முஸ்லிம் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி, ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் வாக்களிக்க கூடாது. ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் யார் பக்கம் இருந்தாலும், முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது, “இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அரசியலில் ஈடுபடும் கட்சித் தலைமைகள், குறுகியகால இலாபங்களுக்காக சமூகத்தை அடமானம் வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தை பலி கொடுத்து, முஸ்லிம் தலைவர்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முற்படக்கூடாது.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறது. கட்சியின் தீர்மானத்துடனேயே நானும் இருக்கிறேன். என்றாலும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுடன் இருந்தாலும், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றனர். இது முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களின் ‘இரட்டை வேடம்’ நிலைப்பாட்டை கொண்ட கொள்கையாகும்.
அதனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஜனாதிபதி தேர்தலில் ‘ரணில் – சஜித்’ என்று யாருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தாலும், முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பார்த்து தீர்மானிக்காமல், சுயமாக சிந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பொருத்தமானவர் யார்’ என்பதை தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்.
அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத்தை பலி கொடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவளிக்க முற்படக்கூடாது.
அவர்கள் தங்களுக்கு தேவையான அமைச்சுப் பதவிகளை பேரம் பேசிக்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சமூகத்தை காட்டி யாருக்கும் ஆதரவளிக்க முற்படக்கூடாது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், இனவாதத்தை பரப்பியே தேர்தலில் வெற்றி பெற்றது. கோவிட் காலத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை இல்லாமலாக்கியது. அதனால் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், அந்த தரப்புக்கு நான் ஆதரவளிக்கப் போவதில்லை.
ராஜபக்ஷவினருடன் இருந்தவர்கள், தற்போது ரணில் விக்கிரமசிங்க பக்கமும் இருக்கிறார்கள். அதேபோன்று, சஜித் பிரேமதாச பக்கமும் இருக்கிறார்கள். அதனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பாமல், ‘யாருக்கு வாக்களிப்பது’ என்பதை சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்” என்றார்.