ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அடிக்கடி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்து அரசாங்க பணியாளர்களின் பெருமளவு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ரயில்வே பணியாளர்கள், கிராமசேவகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அடிக்கடி ஈடுபட்டு வருவதால், மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அடையாள வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டமாக இருந்தாலும் சரி இதனால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள், தாதியர்கள் போன்ற சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களினால், எதிர்காலத்திற்கான நுழைவாயில்களான, தேசிய தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
இறுதியில், தொழிற்சங்க கோரிக்கைகள் சில சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் மாணவர்களின் எதிர்காலம், நோயாளிகளின் உயிர்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் இல்லாமலுள்ளது. தொழிற்சங்க உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் உரிமைகள் இதற்காக சமரசம் செய்யப்படக் கூடாது. தொழிலாளர்கள் மற்றும் மக்கள் நலன்களுக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்த வேண்டும்; இல்லையெனில், அது நாட்டைச் சீர்குலைக்கும்.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் விடயத்திலும் இதே கொள்கை பின்பற்றப்பட வேண்டும். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பது தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதம் என்ற நிலைமை மாறி அரசியல் உள்நோக்கங்களைக் கொண்ட செயற்பாடாக உருவெடுத்துள்ளன. பெரும்பாலும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்ததாக மாறியுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.
உதாரணமாகக் கூறுவதாயின் ஆசிரியர் தொழிற்சங்கமொன்று ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படுவது தெரியவந்துள்ளது. அந்தச் சூழலில், வேலைநிறுத்த நடவடிக்கைகள் முற்றிலும் தொழிலாளர்களின் நலன்கள் கருதி உந்தப்படுவதில்லை.
பக்கச்சார்பற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று இலங்கையில் அரிதாகவே காணப்படுகின்றன. உழைக்கும் வர்க்க உணர்வு காணப்படவில்லை. இந்த தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் சாதாரண அரச ஊழியர்கள் தமது அரசியல் எஜமானர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றனர்.
ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில், யதார்த்தத்தை அலட்சியமாகப் புறக்கணித்து அரசியல் பின்னணி கொண்ட நோக்கங்களுக்கான வேலைநிறுத்தங்களைச் செய்கின்றனர்.
அரசாங்கத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்ற வேலைநிறுத்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைச் செலவுகள் நிச்சயமாக அதிகமாகவே இருக்கின்றன. அரசாங்கத்துறை ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் என அனைவரும், அன்றாட வாழ்வில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இருப்பினும், உலகம் முழுவதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தடையற்ற சந்தை பொருளாதார மாதிரியில், பொருட்களின் விலைகளைக் குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை. மாறாக, மக்களின் வருமான ஆதாரங்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இதனால் கிடைக்கும் விலைகள் கட்டுபடியாகின்றன.
வேலைநிறுத்தப் போராட்டத்தை வலியுறுத்தும் தொழிற்சங்கங்கள் 20,000 ரூபா சம்பள உயர்வைக் கோருகின்றன. இருந்தபோதும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் நிலையில் அரசாங்கமும், திறைசேரியும் உள்ளனவா என்பது பற்றிய சிந்தனை இல்லை.
மக்கள் மற்றும் வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வருமானம் ஈட்டப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்டங்கள் மற்றும் பலவற்றுக்கான வருவாய் இதன் மூலமே கிடைக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு பிரிவினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினால் இதனால் நாட்டில் மற்றொரு பிரிவினரைச் சமரசம் செய்ய வேண்டி ஏற்படும்.
தொழிற்சங்கங்கள் 20,000 ரூபா சம்பள உயர்வைக் கோரியே வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. இதனை நிறைவேற்றுவதாயின் அரசாங்கத்திற்கு 275 பில்லியன் ரூபா அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு வீதம் இந்தச் சம்பள உயர்வுக்குத் தேவைப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செலவினத்தை ஈடுசெய்ய நிதி ரீதியில் பல மாற்றங்களைச் செயற்படுத்த வேண்டி ஏற்படும். வற் வரியை 4 சதவீதம் அதிகரித்து, அதை ஏறத்தாழ 22 சதவீதமாக உயர்த்துவது அல்லது பெருநிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 42 சதவீதமாக உயர்த்துவது ஒரு சாத்தியமான அணுகுமுறையாக இருக்கும்.
இத்தகைய அதிகரிப்பு பொருளாதாரத்தை மேலும் சிரமப்படுத்தலாம், அது மாத்திரமன்றி, இதனால் வரவுசெலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை அதிகரிக்கப்படும். இதன் ஊடாக கடன்மறுசீரமைப்பு முயற்சிகள் பாதிக்கப்படலாம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரளச் செய்யப்படலாம். 2022ஆம் ஆண்டில் அனுபவித்த மற்றுமொரு கடுமையான பொருளாதார சிக்கலுக்கு மீண்டும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டங்களினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மாத்திரமன்றி, நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. உதாரணமாகக் கூறுவதாயின், ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாதிக்கப்படும்போது அதனால் இலங்கைக்குக் கிடைக்கும் அந்நியச்செலாவணியும் குறைவடைந்து பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.
கடந்த புதன்கிழமை ரயில்வே தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக ரயிலில் சன நெரிசலில் முண்டியடித்துப் பயணிகள் செல்ல முயற்சிக்கும்போது விபத்துக்களும் ஏற்பட்டன. ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிழுந்து உயிரிழந்தார். இதற்கு முன்னர் ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தின் போதும் இவ்வாறு பயணி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
எனவே, தொழிற்சங்கப் போராட்டங்களினால் ஏற்படுகின்ற பாதிப்பு அவ்வாவிப் பொதுமக்களையே தாக்குகின்றது.
இந்தத் தொழிற்சங்கப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதில் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் அதேநேரம், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இவற்றினால் ஏற்படும் தாக்கம் புரிவதில்லை. அரசியல் கட்சிகள் மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் இருந்து இதுபோன்ற போராட்டங்களுக்காகத் திசைதிருப்புகின்றன.
தொழிற்சங்கத் தலைவர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் முழுநேர தொழிற்சங்கவாதிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் பணிக்குச் செல்வதைவிட தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதையே முழுநேரப் பணியாகக் கொண்டுள்ளனர்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு படிப்படியாக மீண்டுவரும் சூழ்நிலையில், இவ்வாறான தொழிற்சங்கப் போராட்டங்கள் காரணமாக நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவதற்கான ஆபத்துகள் பற்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற அரசியல் பின்னணி கொண்ட தொழிற்சங்கப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டக் கட்டமைப்புக்களைக் கொண்டுவருவது பற்றிய கருத்தாடல்களும் அதிகரித்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வேலைநிறுத்த அலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான பொருத்தமான சட்டங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொறுப்பு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கு மையமான சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அமைச்சரவையின் கருத்தாக இருந்தது என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான சாத்தியம் குறித்து சட்டமா அதிபர் தமக்கு அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைநிறுத்தங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய நேரத்தில், வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அடிப்படை மனிதத் தேவைகளைப் பாதிக்கும் வேலைநிறுத்தங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கடந்த காலத்தை விட இன்று மிகவும் உணரப்பட்ட தேவையாக உள்ளது.
தேர்தலில் ஆதாயம் பெறுவதை மனதில் கொண்டு மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடும் சில அரசியல் அமைப்புகளின் உத்தரவின் பேரில் வேலைநிறுத்தக்காரர்கள் மக்களின் கோபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்த விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் மற்றும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட சட்டம் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களில் மூழ்கி, சுற்றிலும் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதுபோன்ற வேலைநிறுத்தத்தை தூண்டும் அரசியல் கட்சிகளுக்கும் சட்டம் பொருந்தும். இதுவரை, வேலைநிறுத்தங்களைத் தடுக்க அதிகாரிகளால் எப்போதும் முத்திரை குத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணை, விரும்பிய பலனைத் தரத் தவறிவிட்டது.
ஏனென்றால், அடுத்த முறை வேலைநிறுத்தம் செய்யும் வரை குற்றவாளிகள் தங்கள் வேலைகளில் தொடர்ந்து இருப்பதன் மூலம் அத்தியாவசிய சேவைகள் நடைமுறைக்கு வரவில்லை. இந்தத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள்தான் இந்த நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.