‘எமது விஷேட விருந்தாளியான இஸ்மாயீல் ஹனியேவை தெஹ்ரானில் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும். அது ஈரான் இஸ்லாமிய குடியரசின் கடமை’ என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யத் அலி காமெனெய் அறிவித்தததைத் தொடர்ந்து உருவான போர்ப்பதற்றம் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெஸஷ்கியானின் பதவியேற்பு வைபவத்தில் விஷேட விருந்தாளியாகக் கலந்து கொண்டிருந்த ஹமாஸின் தலைவரான பலஸ்தீனின் முன்னாள் பிரதமர் இஸ்மாயீல் ஹனியேவும் அவரது மெய்ப்பாதுகாவலரும் தெஹ்ரானில் கடந்த ஜுலை 31 ஆம் திகதி அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடும் கோபமடைந்த ஈரானிய ஆன்மீகத் தலைவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
‘இப்படுகொலையின் ஊடாக எமது இறையாண்மையும் சர்வதேச சட்டங்களும் மீறப்பட்டுள்ளன. எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை எமக்குள்ளது. அதற்கு ஏற்ப இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும்’ என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஹனியே கொல்லப்பட்ட அதே தினத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் இரண்டாவது தளபதி புவார்ட் சுஹுரும் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் பெய்ரூட்டில் கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் இஸ்ரேலுக்கும் ஈரான், ஹிஸ்புல்லாஹ் தரப்பினருக்கும் இடையில் எந்த வேளையிலும் போர் மூளும் உச்சகட்ட பதற்றம் உருவாகியுள்ளது. ஈரானின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு அமெரிக்கா முழு அளவிலான ஆதரவு, ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது.
ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் இஸ்ரேலை எப்போது தாக்கும்? எங்கு தாக்கும்? எப்படித் தாக்கும்? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. ஈரானின் தாக்குதல் எந்த வேளையிலும் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.
இஸ்மாயீல் ஹனியே ஜுலை 31 ஆம் திகதி கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் தாக்குதல் அவரது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட கடந்த 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அது இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமை கடந்ததும் சனி, ஞாயிறு தினங்களில் தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடக்கும் என உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டிருந்தது. அமெரிக்க, இஸ்ரேலிய புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஈரானின் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியான போதிலும், அவை உண்மையாகவில்லை. இத்தாக்குதல் தொடர்பான ஈரானின் நகர்வுகள் புலனாய்வாளர்களின் ஆருடங்களைப் பொய்ப்பித்துள்ளன.
இந்நிலையில் ஈரான், ஹிஸ்புல்லாஹ்வின் தாக்குதல்கள் இரண்டு அலைகளாக அமையலாமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ள அதேநேரம், 12ஆம், 13 ஆம் திகதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படலாமென ‘ஸ்கை நியூஸ்’ உள்ளிட்ட மேற்கத்தைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல் குறித்து உச்சகட்ட பரப்பு நிலவிவரும் சூழலில் ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹுஸைன் சலாமி, ‘உரிய நேரகாலத்தில் உயரிய இடத்தில் தாக்குதல் நடத்தப்படும்’ என்றுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு ஏற்பாடுகள்:
ஈரானின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக இஸ்ரேலிய அமைச்சர்கள் பதுங்கு குழிகளில் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் செய்மதி தொலைபேசி வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு நிலக்கீழ் வைத்தியசாலைகளின் வசதிகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யுத்தம் ஏற்படுமாயின் வடக்கு இஸ்ரேலில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வடபகுதி மேயர்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய நாளிதழான எடியோத் அஹ்ரநோத் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில் ஹிஸ்புல்லாஹ்வுடன் முழு அளவிலான போர் ஏற்படுமாயின் வடக்கு பிரதேசங்களில் இருந்த வெளியேறும் மக்களை தங்கவைக்கவென தெற்கு இஸ்ரேலின் ரமட்நெகௌ பிராந்தியத்தில் கூடார நகரம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
‘த டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘முழு அளவிலான யுத்தம் மூளுமாயின் சில நகரங்களில் மூன்று நாள் மின்வெட்டு ஏற்படக்கூடும். நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படலாம். எட்டு மணிநேரம் வரை தொலைபேசிகள் இயங்காதிருக்கலாம். 24 மணிநேரம் வரை செல்போன் தொடர்புகள் துண்டிக்கப்படலாம். வானொலி மற்றும் இணையத்திற்கான உள்ளூர் இடையூறுகள் ஏற்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலுக்கு முழு அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை நல்கிவரும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்ரின், ‘இஸ்ரேலை இரும்புவேலி கொண்டு பாதுகாப்போம்’ என்றுள்ளார். அத்தோடு இஸ்ரேலுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் இராணுவ தளபாடங்களை மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா அனுப்பும்’ என்று அறிவித்தது. அதற்கேற்ப அமெரிக்க யுத்தக்கப்பல்களும் யுத்த விமானங்களும் அவசர அவசரமாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு வான்வெளியில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களும் அமெரிக்க படைவீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிக்கும் வகையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தளபதி ஜெனரல் மைக்கல் எரிக் குரில்லா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த திங்களன்று விஜயம் செய்ய அதே சூழலில் ரஷ்யாவின் பாதுகாப்பு முன்னாள் அமைச்சரும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான செர்ஜீ சொய்கு ஈரானுக்கு விஜயம் செய்து ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு உயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.
போர் தவிர்ப்புக்கான இராஜதந்திர முயற்சிகள்:
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கடந்த 04 ஆம் திகதி தொலைபேசி ஊடாக அவசர மாநாடொன்றை நடாத்தியுள்ளார். இம்மாநாட்டின் போது இத்தாலி வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி, மோதல் நிலையை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
அத்தோடு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘காஸாவுக்கான யுத்தநிறுத்த உடன்படிக்கையை நிறைவு செய்து பணயக்கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியோடு பலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் துரிதப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டிள்ளது.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், யுத்தத்தை விரிவுபடுத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், மத்திய கிழக்கில் உருவாகியுள்ள யுத்த பதற்றத்தைத் தணிப்பதன் அவசியம் குறித்து கட்டார், எகிப்து, ஜோர்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
ஜோர்தான் மன்னர் அப்துல்லா எகிப்து, பிரான்ஸ், கனடா மற்றும் இத்தாலியின் தலைவர்களுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு, மத்திய கிழக்கின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிவிலியன்கள் பாதிக்கப்படாத வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தாக்குதல்களை முன்னெடுக்குமாறு ரஷ்யா ஈரானைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஏற்பாடு செய்யப்படும் யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தையில் தவறாது பங்கேற்குமாறு இஸ்ரேலையும் ஹமாஸையும் வலியுறுத்தி அமெரிக்காவும் கட்டாரும் எகிப்தும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
வான் பரப்பை தவிர்த்த விமானங்கள்:
இத்தகைய உச்ச யுத்தப் பரபரப்புக்கு மத்தியில் லெபனான், இஸ்ரேல், ஈரானுக்கான விமான சேவைகளை உலகின் பல நாடுகளும் நிறுத்தியுள்ளதோடு லெபனான், இஸ்ரேல், ஈரான், சிரிய வான்பரப்பை பெரும்பாலான விமானங்கள் தவிர்த்துக் கொண்டுள்ளளன.
லெபனானில் இருந்து எல்லா நாடுகளும் தமது பிரஜைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதோடு, அங்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. சுவீடன், பிரித்தானியா போன்ற நாடுகள் தம் தூதரகங்களை கூட மூடிவிட்டு வெளியேறியுள்ளன. கனடா இஸ்ரேலுக்கான தமது இராஜதந்திரிகளை ஜோர்தானுக்கு நகர்த்தியுள்ளது.
ஹனியே கொல்லப்பட்டதும் உருவான இப்பரபரப்புக்கு மத்தியில் ஈரான், லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவடையத் தொடங்கின. அதன் விளைவாக உருவாகியுள்ள பதற்றத்தின் பின்புலத்தில் கடந்த திங்களன்று ஜப்பானின் பங்குச்சந்தை 1987 ஆம் ஆண்டுக்கு பிறகு பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இதேபோன்று அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட எல்லா நாடுகளது பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்தப் பதற்றத்துக்கு மத்தியிலும் காஸா மீதான தாக்குதலையோ தென் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் குறைத்ததாக இல்லை. இந்நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்ற ஈரான், தாக்குதலை தாமதப்படுத்தி வருவது ஒரு வகையில் ஈரானின் ஒரு உளவியல் போராகக்கூட இருக்கலாம் என்கின்றனர் போரியல் நிபுணர்கள்.
மர்லின் மரிக்கார்