இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் காலஞ்சென்ற தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் இறுதிக் கிரியை அன்னாரின் சொந்த இடமான திருகோணமலையில் இன்று நடைபெறுகின்றது. இரா. சம்பந்தன் அவர்களின் மறைவானது இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேசமெங்கும் பெரும் துயர உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து அன்னாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்துகுவிந்த செய்திகள், அன்னாரின் இழப்பின் பாதிப்பை வெளிப்படுத்துகின்றன.
இலங்கைத் தமிழர் அரசியலில் நிரப்ப முடியாத இடைவெளியொன்றை இரா. சம்பந்தன் அவர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருப்பது தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு ஆகும். அன்னார் தமது அறிவு, அனுபவம், ஆளுமை காரணமாகவே தமிழர் அரசியலில் இத்தனை காலமும் நிகரற்ற தலைவராகத் திகழ்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.
சம்பந்தன் அவர்கள் ஐக்கிய இலங்கையை நேசித்த ஒரு தலைவர் ஆவார்.
அவர் பிரிவினையை ஒருபோதுமே ஆதரித்ததில்லை. பிரிவினை கோரும் கருத்துகளை எக்காலத்திலும், எவ்விடத்திலும் வெளிப்படுத்தியதுமில்லை. ஐக்கிய இலங்கைக்குள், அனைத்துத் தரப்பினரின் இணக்கப்பாட்டுடனான அரசியல் அதிகாரங்கள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே இறுதிக்காலம் வரை அவரது கொள்கையாக இருந்தது.
அவர் தனது கொள்கைகளை பெரும்பான்மையின அரசியல் தலைவர்களுக்கு வெளிப்படையாகவே எடுத்துரைத்தார். அன்னார் தீவிரவாதத்தை ஒருபோதுமே ஆதரித்ததில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த வேளையிலும், ஐக்கிய இலங்கைக்குள்ளான அரசியல் தீர்வையே வலியுறுத்தியவர் சம்பந்தன் அவர்கள்.
அதேபோன்று வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் விடயத்திலும் அன்னார் தெளிவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டே பெரும்பான்மை சமூகத்திடமிருந்து அரசியல் தீர்வை வென்றெடுக்க வேண்டுமென்பதே அவரது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.
இனபேதங்களைத் துரும்பாகப் பயன்படுத்தி தனது அரசியல் செல்வாக்ைக அதிகரித்துக் கொள்கின்ற மூன்றாந்தர பாதையை இரா. சம்பந்தன் அவர்கள் ஒருபோதுமே நாடியதில்லை. அவர் எக்காலத்திலும் இனஐக்கியத்தை வலியுறுத்தும் அரசியல் தலைவராகவே வாழ்ந்தார்.
அரசியலில் சுயநலமும், அநாகரிகமும் நிறைந்துள்ள இன்றைய காலத்தில், சம்பந்தன் போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவராவர். அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த தேசத்துக்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.