“எமது மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுத் தரும் பொறுப்பை, சர்வதேச சமூகத்திடம் நாம் ஒப்படைக்க போவதில்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, அவற்றுக்காக பேரம் பேசுவது ஆகியவற்றை தேர்தல்களில் எமது மக்கள் வழங்கும் மக்கள் ஆணையினால் கிடைக்கும் எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராட்டங்களையும் முன்னெடுத்து பெற்றுக் கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாம் பெறுகின்ற இந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென்மேலும் செழுமைப்படுத்த அவசியமான அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில்நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவப்பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது இந்த நிலைப்பாடு, எமக்கு மட்டும் சாதகமானது அல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் “தொல்லை இல்லாமல்” சாதகமானது என நான் மிக தெளிவாக நேற்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்தேன்.
அதையே நேற்று முன்தினம் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரே இடமும் கூறினேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.