இலங்கையை சுற்றிவர தனக்கு ஆசையிருப்பதாக இவர் அறிவித்தபோது, இது நடக்கக்கூடிய காரியமா? இந்த இளைஞனால் இது சாத்தியமாகுமா என சிலர் விமர்சித்தனர்.

இவ் இளைஞனின் வேண்டுகோளையேற்று உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் பூரண அனுசரணை வழங்க முன்வந்தவர் ஸிமி ஹோல்டிங்ஸ் மற்றும் பிக் ஸிடி குறூப் முகாமைத்துவ பணிப்பாளர் தொழிலதிபர் இஜ்லான் யூசுப். கடந்த மாதம் ஜூலை 13ஆம் திகதி பேருவளை, காலி வீதியிலுள்ள ஸிமி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்பாக பொதுமக்கள் புடைசூழ தொழிலதிபர் இஜ்லான் யூசுப் எமது நாட்டின் தேசிய கொடியை வழங்கி இளைஞன் சஹ்மியின் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

பேருவளையிலிருந்து ஆரம்பமான சஹ்மியின் கால்நடை பயணம் அளுத்கம வழியாக பெந்தோட்டை, பலபிட்டிய, வழியாக காலி, வெலிகம, மாத்தறை, அம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம, அதன்பிறகு கிழக்கு மாகாணம் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு அதன் பிறகு வட மாகாணத்தை நோக்கி தொடர்ந்தது.

இவ்வாறாக கால்நடையாக பயணித்த சஹ்மி சஹீதுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.

மூவின மக்களும் தாம் இலங்கையர்கள் என்ற வகையில் எவ்வித பேதமுமின்றி அந்தந்த நகரங்களில், மாவட்டங்களில், ஊர்களில் சஹ்மிக்கு மகத்தான வரவேற்பை வழங்கியதோடு பரிசுகளையும் வழங்கி உற்சாகமளித்தனர்.

இவ்வாறு கால்நடையாக கரையோர பிரதேசங்களை சுற்றிவருகின்ற இளைஞன் சஹ்மி யாழ்ப்பாணம் வரை சென்று தற்போது கொழும்பை நோக்கி கால்நடையாக திரும்பி கொண்டிருக்கிறார். இன்றைய தினம் (25) மாலை இவர் கொழும்பை வந்தடைவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு கொழும்பில் மகத்தான வரவேற்பும் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, இலங்கையின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய 1500 கிலோ மீற்றர் தூரத்தையும் 50 நாட்களில் கடக்க முடியும் என்றபோதிலும் இவர் 43ஆவது நாளில் இன்று கொழும்பை வந்தடையவுள்ளார்.

நாளைய தினம் (26) பயணத்தை ஆரம்பித்த, தனது சொந்த ஊரான பேருவளையை வந்தடையவுள்ள சஹ்மி சஹீதுக்கு பேருவளை நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளது.

பேருவளை, சீனன்கோட்டை, மருதானை, மஹகொடை, மொல்லியமலை, எலந்தகொடை, மக்கொன, தர்கா நகர் போன்ற பகுதிகளில் சாதனை வீரர் சஹ்மி சஹீதுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

சாதனை வீரன் சஹ்மி சஹீதுக்கு நாளை (26) மாலை பேருவளை பீச் திடலில் தொழிலதிபர் இஜ்லான் யூசுப் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் நப்ஹான் சஹாப்தீன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.

(அஜ்வாத் பாஸி)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division